What is the reply for someone not accept the Mahalaya Amavasya and all truths? | CJ

What is the reply for someone not accept the Mahalaya Amavasya and all truths?

What is the reply for someone not accept the Mahalaya Amavasya and all truths?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த நவீன அணுயுக அறிவியல் முன்னேற்ற காலங்களிலும் மஹாளய அமாவாசை, கிரகணம் அது இது என்று சலித்துக்கொள்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? 


பதில்:

நான் என்னுடைய பதிலாக சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏற்கனவே இருக்கிற உண்மைகளை பதிலாக இங்கே அறியத்தருவதுதான் என்னுடைய வேலை. நான் புதிதாக ஆராய்ந்து பார்த்து சொல்லும்படி எதுவுமே இல்லை. எல்லாவற்றிற்கும் முறையான விளக்கங்களை தந்து, மிச்சம் வைக்காமல் முடித்துவிட்டார்கள். வேண்டுமானால், உங்களிடம் அப்படி சலித்துக் கொண்டார் அல்லவா? அவர் பரிசோதனை செய்து பார்த்து, உண்மை விளக்கம் பெறட்டுமே?!

இப்படி சலித்துக் கொண்டவர்களுக்கு, முதலில் சொல்லவேண்டியது Science என்றால் அறிவியல் (அறிவு+இயல்) அல்ல. விஞ்ஞானம் (விண்+ஞானம்) தான். Science என்பதை அறிவியல் என்று தவறாக மொழியாக்கம் செய்துவிட்டார்கள் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார்.  அந்த நபர், உங்கள் நண்பரா என்பது எனக்குத்தெரியாது. இதை படிப்பாரா என்பதும் எனக்கு தெரியாது. எனினும், அவரைப்பொறுத்தவரை...

1) கடவுள் இல்லை 2) தெய்வ நம்பிக்கை மூட நம்பிக்கை 3) முன்னோர்கள் சொன்னது எல்லாமெ பொய் 4) வானியலை உள்ளடக்கிய ஜோதிடம் பொய் 5) ஜாதகமும் பொய் 6) அமாவாசை பௌர்ணமியும் பொய் 6) சந்திர சூரிய கிரகணமும் பொய் 7) ராகு கேது நிழல் கிரகமும் பொய் 8) உயிர் பொய் 9) ஆத்மா ஆன்மா பொய் 10) வழிபாடு பொய்... இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த பிரபஞ்சம், பேராற்றல் மற்றும் பேரறறிவு கொண்ட ‘தெய்வீகத்தால்’ தன்மாற்றம் அடைந்ததாகும். தன்னை மிஞ்சிய, தனக்கு மேலான, கண்களால் காணாத, புலன்களால், கருவிகளால் அறியமுடியாத, மனதால் பகுத்துணர முடியாத, காலம், தூரம், பருமன், வேகம் இவற்றில் சிக்காத அந்த தெய்வீகத்தை ‘இறைவன், கடவுள், தெய்வம், மெய்ப்பொருள்’ என்று அழைத்து வணங்குவதில் என்ன தவறு? 

பயிற்சியின் வழியாக அந்த தெய்வீகத்தை உணர யோகமும், வாழும் வாழ்வில் சராசரி மனிதர்கள் அறிய பக்தியும், அறிவில் உயர்ந்தோர்கள் தான் கொண்டுவந்தனர். அதை சிலர் உண்மையை தடுத்து குழப்பம் செய்துவிட்டனர். அதை மாற்றிடாமல் மொத்தமாகவே தவறு, இல்லை என்றால் எப்படி?! 

ஒருவரிடம், உன்னுடைய 10 வது தலைமுறைக்கு குழந்தையே இல்லை என்று சொன்னால் அது உண்மையாகுமா? அது உண்மை என்றால், அந்த ஒருவர் இப்போது இருக்கமுடியுமா? இப்படித்தான் அறியாது எள்ளி நகையாடுகின்றனர். இதற்கு அவர்கள் அறிந்த அறிவியலின் (?!) துணைவேறு.

மனிதனின் பிறப்பு இறப்பும் சாராசரி சிந்தனையில் சிக்கிடாது. கேள்வி கேட்டவருடை அறிவியலும் கைவிரித்துத்தான் நிற்கிறது. பிறப்புக்கு முன்னம் என்ன இருந்தது? இறப்புக்குப் பிறகு என்ன நடக்கிறது? என்பதும் அங்கே இல்லை. அதில் இருக்கின்ற உண்மையை, தன்னை அறிதலின் வழியாகவும், இறையுணர்வு பெற்றதன் வழியாகவும், சித்தர்கள், யோகியர்கள், மகான்கள், ஞானியர்கள் தந்த விளக்கம்தான் நாம் பெற்றிருக்கிற தகவல்கள். இதில் ஒன்றோடு ஒன்றாக சில தவறுகள் இணைக்கபட்டிருக்கலாம். ஆனால் உண்மை அதில் உள்ளதுதானே?

எப்போதுமே தனக்குத் தெரிந்ததை இடைச்சொருகலாக சொல்லுவது மனிதனின் பண்பு. அது காதுவழியாக கடத்தப்பட்டாலும், எழுத்தால் எழுதப்பட்டாலும் மாறிடவே செய்யும். ஏனென்றால் தன்னுடைய புரிதலும், அனுபவங்களும் அந்த உண்மையான வார்த்தைகளையும், அர்த்தங்களையும் மாற்றிவிடும். அப்படி உண்மையில் சில பொய்மை கலந்துவிட்டிருக்கிறது. இன்றும் கூட சமூக வலைத்தளங்கள் வழியாக எண்ணற்ற பொய்கள் மிதக்கின்றன. அவற்றில் எது உண்மை என்று அறிவதும் நம் கடமையல்லவா?

இவ்வளவு விளக்கங்களும், இதற்கு மேலும் சொல்லி அவரை திருத்திட முயற்சிப்பது நமக்கு வேண்டாத வேலை. எனவே அவரை அவர்போக்கில் விட்டுவிடுங்கள். நீங்கள் அவருக்கான ஒரு வாழ்த்தை சொல்லிவிட்டு, நீங்கள் உங்களுக்கான உண்மை அறிதலில் இருங்கள். அவர் வழியை அவரே தீர்மானித்து செல்வார். அனுபவங்களை பெறுவார்.

மஹாளய அமாவாசை குறித்த விளக்கத்திற்கு இந்த சிறிய காணொளி உதவும்.

இங்கே காண்க

வாழ்க வளமுடன்.