Get the Truth from the Bhakti | CJ

Get the Truth from the Bhakti

Get the Truth from the Bhakti


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு என்பதை ஏன் என்னால் ஏற்கமுடியவில்லை?


பதில்:

உங்கள் கேள்வியை வரவேற்கிறேன். உண்மையை விளக்கிக் கூறும் வாய்ப்பை இக்கேள்வி உருவாக்குகிறது. இனி பதிலை சிந்திப்போம்.

‘பக்தி என்பது சிறுபிள்ளைகட்கே' என்று ஒருகவிதையில் சொல்லப்பட்டது என்று நினைக்கிறேன். உடனடியாக அந்த கவிதையை என்னால் இங்கே ஞாபகப்படுத்தவோ, குறிப்பிடவோ முடியவில்லை, கேள்வி கேட்ட நீங்களே குறிப்பிட்டால் நலம். பொதுவாக, கவிதை என்பது, கரும்புச்சாறு போல பெரிய நீண்ட கரும்பை, கசக்கிப் பிழிந்து உருவாக்கிய சாறு. அதை நீங்கள் கரும்பாக நினைக்க முடியுமா? அதுபோலவே ‘பக்தி என்பது சிறுபிள்ளைக்கானது அது ஒரு விளையாட்டுப் போல' என்றால் அதற்கான காரணமும், விளக்கமும் ஆராயவேண்டும், சிந்திக்கவேண்டும் அல்லவா? அதெப்படி இந்தமாதிரி சொல்லலாம் என்று நினைக்கலாமா?

சரி சிறுபிள்ளை விளையாட்டு என்பது என்ன? நீங்கள் அந்த சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியது இல்லையா? ஞாபகமும் இல்லையா? ஆனால் இப்போதுள்ள சிறுபிள்ளைகளுக்கு படிக்கவும், வீட்டுப்பாடம் செய்யவுமே நேரமில்லை. இன்னும் சொல்லப்போனால், சாப்பிடக் கூட நேரமில்லை என்று வாழவைக்கப்பட்டிருக்கிறார்கள் நம் பெற்றோர்களாலும், சமூகத்தாலும், உலகத்தாலும்.

உதாரணமாக பார்க்கலாமே, சிறுபிள்ளைகள், ஆண் பெண் என்ற பேதமற்று பழகி விளையாடுவார்கள். அப்படியான அனுபவம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் வருத்தமே! அந்த விளையாட்டில் அம்மா, அப்பா, பிள்ளை, குடும்பம் என்ற விளையாட்டும் உண்டு. சாமியும், கோவிலும் கூட உண்டு. அப்படி அந்த குடும்பத்தில் அம்மா என்ற குழந்தை சமைக்கும், மற்றவர்கள் உண்டு மகிழ்வார்கள். அதாவது நெருப்பில்லாத சமையல், பொருளில்லாத சாப்பாடு. சிலவேளைகளில் அப்படி எதுவுமே இல்லாமல் நடிப்பார்கள் அவ்வளவுதான். இந்த சாப்பாடால் உங்கள் பசி ஆறுமா? இல்லை ஆனால் இது ஒரு அனுபவ விளையாட்டு. ஒரு பகிர்வு, அன்பு, நட்பு, பழக்கம் என்ற ரீதியில் அமைந்திருக்கும். உண்மையைப் போன்ற பொய். இதைத்தான் இப்போது மெய்நிகர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிறுபிள்ளை விளையாட்டு போலவேதான் நம்முடைய ‘பக்தி’ இருக்கிறது. அந்த பக்தியில் இருக்கின்ற, சொல்லப்பட்ட, மறைக்கப்பட்ட, மறைந்திருக்கிற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் பக்தியை கடந்து ‘யோகத்திற்கு’ வரவேண்டும். வந்தாகவேண்டும். 

இதைத்தான், இந்த விளக்கத்தைத்தான், கவிதையில் சுருக்கமாக ’பக்தி என்பது சிறுபிள்ளை விளையாட்டு’ என்று குறிப்பிடப்படுகிறது. இப்பொழுது உண்மை உங்களுக்கு விளக்கமாவிட்டதா?!

வாழ்க வளமுடன்.

குறிப்பு: இந்தப்பதிவில், பக்தியை குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் எண்ணினால் அது அறியாமையாகும்!