Why I can't give up the Bhakti worship?
பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே ஏன்?
பதில்:
பக்தி வழிபாடுகளில் இருந்து விடுபடுங்கள் என்றும், அதை விட்டுவிட்டு மீண்டுவாருங்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? யார் அப்படியான அறிவுரையை கொடுத்தார்கள்? யார் அதுதான் சிறந்தது என்று வழிகாட்டினார்கள்?
உண்மையாக பக்தி வழிபாடுகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ள வேண்டியது குறித்து கவலைப்படாதீர்கள். பக்தியும் வழிபாடும் இருக்கட்டும். அதில் இருக்கின்ற உண்மை, சொல்லப்பட்ட உண்மை என்ன என்பதை தேடுங்கள். ஏன்? எதனால்? எதற்காக? என்ன பலன்? என்ன நன்மை? என்ற கேள்விகள் வழியாக ஆராய்ச்சி செய்யுங்கள். அதற்கான விடை என்ன? என்பதை அந்த ஆராய்ச்சியின் முடிவாக கண்டுபிடியுங்கள். உங்கள் முடிவு என்ன? என்பதை வேறு யாருக்கும் சொல்லவும் வேண்டியதில்லை. சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதோடு, அது எனக்கு தேவையில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள். உங்களைபோல அவர்களும் ஏதோ ஒருநாள், நீங்கள் கண்டுபிடித்த அதே உண்மையை, தானாக ஆராய்ந்து அறிந்து கொள்ளட்டுமே!
பக்தி என்பது நிச்சயம் வேண்டும். அது இல்லாது ஒரு மனிதனுக்கு தனித்தன்மைகள், மனிதனுக்கே உரித்தான உயர்ந்த தன்மைகள் மலர்ச்சி பெறுவதில்லை. அறிவின் முழுமையை அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னை முழுதாக அறிந்துகொள்வதற்கு, அந்த வழியே செல்வதற்கு, தன்னை தகுதியாக மாற்றிக்கொள்ள சிறந்த வழிதான் பக்தி, ஆனால், அதில் நின்றுவிடாது, உண்மையையும் அறிய முயற்சிக்க வேண்டும். அப்படியாக முயற்சித்தால், யோகத்திற்கு நுழையமுடியும்.
யோகத்திற்கு நேரடியாக வரமுடியாத பாமர மக்களுக்காகவே, அவர்களுக்கு துணை செய்யவே, யோகத்தில் உயர்ந்த சித்தர்களால், ஞானிகளால், மகான்களால், குருமார்களால்தான் பக்தி கொண்டுவரப்பட்டது.
அதில் ஏற்பட்ட குழப்பங்கள்தான் அதை வேறுவழிகளில் திசை திருப்பிவிட்டது. இன்னும் அந்த திசையில்தான் போய்க்கொண்டும் இருக்கிறது. அதுகுறித்து நமக்கு கவலை ஏதுமில்லை. நாம் இங்கே விழிப்பாக, உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் போதுமானது. எனவே பக்தி வழிபாடுகளில் இருந்து என்னால் மீளமுடியவில்லையே என்று வருந்தாமல், உண்மையை ஆராய்ந்து அறிய தயாராகுங்கள். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்!
வாழ்க வளமுடன்.