Be alert in this external level of life okay, no need to yoga is correct?
மனம் என்ற விசயத்திலே சிக்காமல் புறவுலகில் விழிப்பாக இருந்தால் போதும் என்கிறார்களே?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனம் என்ற விசயத்திலே சிக்காமல் புறவுலகில் விழிப்பாக இருந்தால் போதும் என்கிறார்களே?
பதில்:
ஆம், அப்படியான பயிற்சி முறையும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இதுபோல பலவிதமான பயிற்சி முறைகள் உலகெங்கும், எண்ணற்ற நபர்களால், உங்களைப்போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கும், ஏனைய சராசரி மக்களுக்கும் பயிற்சி வழியாக சொல்லித் தரப்படுகிறது. இதெல்லாம், இக்காலத்தில் மட்டுமல்ல, அந்தக்காலத்தில் இருந்தே வரக்கூடிய நடைமுறைதான் என்பதை நினைவில் கொள்க.
ஒருவிதத்தில் இதையெல்லாம் குறை சொல்ல முடியாது. எனினும் எது நம்முடைய பாதை? எது நமக்கு பயணளிக்கும் பாதை? எது சிறந்தது? என்று அவரவரேதான் சிந்தித்து முடிவு செய்யவேண்டும். இது சிறப்பு அது சிறப்பு என்று யாராவது ஒருவர் சொன்னால், அவரை ஏமாற்றுக்காரர் என்று நீங்கள் கருதிவிட வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் எல்லோருமே தாங்கள் செல்லும் வழிதான் சிறந்தது என்றுதான் மற்றவர்களுக்குச் சொல்லுவார்கள். அதுதான் எங்கும் நடக்கிற நிகழ்வாகும்.
ஒரு வழக்கமான உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாமா? உங்கள் ஊரில் இருந்து, கேதார்நாத் செல்லவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த கேதார்நாத் ஊரில் இருக்கிற ஆலயம்தான், தன்னையறிதலின் முடிவு / நோக்கம் என்று உதாரணம் கொள்ளலாம். உங்கள் ஊரில் இருந்து இப்போது பயணிக்க வேண்டும். இது போல ஓவ்வொருவரும் பயணிக்க வேண்டும் என்றால்,
ஒருவர் கிழக்கே பயணிப்பார், ஒருவர் மேற்கே பயணிப்பார், ஒருவர் வடக்கே பயணிப்பார், ஒருவர் தெற்கே பயணிப்பார். ஒருவர் தவழ்ந்துவருவார், ஒருவர் நடந்து வருவார், ஒருவர் ஓடி வருவார், ஒருவர் சைக்கிளில் வருவார், ஒருவர், மோட்டார் பைக்கில் வருவார், ஒருவர் காரில் வருவார், ஒருவர் இரயிலில் வருவார், ஒருவர் விமானத்தில் வருவார், ஒருவர் ஹெலிகாப்டரில் வந்தும் இறங்குவார். இப்படியான ஓவ்வொன்றிலும் நோக்கம் ஒன்று, வழிகள் ஒன்று, பயணம் ஒன்று, ஆனால் பயண அனுபவம் மாறுபடும், காலம் மாறுபடும்.
இதில் எது சிறப்பு? என்று நீங்களே அறிவீர்கள் தானே? அவரவர்களுக்கு எது சாத்தியமோ, எந்த பயிற்சியை தேர்ந்தெடுத்தாரோ, யாரிடம் கற்றாரோ அதன்வழி, அந்த கற்றலின் வழி, தன்னையறிதலை நோக்கி பயணிக்கிறார் அவ்வளவுதான். இதில் அதுதான் சிறப்பு, இதுதான் சிறப்பு என்று ஏற்றியும் இறக்கியும் பேச வேண்டியதில்லை. உங்களுக்கு எது சரியானதோ அதை தேர்ந்தெடுத்து பயணியுங்கள். அது போதுமானது.
வாழ்க வளமுடன்.
-