Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem? | CJ

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பரிகாரமாக, நவக்கிரக தவம் செய்யலாமா?


பதில்:

ஒரு சோதிட குறிப்பில், குழந்தை பிறந்த நேரம் என்பதைக் கொண்டு, வானில் எந்தெந்த கிரங்கங்கள் எங்கிருந்து தன்னுடைய காந்த அலையை வீசுகிறது என்பதைத்தான் நாம் ஜாதகம் என்று சொல்லுகிறோம். பெரும்பாலான ஜாதகங்களில், மிகச்சரியான நேரம் என்பது குறைவுதான். மேலும் வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டுவகையான பஞ்சாங்க உதவியும் கூட பிறந்த குழந்தையின் லக்கனம், பிறந்த நட்சத்திர பாதம் ஆகியவற்றையும், வக்கிர, நகர்ந்த கிரகங்களின் இருப்பிடத்தை மாற்றிவிடும். என்றாலும் கூட கிரகங்களின் காந்த அலை வீச்சு என்பது உறுதியானதுதான்.

ஒரு ஜாதக கணிப்பில், ஆராய்ச்சியில் ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சனை தீரவும், வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து தீர்க்கவும் நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஒரு ஆறுதலான வார்த்தைகள் தந்து உதவுவது போல. பெரும்பாலானவை அனுபவித்து தீர்ப்பது என்பதாகவே இருக்கும். ஆனாலும் வாழும் மனிதனுக்கு இயற்கை கொஞ்சம் கருணை காட்டத்தான் செய்கிறது. அதனால் மனம் உடைந்து கலங்கவேண்டிய அவசியமில்லை

இங்கே பரிகாரம் என்பது, மன நிறைவு, மனதுக்கு ஆறுதல் என்பதுதானே தவிர வேறெதும் இல்லை. இந்த பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கும் பல்லாயிர சோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதும் இப்போதைய நிலைதான். அதை நாம் குறைசொல்ல முடியாது எனினும் அவர்களிடம் சிக்காமல் விலகி இருக்கவேண்டும். கோவிலுக்கு போவது, பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது, தானம் செய்வது, யாகம் வளர்ப்பது என்று எத்தனையோ செய்தாலும் கூட இருப்பதும், வரப்போவதும் ஜாதகத்தில் மாறிவிடுவதில்லை. ஆனால் இதையெல்லாம் செய்தால் ஏற்படும் மன மாற்றம் நமக்கு உள்முகமாக நம்பிக்கையைத் தரும்.

ஆனால், வேதாத்திரியத்தின் வழியாக பயணிக்கின்ற ஒருவர், இந்த பரிகாரம் என்பதற்கு, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்தால், வழக்கமான பரிகாரதிற்கு மாற்றா? என்று கேட்டால் அது இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமாக பஞ்ச பூத நவக்கிரக தவம்  எந்த பரிகாரத்திற்கும் உதவுவதில்லை. என்றாலும் கூட, ஒவ்வொரு கிரத்தின், கோளின் மீதும் நம்முடைய மனதை நிறுத்தி, தவமாக செய்துவருகையில், அந்த கிரகம், கோளின் காந்த அலைவீச்சின் தாக்கத்தை, சமன் செய்துகொள்ளும் வகையில் மனம் மாறுகிறது என்பது உண்மையே! அந்த வகையில், வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் நிலைக்கு மனம் உறுதிபடுகிறது என்றும் சொல்லலாம். இது பரிகாரம் அல்ல எனினும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். 

தொடர்ந்து பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவரும் பொழுது, மனதின் சக்தியும், கிரகங்கள், கோள்களின் சக்தியும் கலப்புறுகிறது. அதன்வழியாக நாம் நன்மையே பெறலாம், பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக வந்துவிடும். நம்முடைய கடந்த கால நிலையை மாற்றிட முடியாது எனினும், வரப்போகிற நிலைமையை சரி செய்துவிடக்கூடிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் மட்டும், வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஒருவர் மட்டுமல்லாது, யார்வேண்டுமானாலும், தீட்சை பெற்றுக்கொள்ளாத எந்த ஒருநபரும் செய்து அதற்கான பலனைப் பெறலாம் என்பதுதான் இத்தவத்தின் சிறப்பாகும்! 

வாழ்க வளமுடன்.