What is the kind of knowing through yoga extremely needed?
இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!
பதில்:
ஏதோ மிக சலிப்பாக கேட்பதுபோல தோன்றுகிறது. வாழும் இந்த வாழ்க்கையில், யோகத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவம் அப்படி ஆகிவிட்டதுதான் என்னசெய்ய? இந்த பொருள்முதல்வாத உலகில், பணத்தையும், வசதி வாய்ப்புக்களையும், வேலைவாய்ப்புக்களையும் தேடுவதற்கே நேரம் போதவில்லையே, இதற்கிடையில் யோகம் வேறா? என்ற சிந்தனையில்தான் இந்தக்கேள்வி பிறக்கிறது. தவறில்லை இது இயல்புதான்!
ஆனால், இந்த உலகில் பிறந்து வாழ்ந்து வெறுமனே மறைந்து போவது ஏன்? எதற்காக பிறந்தோம்? எதற்காக இப்படி வாழ்கிறோம்? வாழும் பொழுது இன்பமும் துன்பமும் ஏன்? துன்பம் நீக்கி வாழ வழி என்ன? நம்முடைய மூலம் என்ன? அது என்ன ஆறாவது அறிவு? எதற்கு பயனாகிறது? இந்த இயற்கை என்பது என்ன? இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், இந்த உலகை விட்டு நீங்கிவிடுவது சரிதானா?
வாழ்நாள் எல்லாம் தன்னை வருத்திக்கொண்டு, உழைத்து வருமானம் ஈட்டியதும், வாழ்க்கைக்கான பொருளை சேர்த்ததும், வீடு, வாசல், தோட்டம், தொறவு என்று பிரமாண்டம் காட்டியதும், பகட்டாக ஆடையணிந்து, நகை அலங்காரம் கூட செய்து, மிடுக்காக வாழ்ந்ததுமான இப்படி எல்லாவற்றையும் நொடியில் விட்டுவிட்டு போவதின் அர்த்தம் என்ன? இப்படி விட்டுவிட்டு போவதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?! என்றெல்லாம் சிந்தனையும், ஆராய்ச்சியும் செய்வதே இல்லையே?!
இதற்கெல்லாம் விடைதேடியே யோகத்திற்கு வருகிறோம். குருவின் துணையோடு பயணிக்கிறோம். இதெல்லாம் தெரிந்துதான் ஆகவேண்டுமா? அப்படி தெரிந்து கொண்டு என்னதான் ஆகப்போகிறது? என்பதுதானே உங்கள் கேள்வி? அப்படி உங்களுக்குத் தோன்றினால் விட்டுவிடலாம். இந்த பிறவியை எப்படி நீங்கள், இப்பொழுது வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்து கடந்து செல்லுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை!
உள்ளுணர்வாக உங்களுக்கு தோன்றாத வரையில், நீங்கள் யோகத்திற்கு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி வரவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு தேவையில்லை. Just like that, என்றபடி இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து முடியுங்கள். அதிலே நீங்கள் திருப்தி அடையுங்கள்!
வாழ்க வளமுடன்.
-