Please let me know the rules for a Yogam who one follows!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா?
பதில்:
நிச்சயமாக இருக்கிறது. ஆனால் இப்போது நம்மிடையே இருக்கும் அறிவிலிகள் சொல்லுவது போன்ற சட்ட திட்டங்கள், வரைமுறைகள் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. யோகத்தில் இணைவதற்கே பல ஆண்டுக்காலம் ஆகும் என்பது நடைமுறையில் இருந்தது. அதுவும் குருவின் ஆசி என்ற கடைக்கண் பார்வையும் வேண்டும் என்பார்கள். பிறந்தபொழுதே யோகத்தில் சிறக்க அமைப்பு இருந்தாலும்கூட உடனடியாக இணைய வாய்ப்பில்லை.
காலமாற்றத்தில், அஷ்டாங்க யோக சூத்திரத்தை, பதஞ்சலி முனிவர் வகுத்துவைத்தார். ஒரு குருவை அணுகி யோகத்தில் இணைந்து உயர்வது போலவே, தானக்குதானாகவும் இந்த அஷ்டாங்க யோக சூத்திரத்தை கடைபிடித்தால், யோகத்தில் உயரலாம் என்பது உண்மையாகிற்று. எனினும் கூட, தீட்சை என்ற குண்டலினி உயர்த்துதல் என்பதை, யாருமே தானாக கற்றிட முடியாது. அப்படி தானாக கற்றிட பல முறைகள் உண்டு என்றாலும் கூட, உயர்ந்த குண்டலினி பலவித உடல், மன, உயிர், வாழ்க்கை பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது தவிர்க்கமுடியாதது. இதனால் நிச்சயமாக குரு வேண்டும்.
இந்த பதஞ்சலி முனிவரின், அஷ்டாங்க யோக சூத்திரத்தை கவனித்தால், அதில் அடிப்படையான சில பாடங்களும் வழிமுறைகளும் இருப்பதை காணலாம். இயமம் என்ற தன்னை திருத்திக் கொள்ளும் சட்டமும், நியமம் என்ற யோகத்திற்காக தான் ஏற்றுக்கொள்ளும் சட்டமும் கடைபிடிப்பது அவசியமாகிறது. அதற்கான பிறகுதான் ஆசனம் என்ற உடற்பயிற்சியை கற்று உடலை, மனதை வளமும், திடமும் செய்துகொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது.
இதை நீங்கள் கவனித்தால், இயமம், நியமம் இந்த இரண்டிலேயே முழுமையாக, அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு யோகி, யோகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொண்டு, அதன்படி வாழவும் தன்னை மாற்றிக்கொண்டு விடுகிறார். அப்படியான நிலை இருக்கும் பொழுது, பொதுவாழ்வில் இருக்கின்ற அறிவிலிகள் அப்படி, இப்படி என்று இல்லாத சட்டங்களை சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது என்னென்ன என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இங்கே அதைச்சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எனவே யோகத்தில் ஒருவர் இணைந்துவிட்டால் அதற்கான சட்டம் இருக்கிறது. இதுவழிவழியாக தொடரப்பட்டும் வருகிறது என்பதே உண்மை.
வாழ்க வளமுடன்.

 
