Is there any the truth-realizer living today with us?
இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்களா?
பதில்:
இது என்ன விளையாட்டுத்தனமான கேள்வி?! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், சொல்லும்பொழுது, ‘இறைநிலை உணர்ந்தவர்கள், உலகெங்கிலும் உண்டு. ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்’என்கிறார். இதுதான் இந்த உலகில் எப்போதும் இருக்கின்ற நிலைமை.
நமக்குத்தெரிந்து, சில மகான், ஞானி, உண்மையறிந்தோர் குறிப்பிட்ட தோற்றத்திலும் இருப்பார்கள். உதாரணமாக, என்றுமே ஒழுங்குசெய்யாத தாடி, மீசை, வாறப்படாத தலை, சிக்கல்பிடித்த தலைமுடி, அழுக்கான பழைய ஆடைகள் என்பதாக இருப்பார்கள். ஒரு சிலர் நம் பார்வைக்கு, புத்திசுவாதினம் அற்றவராகவும் இருப்பார்கள். பேசவும் மாட்டார்கள், அவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக்கொண்டே நகர்வார்கள். சிலர் தன்னை சுதந்திரமாக வைத்துக்கொண்டு கிடைத்ததை, யாரேனும் தருவதை சாப்பிட்டு காலம் நகர்த்துவார்கள். அவர்கள் குறித்த உண்மை அறிந்தவர்கள் அவரையும் வணங்குவார்கள். இவர்களுக்கு கிடைக்கின்ற இந்த மதிப்பை அறிந்துதான், ‘போலிச்சாமியார்கள்’ உருவாகிறார்கள்.
தன்னுடைய யோக சாதனையில், தன்னையறிந்து, இறையுணர்ந்து, அதை மக்களுக்கும் சொல்லித்தந்து, அவர்களையும் உயர்த்திட வேண்டும் என்று நினைப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள்தான் குருவாக மலர்கிறார்கள். இவர்களைக்கூட போலி என்றே நீங்களும் மற்றவர்களும் நினைக்கத்தோன்றும். ஏனென்றால், பொதுவாகவே தன்னை அறிந்தவர்களுக்கும், இறையுணர்வு பெற்றவர்களுக்கும் எந்தஒரு அடையாளமும் இல்லை. அதை அவரவர் தன்னுடைய அறிவால்தான் அறிந்துகொள்ள முடியும். இங்கேதான் சிக்கல் உங்களுக்கும் மற்றவர்களுக்கும். உண்மை, பொய் என்பதை ஆராய்ந்துதான் கண்டுகொள்ள முடியும். வெளித்தோற்றத்தில் ஏமாறவும் கூடாது! அதே நிலையில் யாரையும் உதாசீனப்படுத்தவும் கூடாது. நீங்கள் உதாசீனம் செய்தவர் உண்மையான ஞானி, குரு என்ற நிலையில் இருக்கவும் முடியுமே?!
தன்னை அறிந்தவர்கள், இறையுணர்வு பெற்றவர்கள், இதை அவர்களே சொல்லவும் மாட்டார்கள். ஒருவர் தன்னை, ‘இறையுணர்வு பெற்றவன்’என்று சொல்லுகிறார் என்றால், நீங்கள் உடனே ‘அப்படியானால், இன்று மழைபெய்யுமா? வெயிலடிக்குமா? எனக்கு லட்ச ரூபாய் பணம் கிடைக்குமா? என்னை உடனே பணக்காரனாக மாற்ற முடியுமா?’ என்று தானே கேட்பீர்கள். ஒருவேளை இதற்கான பதிலை போலிச்சாமியார் தரமுடியும், எதற்காக? உங்களிமிருந்து பணம், பொருள் பறிப்பதற்காக!
எனவே முடிவாக, இந்தக்காலத்திலும் உண்மையாகவே இறைநிலை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள், அதை நீங்களேதான் தேடிக் கண்டு பிடிக்கவேண்டும்.
வாழ்க வளமுடன்.
-