When my turn come to me from the god, divine and supreme almighty?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நான் வேண்டியது, வேண்டுவது எனக்கு தெய்வீகம், மெய்ப்பொருள், கடவுள், இறையாற்றல் எப்போது வழங்கும்?
பதில்:
குரு மகான் வேதாத்திரி மகரிஷி இதற்கு நல்ல பதில் தந்துவிட்டார் எனினும், அதை அன்பர்கள் புரிந்துகொள்வதில் தயக்கமும், ஏமாற்றமும் அடைகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்கிறேன். ‘இறையாற்றல் நமக்குத் தேவையான எல்லாம் தந்துவிட்டுத்தான் நம்மை பரிணாமத்தில் உச்சத்தில் அமைத்திருக்கிறது’ என்று வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். மேலும் நாம் குழந்தையாக இருக்கும்பொழுது, நம் பசியாற்றிட தாய்ப்பாலையும், கவனமாக போற்றி பாதுகாப்பளிக்க தாயையும், அவருக்கு துணையாகவும், குழந்தைக்கு துணையாக தந்தையையும் தந்திருக்கிறது அல்லவா?! பெற்றோர்களாகிய அவர்களே நம்மை வளர்த்து ஆளாக்கிடவும், சமூகத்தில் ஒருவராக அமைக்கவும் உதவுகிறார்கள். மூன்று வயதிற்குப்பிறகுதானே நமக்கே நாம் யார் என்பதும் தெரிகிறது?! உண்மைதானே?
சரி, இப்போழுது உங்கள் கேள்விக்கு வருவோம். வேண்டியது, வேண்டுவது என்றால் என்னென்ன என்று ஒரு பட்டியல் இட்டால் அதில் என்னென்ன இருக்கும்? என்று எழுதிப்பாருங்கள். எல்லாமே இயற்கைக்கும், இறைக்கும் அப்பாற்பட்டதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
முதலில் வேண்டியது என்று எடுத்துக்கொண்டால், அது எப்போது வேண்டினீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வேண்டுதல் நிறைவேறிட, அதற்கென்று ஒரு காலம் வரவேண்டுமே?! சென்னையில் இருந்து டெல்லிக்குக்குப் போக பயண நேரம் (விமானத்தில்) மூன்று மணி நேரம் ஆகும். இல்லை நான் ஒருமணி நேரத்தில் அங்கே இருக்கவேண்டும், நினைத்த உடனே அங்கே இருக்கவேண்டும் என்று நாம் சொல்லிவிட முடியுமா? அது சாத்தியமா? இங்கே விமானம், அதன் செயல்பாடு, விமானி, அவரின் அனுபவம், கால சூழல், வான்வெளி போக்குவரத்து தெளிவு, கட்டுப்பாட்டு அறை தொடர்பு, உங்கள் நேரம், காலம், சூழ்நிலை, தேவை... அப்படி இப்படி என்று எத்தனை இருக்கிறது? இதெல்லாம் சரியாக இருந்தால்தானே பயணம் அந்த மூன்று மணி நேரம் அமையும்? இதற்கு நாம் ஒத்துழைக்கத்தான் வேண்டும், காத்திருக்கத்தான் வேண்டும் அல்லவா?
அதுபோலவே நம் வேண்டுதலுக்கும், அது வேண்டியது, வேண்டுவது என்று இருந்தாலும் அதற்கென்ற காத்திருப்போடு இருக்க பழகவேண்டும். மேலும் நிச்சயமாக உங்களுக்கு எது வேண்டுமோ அதையே, அதைமட்டுமே வேண்டியும் பழகவேண்டும். அதுதான் உங்களுக்கு வழங்கப்படும். அதை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். இறையாற்றல், தெய்வீகம், கடவுள் என்றுமே வழங்குவதில் குறையே வைப்பதில்லை. நாம் வேண்டுவதில் இருக்கிற குறைகள்தான் நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்துகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.