Practice of Vethathiriya simplified exercise for life! | CJ

Practice of Vethathiriya simplified exercise for life!

Practice of Vethathiriya simplified exercise for life!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியை எவ்வளவு காலம் தொடர்ந்து செய்யவேண்டும்?


பதில்:

இதற்கு சரியான பதில் தரவேண்டுமென்றால், எவ்வளவு காலம் நீங்கள் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நாள் வரையிலும் தொடர்ந்து செய்துதான் ஆகவேண்டும். இந்த கேள்வி, தற்கால அவசர உலகில் எழுவது சகஜமானதுதான். ஏனென்றால் நமக்கு எப்போதும் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று எதையும் தவிர்ப்பதுதானே வழக்கம். உடலுக்கு என்ன குறை? ஏதேனும் வந்தால் சரி செய்து கொள்ளலாம். இருக்கவே இருக்கிறது நிறைய மருத்துவமனை, நிறைய உடனடி பலன் அளிக்கும் மருந்துகள். பற்றாக்குறை இல்லாமல் பணமும் இருக்கிறது, அப்புறம் என்ன கவலை? என்றுதான் மனம் எண்ணுகிறது!

ஒரு நாளுக்கு, 24 மணி நேரம், அதில் தூக்கத்திற்கு, குறை நிறையை கூட்டி கழித்து பார்த்தால் 8 மணி நேரம். எனவே மிச்சம் இருப்பது 16 மணி நேரம், இதில் வேலை நேரம், மாணவர்களுக்கு படிப்பு நேரம், பெண்களுக்கு ஒரு நாள் சமையல் நேரம் 8 மணி நேரமோ, 10 மணி நேரமோ ஆகலாம். ஆக கையிருப்பு 8 மணி நேரம். இந்த 8 நேரத்தில், ஏதேனும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், சுறுசுறுப்பாக இருக்கலாம். நன்றாக உடல் உற்சாகதில் இயங்கலாம். மிகச்சரியாக தூங்கி எழலாம். அதனால் தூக்க நேரம் அதிகப்படுத்தாமல் மிச்சப்படுத்தலாம். எப்படிப்பார்த்தாலும் 2 மணி நேரம் உங்களுக்கு, ஒரு நாளில் கிடைக்குமே?! அந்த பயனை நாம் இழக்கலாமா?

ஒரு நாளுக்கு, 40 நிமிடம் முதல் 60 நிமிடங்களுக்குள் செய்து முடித்துவிட க்கூடிய, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்வதற்கு என்ன குறை இருந்துவிட முடியும்? ஏற்கனவே அது எளியமுறை என்ற அமைப்பில்தான் இருக்கிறது, மேலும் எளியமுறை என்று செய்யாமல் விட்டுவிடலாம் என்றா எண்ணுகிறீர்கள்?! உடலில் நோய் வராமல், பாதுகாப்பு தன்மையோடு, வலி, சதை பிடிப்பு பிரச்சனை எழாமல், உடல் உள் உறுப்புக்களுக்கு ஊக்கம் அளித்து காக்கும் இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி. மேலும் உடலுக்கு, அதன் தன்மைக்கு பாதுகாப்பு அளிக்கும் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்த ஓட்டம் ஆகியன சீராக இயங்கிடும் நிலைக்கு மாற்றியமைக்கும். இதனால் நோய் வருமுன் காக்கக்கூடிய தன்மை உடலுக்கு கிடைத்துவிடுகிறது.

நீங்கள் கேட்ட இந்த கேள்வியை, வேதாத்திரி மகரிஷியிடமே, ஒரு பேராசியர் கேட்ட பொழுது, ‘நான் இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறேன், மகராசனம் செய்வதுதான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது’ என்று தன்னுடைய 80, 90 வயது காலங்களில் பதிலாக சொல்லியிருக்கிறார்.

எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்துத் தந்த வேதாத்திரி மகரிஷியே அவ்வளவு காலமாக செய்துவரும் பொழுது, கற்றுக்கொண்ட நமக்கு என்ன? தொடர்ந்து செய்யலாம். வேறெந்த குழப்பமான சிந்தனையும் இல்லாமல்,  எளியமுறை உடற்பயிற்சியை தினமும் தொடருங்கள்.

வாழ்க வளமுடன்.