யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னதான் யோகத்தில் இணைந்தாலும் பக்தி வழியை, பழக்கங்களை விட முடியவில்லையே?!
பதில்:
பக்தி என்பது நிச்சயமாக வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஒரு சிலருக்கு, பக்தியும், கடவுளும், வழிபாடும் அவசியம் இல்லை என்று முடிவுக்கு வரலாம். அவ்வாறே வாழ்ந்தும் வரலாம். அது அவரவர் விருப்பம். ஆனால் ஒரு சராசரி மனிதருக்கு பக்தி அவசியமே! முக்கியமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது, இந்த உலகுக்கான நல்ல பழக்க வழக்கங்களை, அக்குடும்பத்தின் பக்தி வழியில்தான் பெற்று வளர்ந்து வருகிறது. மிகச்சில குடும்பங்களில் அந்த பக்தியும் இல்லாது போவதும் உண்டு. அதாவது, பெற்றோருக்கு பக்தி இல்லை என்றால் அது குழந்தைக்கும் இல்லை என்றே வளர்ந்து வரும். இப்படியான குழந்தைகள் தான் பக்தியும் இல்லை, கடவுளும் இல்லை, வழிபாடும் தேவையில்லை என்ற நிலையில் வளர்ந்து நம்மோடும் வாழ்ந்து வருகிறார்கள்.
யோகத்திற்கு அடைப்படையே பக்தி தான். அந்த நோக்கத்தில்தான், அந்நாளில் முன்னோர்கள், பக்தியில் மக்கள் தங்களை உயர்த்திக்கொண்டால், யோகமும் எளிதாகும் என்று வழிபாடு முறைகளை அமைத்தார்கள். ஆனால் அது இந்நாளில் உண்மை சிதைந்துவிட்டது.
யோகத்தில் இணைகின்ற யாருமே, பக்தியை விட்டு விலகவேண்டியதில்லை. மாறாக அந்த பக்தியில் இருக்கிற உண்மை என்ன? என்பதை புரிந்துகொண்டால் போதும். இதுவரை எதை வணங்கினோம்? எதற்காக வணங்கினோம்? அது அந்த இறை என்பதும், கடவுள் என்பதும் என்ன? என்ற உண்மைகளை விளங்கிக் கொண்டால் போதுமானது. விளங்கிக் கொண்ட உண்மையின் வழியாக நீங்கள் பயணித்தால் போதுமேதவிர, பக்தியை தவிர்க்கவோ, விட்டு விலகிடவோ தேவையில்லை.
எனவே, பக்தியையும் யோகத்தையும் குழப்பிக்கொள்ளாமல். பக்தியில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தானாக மாற்றத்தை உருவாக்கித் தந்திடும்!
வாழ்க வளமுடன்.