Why no end to the suffering that is occurring of living?
வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவே இல்லையா?
பதில்:
ஓவ்வொருவரும் வாழ்கின்ற வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற துன்பங்களுக்கு முடிவு உண்டு, தீர்வும் உண்டு. அதன்வழியாக இன்பமாக வாழ்ந்து வாழ்வை கொண்டாடும் வாய்ப்பும் உண்டுதான். எப்படி என்பதை காணலாம்.
ஒரு துன்பம் என்பது எப்படி வருகிறது? என்று ஆராய்ந்தால் அதற்கு நிறைய வழிகள் இருப்பதை நாம் கண்டறிய முடியும். ஆனால் நாம் அதை செய்வதே இல்லை. ஒரு துன்பம் நமக்கு வந்த உடனே, வருந்தி மனம் உடைந்து போவதைத்தான் செய்கிறோமே தவிர ஆராய்ச்சிக்கு இடம் அளிப்பதில்லை. துன்பத்தால் ஏற்படும் வலியும், வருத்தமும், சினமும், கோபமும், வஞ்சமும், பழி வாங்கிடும் குணமும் வருகிறதே தவிர, ஏன்? எதனால்? எதற்காக? இப்படி நடந்தது என்று கேட்டுக்கொள்வதே இல்லை. உண்மைதானே? இனிமேலாவது அதற்கு நாம் பழகிக் கொள்வோம்.
பொதுவாக துன்பத்திற்கு காரணம், ஏழ்மை என்று கருதுவது பெரும்பாலான மக்களின் கருத்தாகும். அப்படியானால், பணவசதி, பொருள் நிறைவு பெற்றோர்க்கு துன்பம் எழுவதே இல்லையா? என்று கேட்டால், அவர்களுக்கும் ஏகப்பட்ட துன்பங்கள் உண்டு என்று அடுக்குவார்கள். எனவே நீங்களே இதுதான் காரணம் என்று உங்கள் முடிவுக்கு வருவதில் பலனில்லை.
துன்பங்களுக்கு மூலமாக இருக்கின்ற, இருக்கக்கூடிய காரணங்களை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு, இனிமேல் அப்படியான செயலை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ளுங்கள். இதற்கிடையில் கர்மா, அது இது என்று இப்போது குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இனி செய்கின்ற செயலை, திருத்தமாக, நிறைவாக, முறையாக செய்யுங்கள். அதுவே போதுமானது. வந்த துன்பம் தீர்க்க, என்ன வழி? என்று சிந்திக்க முயற்சித்தால் நிச்சயமாக தீர்வு கிடைத்திடும். எனவே வெறுமனே வருந்துவதால் பலனில்லை. மேலும், உங்களுடைய ஒரு செயலால், நீங்களும் வருத்தப்படக்கூடாது, மற்றவர்களும் வருத்தப்படக்கூடாது. அந்த விழிப்புணர்வில் செய்யுங்கள். அதுபோலவே, யார் துன்பத்தில் இருந்தாலும், அவரின் மீது அக்கறை கொண்டு அவருக்கு, உங்களால் முடிந்த உதவியை செய்துவாருங்கள். உங்கள் துன்பமும் வேறு யாரோ ஒருவரால், தக்க சமயத்தில் தீர்ப்பதற்கான வழிகள் உண்டாகிவிடும். இது இயற்கையின் செயல்விளைவு தத்துவமாகும்.
இனிமேலும் துன்பத்திற்கு வழியே இல்லையா? முடிவே இல்லையா? வருந்தவேண்டாம். விழிப்புணர்வு பெறுக!
வாழ்க வளமுடன்.
-