How to correct the disturbances while practicing Kayakalpa Yoga?
காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?
பதில்:
வேதாத்திரிய காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகள், அதை புரிந்துகொள்ளாமல் செய்வதால்தான் வருகிறது. முக்கியமாக, இந்த பயிற்சியை யாரும் யாருக்கும் செய்துகாட்டி விளக்கமுடியாது. உள்முகமாக, உள்ளுணர்வாக செய்யக்கூடியது. ஒருவர் இந்த பயிற்சியை செய்கிறார் என்பதை, வெளிப்படையாக அறிந்துகொள்ளவும் முடியாது. பயிற்சியாளர், ஓஜஸ் மூச்சு வெளியிடும் பொழுதுதான், இவர் ஏதோ செய்கிறார் என்று பிறர் தெரிந்து கொள்வார்.
இதன் காரணமாகவே, ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை புரிந்துகொள்வது, பயிற்சி கற்றுக்கொள்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், பயிற்சி எங்கே கற்றுக்கொள்கிறீர்களோ, அந்த இடத்திலேயே, அந்த ஆசிரியரிடமே, உங்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு செய்துகொள்வதுதான் மிகச்சிறந்த வழி ஆகும். ஏதோ சொன்னார், எனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்றபடி கடந்துவிட்டால், நாம் வீட்டில் தனியாக செய்யும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்துவிடும். அதனால்தான் அந்த விளைவுகள் தவறாகிறது, நமக்கு தொந்தரவாகவும் இருக்கிறது. என்னதான் நீங்கள் பயிற்சியின் பொழுது குறிப்பு எடுத்துக்கொண்டு வந்தாலும், நேரடியாக கேள்வியில் கிடைக்கின்ற பதில்தான் சிறப்பாகும்.
முக்கியமாக, உங்களோடு பயிற்சி எடுத்த சிலரிடமோ, ஏற்கனவே பயிற்சி எடுத்து வந்திருக்கும் மற்றவரிடமோ உங்கள் சந்தேகத்தை கேட்டுக்கொள்ளக் கூடாது. அது உங்கள் குழப்பத்தை அதிகப்படுத்திவிடும் என்பதை அறிக. தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே உங்கள் குழப்பத்தை, சந்தேகத்தை, கேள்வியை கேட்க வேண்டியது அவசியம்.
பொதுவெளியில், இணையதளத்தில் எந்த சந்தேகத்தையும் யாரிடமும் கேட்க்கக்கூடாது. சிலர், நாம் படிப்பதற்கே அருவருப்பு அடைகிறவகையில், அப்படி, இப்படி என்று கேள்விகள் கேட்பதும் உண்டு. சிலர் பயிற்சியை கிண்டல் செய்யும் விதமாகவும் கேள்வி கேட்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம், அவர்கள் நல்லபடியாக வாழ்க என வாழ்த்தியும் விடுவோம். பொதுவெளியில் கேள்வி கேட்டால், பலவிதமான திசை திருப்பலுக்கு ஆளாகுவீர்கள். உங்களுக்கு அருகில் உள்ள, பயிற்சி மையத்தை அணுகி, அங்கே ஆசிரியரை கண்டு, நீங்கள் கற்றுக்கொண்ட காயகல்ப யோகப் பயிற்சி விபரங்களைச் சொல்லி, சந்தேகத்தை தெளிவு செய்துகொள்ளலாம். அதற்கான சான்றிதழையும் கையில் வைத்துக்கொண்டு போனால் நல்லதுதான்.
ஒருவேளை உங்களுக்கு அருகில், எந்த ஒரு பயிற்சி மையமும் இல்லை, நீங்களும் வெகுதூரத்தில் இருக்கிறீர்கள் என்றால், முக்கியமாக நீங்கள் கற்றுக்கொண்ட குழப்பம் தீரும் வரை, சந்தேகம் தெளிவு பெறும்வரை, காயகல்ப யோகப் பயிற்சியை செய்யாதீர்கள். அது ஒருவாரம், பத்துநாட்கள், ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை. கைபேசி, தொலைபேசி வழியாகவும் ஆசிரியரிடம் கேட்கலாம் எனினும் நேரில் கேட்டறிவதே நல்லது. சமீபகால ஜூம் வழியான சந்திப்பில் கேட்டாலும் பலன் உண்டுதான். எனவே அதற்குறிய வழியை, பயிற்சி மைய இணையம் வழியாகவும், அதுவழங்கும் சமூக வலைதள அறிக்கை மூலமாகவும் அறிக. பலன் பெறுக.
வாழ்க வளமுடன்.
-