உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!
[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]
பதில்:
என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,
இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்
இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன்.
மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?
இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.
இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள் முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!
எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.
சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!
மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!
இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது.
சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!
நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன்.
உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும், என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.