Vethathiri Maharishi Simplified exercise, you and your health | CJ

Vethathiri Maharishi Simplified exercise, you and your health

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.