The world is full of happiness! Isn't that a lie?! | CJ

The world is full of happiness! Isn't that a lie?!

The world is full of happiness! Isn't that a lie?!


இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!


பதில்:

இந்த உலகில், நிறைந்திருக்கும் இன்பத்தைக் காணாமல், பொய்யை பார்ப்பதும், பொய்யாக உணர்வதும் உங்கள் பார்வையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படியான அனுபவங்களையும் நீங்கள் பெற்றிருக்கலாம் என்றே கருத இடமிருக்கிறது. இதை, இந்த பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி. உங்கள் வயது என்ன என்று எனக்குத்தெரியவில்லை. உங்கள் கடந்த காலத்தை, யோசித்துப்பாருங்கள். ஒருநாள் கூடவா நீங்கள், இன்பத்தில் திளைக்காலம் இருந்தீர்கள்? அனுபவிக்காமல் இருந்தீர்கள்? உணராமல் இருந்தீர்கள்? அதை பிறருக்கும் பகிராமல் விட்டீர்கள்?

பெரும்பாலும் இதற்கு நீங்கள் பதில் சொல்லுவீர்கள். எப்படியென்றால், ‘ஐயா, அதெல்லாம் அந்தக்காலம்’ என்பதாக உங்கள் பதில் இருக்கும். இது என்ன அந்தக்காலம் என்றால், நீங்கள் சிறுவயதில் அனுபவித்த காலமாக இருக்கலாம். 

அந்த சிறுவயது என்றால், மூன்று முதல் பதினெட்டு வயது வரை என்று பொதுவாக கருதலாம். அந்த வயதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. தன்னையும், தன் குடும்பம் பற்றியும் கூட சிந்தனையில் வைத்துக்கொள்வதில்லை. எப்போதும் ஒரு பரபரப்பு, ஆற்றல் வேகம், செயல்பாடு, மனதில் உத்வேகம், ஏதோ சாதிக்க பிறந்ததான நினைப்பு, அப்படி, இப்படி என்று ஏதேதோ இருக்கும். எந்த செயல் செய்தாலும், உங்களை வெளிப்படுத்தி, அதன்வழியாக அன்பையும், நட்பையும், மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்கு விரும்புவீர்கள். முக்கியமாக தன்னநலம் கருதாத செயல்பாட்டில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அந்த வயதில் உங்களுக்கென்று தனி உலகமும் கூட அமைந்திருக்கும் என்பதே உண்மை. அது உங்கள் மனதளவில் கூட இருக்கலாம்.

எந்த குழப்பங்களுக்கும் சிக்கிடாமல், எனக்கெதுக்கு அது? என்று விலகி விலகி ஓடி, தனித்திருந்து, எதும் கிட்டே வராத தடுப்போடு, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்வதற்கு விருப்பமும், செய்திறனும், திட்டமும் கொண்டிருப்பீர்கள்.

இவை அனைத்துமே இன்று, உங்களுக்கு மாறிவிட்டது. இந்த உலகில் எல்லாமே துன்பமாக மாறிவிட்டது என்று கருதுகிறீர்கள். இன்பம் என்பதே பொய் என்ற கருத்துக்கும் வந்துவிட்டீர்கள். அதை நீங்களும் அறிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிவிட துடிக்கிறீர்கள். சரிதானே?!

இதற்கு முக்கிய காரணம், உங்களுடைய எதிர்பார்ப்பும், அதனால் விளைந்த ஏமாற்றமும் ஆகும்! எப்படி என்பதை சிந்தனை செய்யுங்கள். அதற்கான உண்மை உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.