Why is my mind always agitated and nervous? | CJ

Why is my mind always agitated and nervous?

Why is my mind always agitated and nervous?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனம் எப்போதும் படபடப்பாகவோ, பதட்டமாகவோ இருக்கிறது ஏன்?


பதில்:

உலக வாழ்வில் சராசரி மனிதர்கள், இயல்பாக இருக்கும் மன நிலை அப்படித்தான். எதையாவது செய்யவேண்டும், எதையாவது பெறவேண்டும், எப்படியாவது வாழ்வில் முன்னேறி மற்றவர்களை விட நன்றாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கு காரணம், அவர்களுடைய பெற்றோர் வளர்த்தமுறையும், இந்த சமூகத்தின் வழியாக அவர்களுக்கு கிடைத்த பாடமும் துணை செய்கிறது எனலாம். இந்தமாதிரியான மனிதர்களுக்கு ஒரு பயம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அது என்னவென்றால், ‘யாராவது என்னை ஏமாற்றிவிடுவார்கள், நாம் யாரிடமும் ஏமாறக்கூடாது, நம் உரிமையை இழந்துவிடக்கூடாது, போராடியாவது ஜெயிக்கவேண்டும், நாமே முதன்மையாக பெற்றுவிடவேண்டும், நாம் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது’ என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருக்கும்.

இந்த நபர்களில் நீங்களும் ஒருவரா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் இப்படியான சிந்தனை ஓட்டம் இருப்பது உண்டு எனினும், வேதாத்திரியத்தில் கற்றுக்கொண்ட நாள்முதல், மாற்றம் பெற வாய்ப்பு அதிகம் உண்டு. என்றாலும், பழக்கதோசம் என்ற ஒன்று இருப்பதால், மனம் மாற்றம் பெற கொஞ்சம் காலமும் ஆகலாம்.

இதை நீங்களே உணர்ந்து, ஏன் நான் பழையபடியே இருக்கிறேன்? என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு சிந்தனை செய்யுங்கள். வேதாத்திரிய வழியில், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்யுங்கள். மிக குறுகிய காலத்தில் உங்கள் மனம் தெளிவடையும். முக்கியமாக, இந்த சமூகம் குறித்தும், சக மனிதர்கள் குறித்தும் உங்களுக்கு இருக்கும் அச்சம், பயமே உங்களையும், உங்கள் மனதையும், உடலையும், படபடப்பாகவும், பதட்டமாகவும் வைத்திருக்கிறது. 

எந்த வகையிலும் உங்கள் வாழ்க்கையை, உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்பதை நீங்களாகவே அறிந்து உணரும் காலம் வரும். அதை நான் இங்கே விளக்கிச் சொன்னால் ‘நிச்சயமாக நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், மேலும் தயங்குவீர்கள்’ என்பதே உண்மை. அனுபவமாக நீங்களே அந்த விளக்கத்தை பெறும்பொழுது ‘அடடா, இவ்வளவு காலம் இப்படியாக வீண் செய்து விட்டேனே’ என்று வருந்தும் அளவிற்கு உண்மையை புரிந்துகொள்வீர்கள். 

வாழ்க வளமுடன்.