வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ‘பாமரன்’ என்றால் என்ன?
பதில்:
பாமரம் என்பதுதான் பாமரன் ஆனது. பாய் + மரம் = பாமரம். காற்றடித்த திசையில் இலக்கின்றி செல்லும் தன்மையுள்ளது பாய்மரம். அதுபோல் குறிக்கோள் இல்லாமல் மனம் போன போக்கில் செல்பவன் ‘பாமரன்’ ஆவான். அறிவின் வழியில் செல்லாதவன்; அறிவற்றவன் என்று பொருள்.
மேலும் விளக்கமாக,
இத்தகைய பாமரன், வாழ்வில் நோக்கம் ஏதுமின்றி, தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்வதற்கு தயாராவான். அவன் தன் விருப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் செயல்கள் செய்துவருவான். அந்த செயலின் விளைவில், தனக்கு நன்மை கிடப்பதாக கருதினாலும் கூட, தனக்கும், பிறருக்கும், இந்த இயற்கைக்கும் பொருந்தாத விளைவை காலத்தால் உருவாக்கிக் கொள்கிறான்.
அதுவே பின்னாளில் அவனுக்கு கர்மா என்ற வினைப்பதிவாக வெளிவந்து, இன்னும் துன்பத்திலும் சிக்கலிலும் வருந்த வைத்துவிடும்!
இந்த பாமரன், ஏற்கனவே தன்னுடைய கர்ம வினைப்பதிவுகளின் தாக்கத்தால்தான், குறிக்கோள் இல்லாத, மனம்போன போக்கில் செல்ல தயாராகின்றான் என்பதை எளிதில் நாம் புரிந்துகொள்ளவும் முடியும். ஆனால் விளக்கம் பெறாத பாமரன், விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். இதனால் அவனுடைய பிறவியும் வீணாகப் போய்விட வாய்ப்புள்ளது.
அவனின் வழியாக வரும் வாரீசுகளும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்ற வகையிலும் இது தொடரும். என்றாலும் கூட ஏதேனும் ஒருவழியில், இறையாற்றல் ஒரு பாடத்தை நடத்தி திசை திருப்பும் என்பது உறுதி. அந்த பாடத்தை ஏற்று, வாழ்க்கையில் திருத்தம் அமைத்துக்கொண்டால், பாமரன் என்ற நிலையில் இருந்து விலகி, நன்மையை நோக்கியும், பிறவி உண்மையையும் அறிய வாய்ப்பு கிடைக்கும். இல்லையே திசையற்ற, நோக்கமற்ற வாழ்க்கைபயணம் நீண்டகாலம் தொடரவே செய்யும்.
வாழ்க வளமுடன்.