No need mantra and chanting if mind will be completeness by Siddhar Agathiyar
மனமது செம்மையானால் மந்திரம் எதுக்கடி?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனதை செம்மையாக வைத்துக்கொண்டால் மந்திரம் தேவையில்லை என்று சொல்லுகிறார்களே? அதன் விளக்கம் என்ன?
பதில்:
ஆதியோகியின் வழியில், சப்தரிஷிகளில் ஒருவர், தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த சித்தர்களின் வரிசையில் முதன்மையாக இருந்தவர், அகத்தியர் ஆவார். இவரை மகாமுனி, முனிவர், மகான் என்ற அடைமொழியோடு அழைப்பார்கள். அவர் எழுதிய கவியின் முதல்வரியே நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியாகும். அந்தக்கவி இதுதான்.,
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
இந்தப்பாடலின் கருத்துப்படி, மனம் செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம், வாயுவை உயர்த்த வேண்டாம், வாசியை நிறுத்த வேண்டாம், மந்திரம் தானாக செம்மையாகிவிடும் என்று பொதுவான கருத்துரை எல்லோருக்கும் உருவாகும். ஆனால் இது படிநிலையாக நாம் பெறுகின்ற மாற்றத்தை விளக்கிச் சொல்லுகின்ற கவியாகும்.
பொதுவாகவே, சித்தர்கள் எழுதக்கூடிய கவிகள் குழூஉக்குறி என்ற பாணியில் அமைந்திருக்கும். அது என்ன என்றால், பரிபாஷையில் ஒரு கருத்தை சொல்லியிருப்பார்கள். சாதாரணமாக வாசிக்கும் பொழுது ஒரு அர்த்தமும், ஆழ்ந்து ஆராய்ச்சி நோக்கோடு படிக்கும் பொழுது உண்மை அர்த்தமும் விளக்கமாக கிடைக்கும். ஒருவகையில், சித்தர் பரம்பரையினர் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என்றும் சொல்லலாம். இந்த வரிசையில் இன்னும் நமக்கு புரியாத, விளங்கிக் கொள்ளமுடியாத எண்ணற்ற சித்தர் கவிபாடல்கள் இருக்கின்றன என்பதே உண்மை.
இந்த மனமது பாடல் குறித்த உண்மை வேறு யாரேனும் சொல்லியிருக்கிறார்களா? என்று தேடும்பொழுது, தமிழ்நாடு ஆன்மீக யாத்திரைக்குழு என்ற வலைப்பூவில், ஒர் பதிவையும் கண்டேன். நல்ல விளக்கம் எனினும் ஓரளவிற்கு யோக விளக்கத்தோடு அமைந்திருந்தது. அதை இன்னும் தெளிவாக இங்கே காண்போம்.
மெய்ப்பொருள் உண்மையை யோகத்தின் வழியே தேடும் ஒரு சீடருக்கு சொல்லுவது போல இந்த கவி அமைந்திருக்கிறது! இந்த மனம் செம்மை நிலைக்கு வரவேண்டும் என்றால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் கிடைத்துவிடாது. அதற்கு யோகத்தில் இணையவேண்டும். குருவின் உதவியும் கண்காணிப்பும் வேண்டும். உலகியலில் இப்போது வழங்கப்படும் யோகம் அல்லாத வேறெந்த மன பயிற்சியும் நிச்சயமாக உதவிடாது. சில நாட்கள் நன்றாக, தெளிவாக இருக்கலாம், மறுபடி பழையமாதிரியான நிலைக்கு தானாக மாறிவிடுமே?!
இப்போது, இந்த கவி, அஷ்டாங்க யோகத்தின் படி, ஓவ்வொரு உயர்வையும் காட்டுவதாகவே பார்க்கமுடியும். யோகத்தில் இணைந்து கொண்டு, அந்தக்கால முறைப்படி மந்திரம் சொல்லிவந்தால், முதல் நிலையில் மனம் செம்மையாகும். அது என்ன மந்திரம்? ‘ஓம் நமசிவய’ (பஞ்சாக்ஷர மந்திரம்) என்பதுதான் சித்தர்களின் அடிப்படையான மந்திரம். இந்த பஞ்சாக்ஷர, ஐந்தெழுத்து ரகசியம் என்ன? என்று பார்த்தால், ந நிலம் /ம நீர் / சி நெருப்பு / வ காற்று / ய வானம் என்பதாகும்! இதனோடு முன்பாக ‘ஓம்’ என்று சொல்லப்படும். ஆனால் இப்போது நீங்கள் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது எனது ஆலோசனை. ஏன் சொல்லக்கூடாது என்பதை பிறகு, இன்னொரு பதிவில் பார்க்கலாம்!
இப்படி மந்திரம் சொல்லிச் சொல்லியே மனம் செம்மையானால், அந்த மந்திரம் செபிப்பதை விட்டு விட்டு, வாயுவை உயர்த்தவேண்டும். அதாவது பிராணாயமம் செய்யவேண்டும். இந்நிலையில் மனம் செம்மையானால், பிராணாயமம் வழி வாயுவை உயர்த்த வேண்டாம். அடுத்ததாக, வாசியோகம் தொடரவேண்டும். அந்த வாசியோகத்தின் வழியே நம்முடைய மனம் செம்மையானால், வாசியையை நாம் நிறுத்தவேண்டியதில்லை, அது தானாகவே நிகழந்து, மனதை அடுத்தும் செம்மையாக்கிவிடும். இப்படி ஓவ்வொரு நிலைக்கும், இந்த மந்திரம் மனதை செம்மையாக்குகிறது. அதனால் மந்திரமே செம்மையானது என்று அகத்தியர் பெருமான் இந்த உண்மையை கவி வழியாக சொல்லுகிறார்.
வாழ்க வளமுடன்.
-