I expect a lot of everything. When will I get it all?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நான் எல்லாமே நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். அது எல்லாமே எனக்கு எப்போது கிடைக்கும்?!
பதில்:
இந்த இயற்கையானது, அதன் மாபெரும் சக்தியானது, உங்களுக்குத் தேவையானதை நிச்சயமாக வழங்கும். அது உண்மை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், நீங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் தராது, கிடைக்காது. ஆனால், நீங்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. நிச்சயமாக நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்களுக்கு அதை பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கிறதா? என்று இந்த இயற்கையாற்றல் சோதனை செய்யும். அதன் வழியாக உங்களுக்கு என்ன தேவையோ, அதைமட்டுமே வழங்கத் தயாராகும்!
எனக்கு Law of Attraction, அது, இது, என்று எல்லாமே தெரியும்ங்க, எப்படியும் நான் கேட்டுப் பெறுவேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றுதானே சொல்லுவீர்கள். சரி, ஆனால் நான் உங்கள் ஆசையை நம்பிக்கை இழக்கச்செய்யவில்லை. ஆனால் புரிந்துகொள்ளுங்கள். எதன் வழியாக நீங்கள் எதிர்பார்த்தாலும் கூட , உங்களுக்கு எது தேவையோ அதுதான், வழங்கப்படுமேயன்றி வேறெதும் கிடைக்காது! வேதாத்திரியம் வழியாக நீங்கள் கற்றுக்கொண்ட, தனா ஆகர்ஷ்ண சங்கல்பம் செய்தாலும் கூட, நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் கிடைக்காது. உடனே இதெல்லாம் பொய்யா? ஏமாற்றுவேலையா? என்று எதிர்கேள்வி கேட்டுவிடக்கூடாது.
உங்களுக்கென்று வழங்கப்படுவது தாமதமானால், நீங்கள் கேட்டு வாங்குவது தவறில்லையே?! அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எதிர்பார்ப்பே வேண்டாம், அது ஏமாற்றத்தைத்தான் தரும் என்று உறுதிபட சொல்லுகிறார். தேவை என்பது வேறு, விருப்பம் என்பது வேறு, எதிர்பார்த்தல் என்பது வேறு, வேண்டும் என்பது வேறு. இப்படி நான்கு வகையாக சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தனியாக சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நீங்களே கொஞ்சம் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.
இந்த எதிர்பார்ப்பு ஏன் வருகிறது? தேவை என்பதை மீறி நினைக்கும் பொழுதுதான் வருகிறது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவையோ அதை மீறி ஏன் எதிர்பார்ப்பு என்றால், அதற்கு மிக எளிய காரணம், நீங்கள் வேறு யாரையோ உங்களோடு ஒப்பிடுகிறீர்கள். அந்த யாரோ போல உயரவேண்டும், அவரை விடவும் மேலாக உயரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் உங்களுடை தேவை என்பதை விட்டு விலகி, இவ்வளவு என்றோ, நிறைய நிறைய என்றோ எதிர்பார்க்கத் துவங்கிவிடுகிறீர்கள்.
இந்த ஏதிர்பார்ப்பதிலேயே நீங்கள் மனதை செலுத்தினால், மனதின் மகத்தான சக்தி வீணாகிவிடும். இருப்பதையும் இழக்கும்படியான வாழ்க்கை சிதறிவிடும். உங்கள் தேவைகள்கூட பறிபோகலாம். இதிலிருந்து விலக, அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து, உண்மையாகவே எனக்கு என்ன தேவை? என்று பட்டியலிட்டு அதை கேளுங்கள். கிடைக்கும்!
வாழ்க வளமுடன்.
-