If repentance is the basis of yoga, then there is no need for yoga at all?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொதுவாக பார்த்தால் திருந்தி வாழ்வதுதான் யோகத்தின் அடிப்படி என்றால், யோகம் தேவையே இல்லையே?!
பதில்:
நீங்கள் மிக நன்றாக, ஆனால் குறுக்குவழியில் யோசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஒரு வகையில் நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் திருந்தி வாழ்வது என்பது சும்மா கிடைத்துவிடாது, திருத்தி வாழவும் முயற்சிக்க வேண்டுமே?! இந்த திருந்தி, திருத்தி என்ற இரண்டுக்கும் உள்ள அர்தத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள். திருந்தி என்பது இருப்பதை அப்படியே வைத்துக்கொண்டு திருத்தமாக வாழ்வது என்று தெரியவரும், ஆனால் திருத்தி என்பது இருப்பதை அடியோடு மாற்றியமைத்து முற்றிலும் புதிதாக வாழ்வது என்று தெரியவரும். இப்போது உங்களுக்கே தெரியும் எது சிறந்தது என்று? சரிதானா?
இப்போது உங்கள் வீட்டில் பழைய, அந்தக்கால பித்தளை பாத்திரங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம் பெரும்பாலும் எவர்சில்வர் என்பதுதான் பயன்பாடாக இருக்கிறது. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன. எனினும் ஓர் உதாரணத்திற்காக இங்கே காணலாம். பழைய பாத்திரங்கள் அளவில் பெரியதாகவும், வடிவமற்றும் இருக்கலாம். பயன்படுத்தாமல் போய் வீட்டில் பரணில் மூட்டை போட்டு கட்டிவைத்திருப்பார்கள். அவற்றை இன்று எடுத்துப்பார்த்தால் அழுக்காக, கருப்படைந்து இருக்கும் என்பது உண்மை.
அவற்றை கொஞ்சம், சமையலுக்கு பயன்படும் புளியை கரைத்த நீரில் கழுவினால், அந்த பித்தளை பாத்திரங்கள் அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும். இப்போதைய பயன்பாட்டிற்கு வரலாம். ஆனால் யாராது தூக்கி இறக்கி வைக்க முடியுமா? கடினம். இப்போது இந்த பித்தளையை இழக்க மனமில்லை. ஆனால் பயன்பாடு கடினமாக இருக்கிறது என்றால், அதை ஏதேனும் நிறுவனத்தில் கொடுத்து உருக்கி, உங்களுக்கு தேவையான பாத்திரமாக, தெய்வ உருவங்களாக, கலைப் பொருட்களாக மாற்றி அமைத்து, உங்கள் வரவேற்ரையில் வைத்து பாராட்டு பெறலாம் அல்லவா?
இந்த உருக்கி மாற்றி புதிதாக உருவாக்குதல் தான் யோகத்தில் நமக்கு நிகழ்கிறது. அதுதான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூலம் அறிய, நான் யார்? என்று பதிலைப் பெற, இயற்கையை அறிந்துகொள்ள, மெய்ப்பொருள் உண்மையை அறியவும் தேவையாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் யோகம் ஏன் தேவைப்படுகிறது? ஏனென்றால் உங்களின் பரம்பரையில் இதுவரை யாருமே செய்யாத, விரும்பாத, வாய்ப்பு கிடைக்காத, தவறவிட்ட ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்தக் களங்கள் நீக்கிட வேண்டாமா?!
வாழ்க வளமுடன்.
-