Why astrologers mostly failed on the foretelling? | CJ

Why astrologers mostly failed on the foretelling?

Why astrologers mostly failed on the foretelling?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?


பதில்:

அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால்,  அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.

இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.

சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.

இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை  தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ  நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!

முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்.