How long the Master's help we need? After completion anyway we request more! | CJ

How long the Master's help we need? After completion anyway we request more!

How long the Master's help we need? After completion anyway we request more!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோக குருவின் உதவி எவ்வளவு காலம் தேவைப்படும்? எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை இருக்கிறதே?!


பதில்:

எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை எழுவது உண்மைதான். என்றாலும் கூட, தன்னை இந்த வான்காந்தத்தில் கலக்க விட்டுக்கொண்ட பிறகு நாம் அப்படி நினைப்பது சரிதானா? என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம். மனதின் இயல்பு என்னவென்றால், இழப்பை பதிவு செய்துகொண்டு அவ்வப்பொழுது வருந்துவதுதான். ஆனால் குண்டலினி யோகம் பயிலும், மனவளக்கலை அன்பராகிய நாம் அதை மாற்றி அமைக்கவும் வேண்டும். 

ஒரு யோக குருவின் உதவி, எல்லாம் கற்கும் வரை தேவைதான். அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். கைபிடித்து அழைத்து வந்து இதுதான் பாதை, என்று காட்டிவிட்டால், பயணம் போகவேண்டியது நாம் தானே? இனி எந்த பயணத்தில் தயக்கம் எதற்கு? நாம் என்ன நினைக்கிறோம் என்றால், இந்த பாதையில் ஏதேனும் குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது? எனக்கு அதெல்லாம் தெரியாதே? என்று நினைக்கிறோம். தன்னையறியும் வழியிலும், இறையுணர்வு பெறும் வழியிலும் எப்படி குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வரலாம் என்று நம்புகிறீர்கள் அல்லது நினைக்கிறீர்கள்? இது சரிதானா?

அப்படியே வந்தாலும் கூட, நம்முடைய குரு கைவிட்டுவிட்டாரே என்றா நினைப்பீர்கள்? அதற்கும் வழி இல்லையே? எனவே இது நீங்களாகவே உருவகப்படுத்திக் கொண்ட சிந்தனைதானே தவிர ஏதும் உண்மையில்லை. முக்கியமாக நம்முடைய குரு, நம் உயிரோடு கலந்துவிட்டதை நீங்கள் மறக்கலாமா?

நம் ஒருவரை மட்டுமே, இறுதிவரை உயர்த்திதர வேண்டும் என்பதும் முறையாகுமா? குருவின் நோக்கமும், செயலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், உய்யவேண்டும் என்பதல்லவா? அதற்கு நாம் தடையாக நினைக்கலாமா? அவரை துணையாக நினைத்துக்கொண்டு, அவரைப் போற்றி வணங்கிக் கொண்டு, பயணித்துகொண்டே இருப்பதுதான் நம்முடை வேலை. அதுதான் நம்முடைய குருவுக்கு முழுமை தருவதாகும், முடிந்தால் நீங்கள் இன்னொருவரையும் உயர்த்துங்கள். வேறு எந்தவித குறையும் வேண்டாம், தொடர்ந்து பயணியுங்கள். உண்மை உணருங்கள்.

வாழ்க வளமுடன்.