வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம் எனும்போது, யோகம் என்ன செய்கிறது? எப்படி உதவுகிறது?
பதில்:
இந்த கேள்வியை வரவேற்கிறேன். ஒரு சராசரி மனிதரும், ஆரம்ப நிலையில் இருக்கின்ற ஆர்வலரும், யோகம் விரும்பாத மனிதரும் கேட்கிற கேள்விதான் இது. இந்த கேள்வி சரியான கேள்விதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம்தான். யாருமே தப்புவதில்லை. எந்த ஜீவனும் தப்புவதில்லை. பொருட்களும் கூட தப்புவதில்லை. இதில் இன்னும் சிறப்பாக, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியனவும் கூட தோன்றும், இருக்கும் நீண்டகாலம் என்றாகும், ஏதோ ஒருகாலத்தில் சுருங்கி மறையும், சில வெடித்தும் சிதறும், இல்லாமலும் போகும். இப்படி எல்லாமே தோன்றி மறையும் இந்த பிரபஞ்சத்தில், ஒரு பூமியில், பிறந்து, வாழ்ந்து, மறையும் மனிதருக்கு யோகம் அவசியமா? என்று கேட்கத்தான் தோன்றும்.
இங்கே நாம் மிக விரிவாக, அலச வேண்டியதில்லை, மிக சுருக்கமாக பார்க்கலாம். நீங்கள் கேட்பதுபோல, உலகில் வாழ்வதும், உயிர்விட்டுப் போவதும் நிச்சயம் எனும்போது அப்படியே வாழ்ந்துவிட்டு போவது ஒருவகை. எதற்காக பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? நாம் யார்? உயிர் என்பது என்ன? உயிர் போனபிறகு நான் என்ன ஆகிறேன்? உண்மையில் பிறப்பதற்கு முன்னே எங்கே இருந்தேன்? என்னவாக இருந்தேன்? அதுபோலவே இறந்த பிறகும் எங்கே போகிறேன்? இதற்கு முன்பாக பல சித்தர்கள், ஞானிகள், மகான்கள் எல்லோரும், தன்னை அறிந்தேன், இறையுணர்வு பெற்றேன், இயற்கையோடு கலந்து என் நிலை அறிந்துகொண்டேன் என்றெல்லாம் சொன்னார்களே அதெல்லாம் என்ன? உண்மையா பொய்யா?
இந்த உலகம் என்பது என்ன? யார் இந்த உலகை சுழற்றுவது? ஏன் சூரியன் கிழக்கில் உதிக்கிறது? மேற்கில் மறைகிறது? நட்சத்திரங்கள் எல்லாம் ஏன் விழாமல் வானத்தில் மிதக்கின்றன? எப்படி? என்று பலவாறாக கேள்வி கேட்டு சிந்திக்கிறார்கள். இதுபோல இன்னமும் பல்லாயிரம் கேள்விகள் இருக்கின்றனதான். இப்படி, இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா?
அவசியம் என்றால் அதற்கு யோகம் ஒரு வழியை உருவாக்கித் தருகிறது. யோகமே அவசியமா என்று நீங்கள் கேள்விகேட்டால் அது உங்களுக்கு தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. வாழும் வாழ்க்கையில், உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கை, சுகம், படிப்பு, தொழில், வேலை, வியாபரம், பணம் சம்பாதித்தல், சொத்து வாங்குதல், வீடு, பங்களா, தோட்டம், கார், பைக் வாங்குதல், திருமணம், குழந்தைகள்... இன்னும் பலப்பல என்று வாழ்ந்து அப்படியே எல்லாவற்றையும் கைவிட்டு உயிர் விடுதல் ஒருவகை. இந்த வாழ்கையோடு, யோகத்தில் இணைந்து, நான் யார்? என்று கேட்டு உண்மையை உணர்ந்து தெளிவது ஒருவகை. எதுவேண்டுமோ அதை தேர்ந்தெடுப்பது நீங்கள் தான்!
யோகம் என்பது, நம் பிறப்பின் உண்மையை, ரகசியத்தை, இயற்கையின் உன்னதத்தை நமக்கு அறியத்தரும் ஒர் வழிமுறை ஆகும்! இந்த யோகம் தேவையா? அவசியமா? முக்கியமானதா? என்பதெல்லாம், அவரவராகவே தன் விருப்பத்தில் அவராகவேதான் முடிவு செய்யவேண்டும். குரு சொன்னதாலோ, நான் சொன்னதாலோ, யாரோ ஒருவர் சொன்னதாலோ நீங்கள் வந்துவிடவும் மாட்டீர்கள், வேறு யாரும் வந்துவிடவும் மாட்டார்கள் என்பதை அறிக!
வாழ்க வளமுடன்.
-