Method of realize the Divine by the words
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?
பதில்:
பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.
ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.
அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!
இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?
‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.
அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும்.
வாழ்க வளமுடன்.