May 2024 | CJ

May 2024

Is there such a thing as fate? Is it true that wisdom can conquer fate?


விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! விதி என்று ஒன்று இருக்கிறதா? விதி என்பதை மதியால் வெல்லமுடியும் என்கிறார்களே அது உண்மையா?


பதில்: 

இதற்கு முன்பாகவும், பலவிதமாக இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளேன் எனினும். மீண்டும் சொல்லுவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். இங்கே குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களின் கவிதையின் கருத்தாக, எனக்கு கிடைத்த உண்மையைக் கொண்டு விளக்குகிறேன்.

        விதி என்பது இயற்கையின் நியதி ஆகும். நியதி என்பது என்ன? அடிப்படையாக இருப்பது என்று அர்த்தமாகிறது, அப்படியானால் விதி இருக்கிறதா? என்றால் அது நிச்சயமாக இருக்கிறது என்பது ‘அடித்துச் சொல்லக்கூடிய்’ உண்மைதான். ஆனால் அதைபின்பற்றி ‘தலையெழுத்து’ ஒன்று இருக்கிறது. அதன்படிதான் நீ வாழ்வாய் என்றால், நம்பாதீர்கள். விதி உண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் தலையெழுத்து என்பது இல்லவே இல்லை.

இந்த விதி எங்கே தொடங்குகிறது? என்று ஒரு கேள்வி எழுந்தால், அது, பஞ்ச பூதத்தின் முதல் பரிணாமத்திலேயே உருவாகிவிட்டதாக, மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். பரமாணுக்களின் கூட்டாக விண் என்ற ஆகாஷ் உருவான பொழுதே, அதனூடாக விதி என்பது அமைந்திருக்கிறது என்கிறார். அந்த விண் மிகமிக விரைவான சுழற்சி கொண்டது. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையில் இருப்பதும் ஆகும். அதனைத் தொடர்ந்த அடுத்த பரிணாமான காற்றையும் நாம் காணமுடிவதில்லை. கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத விண் என்ற ஆகாஷ் தான், ஜீவன்களிலும், மனிதரிடத்திலும் ‘உயிர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றிருக்கிறது. அதன் உள்ளடக்கமாக தோற்றம், இருப்பு, கலைதல் என்ற மூன்று கட்டமாக விதியை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அது அதனுடைய இயற்கை தன்மையாகவும் உள்ளது. இங்கே விதி என்பதை பார்த்தோம்.

அந்த விதியை கொண்டிருக்கும் உயிர், தன்னுள்ளே, அதன் மையப்புள்ளியிலே அறிவாக, உணரும் ஆற்றலை பெற்றிருக்கிறது அல்லவா? அதுவே மதி என்றும் மகரிஷி அவர்கள் விளக்கம் அளிக்கிறார். (உங்களுக்குப் புரிகிறதா? என்று நான் கேட்கவே மாட்டேன். புரிகிறதா என்று கேட்பவன் விளக்கத்தெரியாத முட்டாள்) இதை இன்னும் விளக்கமாக, எப்படியாக புரிந்துகொள்ளலாம் என்பதையும் பார்க்கலாமா? தனக்குள் விதி என்ற இன்று இருப்பதால், அந்த விண் என்ற ஆகாஷ் துகள் நின்றுவிடவில்லை, அழிந்துவிடவில்லை.தனக்குள் அமைந்திருக்கும் அந்த விதியை மீறி, அதனூடாக இருக்கும் மதியின் வழியாக, தன் வாழ்நாளின் தன்மை கருதி, திட்டமிட்டு, அதற்குள்ளாக, தன் காலத்திற்குள்ளாக, பலகோடி துகள்களோடு கூடி, அணுக்களாகவும், தன்னைப்போன்ற பல உயிர்த்துகளோடும் கூடியே,  மூலக்கூறுகளாகவும், தோற்றங்களாகவும், பொருட்களாகவும், ஜீவன்களாகவும், மனிதராகவும் வந்து நிற்கிறதே? அது விதியைக்கடந்த மதியின் செயல் அல்லவா? அதை நாம் ‘பஞ்சபூத நிலையிலேயே’ புரிந்துகொள்ள வேண்டும் என்று, குரு மகான் வேதாத்திரி மகரிஷி நமக்கு உணர்த்துகிறார்.

விண் / ஆகாஷ் / உயிர் ஆகிய இத்துகளே, விதியை மதியால் வென்று வெற்றிபெறும் பொழுது, அந்த உயிரைக்கொண்டே உலகில் வாழும் நாம், நம்மை விதியின் கீழ், குறைபட்டுக் கொள்ளலாமா? கவியின் கருத்து வழியாக, சொன்ன இத்தகைய விளக்கம் உங்களுக்கு, உண்மையை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

-

வாழ்க வளமுடன்.

-

Please explain simply the Mukti and Gnana in spirituality?


முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி என்பதையும், ஞானம் என்பதையும் எளிமையாக புரிந்துகொள்ள விளக்கம் தந்து உதவுகிறீர்களா?


பதில்:

எள்ளுக்குள் எண்ணையைப் போன்று பிரபஞ்சம் எங்கும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து நின்று இயங்கும் ஆன்மா, ஜீவன், கடவுள், இயற்கை, சக்தி என்று பலவாறாகச் சொல்லப்படும் அரூப சக்தி நிலையை (the source of all the forces) அறிவால் அறிந்து வாழ்வில் அமைதி பெறுவதே அறிவில் தெளிவு பெறுவதே முக்தி எனப்படும்.  

விளைவறிந்த விழிப்போடு ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று செயல் வழிகளையும் நன்கு பழகி அவற்றிலிருந்து வழுவாது தானும் சிறப்போடு வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் விளக்க வழி வாழ்வே ஞான நெறியாகும்.

வாழ்வில் மனம் தான் மிகவும் மதிப்புடைய ஒன்றாகும். மனமே உயிரின் படர்க்கை ஆற்றல்தான்.  உயிரோ மெய்ப் பொருளின் இயக்கச் சிறப்பாகும். மனம் உயிர் மெய்ப்பொருள் என்ற மூன்றும் மறை பொருள்களாகும். இவை நிலையால் வேறுபாடாக இருக்கின்றனவே தவிர பொருளால் ஒன்றேயாகும். இந்த மறை பொருள்களின் இருப்பு, இயக்கம், விளைவுகள் இவற்றை உணர்வதற்கு பின்பற்றும் மனவளக்கலையினை அகத்தவம் என்றும் யோகம் என்றும் வழங்கப்படுகிறது. 

மனதின் மூலம் நோக்கி ஆராயும் பயிற்சியினை யோகம் என்றும் ஆராய்ந்த பின் கண்ட விளக்க வழியில் வாழ்வை நடத்தும் நெறியினை ஞானம் என்றும் வழங்குகிறோம்  

வாழ்க வளமுடன்.

-

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Who stopped our development on our life? How we can confront them?


வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்தை தடுப்பது யார் என்று எப்படி அறிந்துகொள்வது? அதை எதிர்கொள்வது எப்படி என்று சொல்லுவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்தை தடுப்பது யார் என்று எப்படி அறிந்துகொள்வது? அதை எதிர்கொள்வது எப்படி என்று சொல்லுவீர்களா?

பதில்: 

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில், ஏதேனும் ஒருவகையில் நோக்கம் வைத்துக்கொண்டுதான் நகர்கிறோம், ஓடுகிறோம், முந்துகிறோம், வெற்றியை பெறவும் செய்கிறோம், அதோடு நின்றும் விடுவதில்லை, இன்னும் ஓடுகிறோம். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் இன்னொருவர் வந்து, நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டி மிகுந்த இவ்வுலகில், தகுதியும் திறமையும் யாருக்கு உள்ளதோ அவர் முன்னேறுகிறார் என்பதுதான் உண்மை. சிலவேளைகளில் குறுக்குவழியும், பணமும், சிலருடைய உதவியும் செயல்படும் ஆனாலும் அது நிலையாக இருப்பதில்லை என்பதையும் நாம் அறிவோம்.

நீங்கள் கேட்டபடி, உங்கள் முன்னேற்றத்தை தடுப்பது யார் என்று வெளியில் தேடுவதை விடவும், உங்களோடு இருக்கும் சிலரை காண்போமா? அவர்களை எதிர்கொண்டு அடக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். வெற்றிக்கனி உங்கள் முன்னால் என்பதை தனியாக சொல்லவேண்டியதும் இல்லை. யார் அவர்கள்?

அவர்கள்தான் உங்களுடைய பேராசை, சினம், கவலை. ஆம், உங்களுடைய குணங்கள்தான், உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான தடைகளை உருவாக்கி உங்களை அலைக்கழிக்கிறது. வாழ்வில் நன்மைதரும் வழிகளை அடைத்துவிடுகிறது என்று குரு மகான் வேதாத்திர் மகரிஷி சொல்லுகிறார். பேராசை என்பதற்கு அடிப்படையாக இருப்பது ஆசைதான். ஆனால் அதற்காக ஆசையை துறந்திட முடியாது. ஆசை இல்லாமல் வாழவும் முடியாது. வாழவேண்டும் என்பது ஆசைதான். நான் மட்டும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும்பொழுதுதான், அது பேராசையாக வந்து நிற்கிறது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால், உங்கள் தகுதி, திறமை, குறிப்பிட்ட துறையில் உங்களின் ஆர்வம், அதை அடைவதற்கான முயற்சி ஆகியன வேண்டும். உங்களைப்போலவே சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களை விடவும், ஒருபடி மேலே என்ற நிலையில், நீங்கள் இருக்கவேண்டியது முக்கியம். இந்நிலையில் நீங்கள் அவரை, உங்கள் முன்னேறத்தை தடுப்பவராக கருதமுடியாது. இந்த தவறான கருதலில்தான் சினமும், எப்படியாவது நான் வெற்றி பெறவேண்டும் என்ற பேராசையும், அது தோல்வியானால், கவலையும் வந்துவிடுகிறது. பிறகு அடிக்கடி இதையே நினைத்து, இயல்பான உங்கள் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?

எனவே, இப்போது நீங்கள், உங்கள் முன்னேற்றத்தை தடுப்பவர்களை, வெளியில் தேடாமல், உங்களுக்குள் இருக்கின்ற பேராசை, சினம், கவலை ஆகிய மூன்றையும் கண்டு, அம்மூன்று தேவையற்ற குணங்களையும் திருத்தி அமைத்துக்கொள்ளுங்கள். எப்படி என்பதற்கு, குரு மகான் வேதாத்திரி மகரிஷியே வழியும் தருகிறார். பேராசையை நிறைமனமாகவும், சினத்தை தவர்த்திவிட்டு அதை மன்னிப்பாகவும், கவலை அறவே ஒழித்தும் பழகிக்கொள்ள வேண்டும் என்று அகத்தாய்வு எனும் தற்சோதனை கல்வியாக நமக்குத் தருகிறார். விரும்புவோர் மனவளக்கலை வழியாக கற்றுக்கொள்ளவும் செய்யலாம்.

வாழ்க வளமுடன்.
-

How Vethathiriya Kayakalpa yoga practice helps to fertility?


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி, குழந்தைப் பிறப்புக்கான உயிரணுக்களை ஊக்கப்படுத்துகிறதா? விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி, குழந்தைப் பிறப்புக்கான உயிரணுக்களை ஊக்கப்படுத்துகிறதா? விளக்கம் தருக.


பதில்: 

மரபு, நவீன மருத்துவ உண்மைகளைகடந்து, இப்பயிற்சி வழியான உண்மை மட்டுமே இங்கே சொல்லப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சித்தர்கள் தங்களின் யோகவாழ்வின் சிறப்புக்காகவும், வாழ்நாளின் நீட்டிப்புக்காகவும் உருவாக்கிய, காயகல்ப யோகபயிற்சி உலகெங்கும், உயர்ந்த ஞானிகளி வழியாக பரவினாலும், சராசரி மக்கள் அதில் ஆர்வம் கொள்ளததால், காலப்போக்கில் காயகல்ப யோகபயிற்சி அழியாமல் இருந்தாலும் கூட, அந்த வழிமுறைகள் சிதறிப்போய் விட்டது. முழுமையான அதை உணர்ந்து செய்தவர்கள் யாருமில்லாத நிலை ஆகிவிட்டது.

ஆண்பெண் உடலுறவுக்கு உதவும், அந்த இன்பத்தில் நிலைத்திருக்க துணையாக இருக்கும், அந்த உறவுகளில் உடல் சோர்வை நீக்கி உற்சாகப்படுத்தும் பயிற்சிதான் இந்த காயகல்ப யோகபயிற்சி என்ற நிலையில்தான், உலகில் ஆங்காங்கே சிதறி செயல்பட்டுவந்தது. சொல்லித்தருபவரின் நிலையும் இதுதான், கற்றுகொள்பவரின் நிலையும் இதுதான். ஆனால் இந்த காயகல்ப யோகத்தின் நோக்கமும், உண்மையும் சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும் உண்மை ஆனால் அதில் எப்படிச் செய்வது என்ற விளக்கம் அதில் இல்லை, அக்கவி நூல்குறிப்புக்கள் இன்னமும் நம் கைகளில் இருப்பதும் உண்மை.

அந்த காயகல்ப கவிகள் குறித்து ஆராய்ந்த, குருமகான் வேதாத்திரி மகரிஷி, தனக்கு தெரிந்தவற்றோடு, உலகெங்கும் பரவிக்கிடக்கும் அரைகுறையான அந்த பயிற்சிகளையும், சிலரிடம் கேட்டும், நேரிலே பார்த்து விளக்கம் பெற்றும், அந்த பயிற்சி குறித்து ஆராய்ந்து உண்மை அறிந்தார். அதை செய்துபார்த்து, விளைவுகளை கணித்து, திருத்தமும் பெற்று, முழுமையாக்கினார். அதை வேதாத்திரியத்தின் வழியாக, எல்லா மக்களுக்கும் கிடைக்கச்செய்ய ‘காயகல்ப யோக பயிற்சி’ திட்டமாகவும் கொண்டுவந்தார்.

அத்தகைய காயகல்ப யோக பயிற்சிதான், ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்து நாத சக்தியை அடைப்படையாகக் கொண்டதாகும். மேலும் அந்த வித்துநாதத்தை ஊக்கப்படுத்தி, உயிரணுக்களை வலுப்படுத்துகிறது. உயிராற்றலையும், அதன் படர்க்கை நிலையான மனதையும் வளப்படுத்துகிறது. இந்த உண்மையை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி, 1980ம் ஆண்டுகளின் வெளிநாட்டு பயிற்சி வகுப்புக்களிலே விளக்குகிறார். அந்த வகுப்பில் கலந்து கொண்ட அன்பர், தன் மனைவிக்கு, குழந்தைப்பேறு பிரச்சனை நீங்கி, உயிரணுக்களின் எண்ணிக்கை அபரிதமாக உயர்ந்ததை சொல்லுகிறார். அதுபோலவே இங்கும் பலருக்கு அத்தகைய மாற்றம், ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைத்த உண்மைகளை அறியமுடிகிறது.

        நான் மருத்துவன் அல்ல, யோக ஆராய்ச்சியாளன். எனக்கு கிடைத்த உண்மை தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகளை உங்களுக்கு அளிக்கிறேன்.

நீங்களும், காயகல்ப யோக பயிற்சிக்கு முன்னதாக ஒரு மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு, அந்த காயகல்ப யோக பயிற்சி தொடர்ந்து செய்துவந்து, குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்னொரு மருத்துவ பரிசோதனை செய்து உண்மையை அறியமுடியும். மேலும் விளக்கங்களின் உண்மை அறிய, மனவளக்கலை மன்றத்தை அணுகலாம். ஆழியாறு காயகல்ப யோக பயிற்சி ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.

வாழ்க வளமுடன்.

-

If human race starts from monkeys, who no tails to human? What happened on that?


குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றால், குரங்குகளுக்கு இருந்த வால் எங்கே போயிற்று? மனிதனுக்கு ஏன் வால் இல்லை?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றால், குரங்குகளுக்கு இருந்த வால் எங்கே போயிற்று? மனிதனுக்கு ஏன் வால் இல்லை?


பதில்: 

நகைச்சுவையை தூண்டுவதாக இருந்தாலும், ஆழ்ந்து சிந்திக்ககூடிய கேள்வி இது. ஓரளவில் இதை இங்கே, விளக்க முயற்சிக்கிறேன். இதற்கான பதிலை, செயற்கை நுண்ணறிவின் வழியே கேட்டபொழுது. அது தந்த ‘விஞ்ஞான ரீதியிலான’ பதிலை  இங்கே தருகிறேன்.

ஏறக்குறைய 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் மற்றும் குரங்குகளின் மூதாதையர் குரங்குகளிடமிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டு அதன் வாலை இழந்தனர். நமது உடலியலில் இந்த வியத்தகு மாற்றத்திற்கு காரணமான மரபணு மாற்றத்தை யாரும் அடையாளம் காணவில்லை - இது வரை. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நமது முன்னோர்களின் வால்களை இழக்கச் செய்யும் தனித்துவமான டிஎன்ஏ பிறழ்வை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த பிறழ்வு TBXT மரபணுவில் அமைந்துள்ளது, இது வால் விலங்குகளில் வால் நீளத்தில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் இரண்டு குழுக்களின் டிஎன்ஏவை ஒப்பிட்டுப் பார்த்தனர்: குரங்குகள், வால்கள் மற்றும் ஹோமினாய்டுகள் (மனிதர்கள் மற்றும் குரங்குகள்). TBXT மரபணுவில் மக்கள் மற்றும் குரங்குகளில் இருக்கும் ஆனால் குரங்குகளில் இல்லாத ஒரு பிறழ்வை அவர்கள் கண்டறிந்தனர். இந்த பிறழ்வின் விளைவுகளை சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றப்பட்ட ஆய்வக எலிகள் இந்த பண்பு2 வேண்டும்.

எனவே, மனிதர்கள் மற்றும் குரங்குகளில் வால் இழப்பு இந்த குறிப்பிட்ட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரிணாமம் நம் இனத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பது கவர்ச்சிகரமானது!

இந்த விளக்கம் உங்களுக்கு போதுமானது என்றால், இதனோடு நிறுத்திவிடலாம். ஆனால், பாமரமக்களின் தத்துவஞானியான வேதாத்திரி மகரிஷி, இந்த விளக்கங்களைக் கடந்து, அந்த உண்மையை தன்னுடைய, ‘உயிரின பரிணாமம்’ வழியாக கண்டறிகிறார். அதையே நமக்கு விளக்கியும் சொல்லுகிறார்.


குரங்கில் இருந்து வந்தவன் என்று விஞ்ஞானம் சொன்னாலும், அதிலும் ஒரு சிறு மாற்றத்தை அவர் விளக்குகிறார். குரங்குகளில் 18 வகையான இன வகைகள் உண்டு என விஞ்ஞான ஆய்வு பட்டியலிடுகிறது.  இந்த அடிப்படை Ape species வகையில் இருந்து, வால் இல்லாத குரங்குகளாக கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குடான், ஜிப்பான் மற்றும் பானாபாஸ் என்பன இருக்கின்றன.

இப்பொழுது நீங்கள் கேட்ட முக்கியமான விஷயத்திற்கு வருவோம். அதுதான் வால். இந்த வால் எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா? தொட்டும் பார்த்திருக்கிறீர்களா? அது சின்னஞ்சிறு வடிவான எலும்புகளின் இணைப்பில், அந்த எலும்புகளைக் கவர்ந்த கொழுப்புச்சதைகள் என்று சொல்லலாம். அது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில், முக்கோன வடிவிலான ‘காக்சைக்ஸ்’ என்ற தண்டுவட எலும்புவால் பகுதி என்ற கடைசி எலும்புபகுதிலிருந்து வருகிறது. 


இந்த  ‘காக்சைக்ஸ்’ மனித குரங்குக்கு கொஞ்சம் வளர்ந்து நின்றது. மனிதனுக்கோ வளரவே இல்லை. இதுதான் பரிணாமத்தின் சிறப்பாகும். எதனால் இது நிகழ்ந்தது? என்ற கேள்வியை வேதாத்திரி மகரிசியின் முன்வைத்தால், குரங்குகள், நிமிர்ந்து நடக்க முனைந்தபொழுது, வால் அதன் வளர்ச்சி மாற்றத்தை சந்திக்கிறது என்கிறார். பூமியின் ஈர்ப்புக்கு எதிரான நிலையில், வாலும், அதுசார்ந்த எலும்புகளும் தன்னை மாற்றிக்கொண்டன / வளர்ச்சியை தடுத்துக்கொண்டன என்றும் சொல்லலாம். அந்த வகையில், மனிதனுக்கு முன்னோடி என்றால் கொரில்லா, சிம்பன்சி என்ற இரண்டைமட்டுமே சொல்லமுடியும். வால் இருக்கும் மற்ற எல்லா குரங்குகளையும் சொல்லிவிட முடியாது.

இந்த மாற்றம் உடனடியாக வந்தது என்று கருவதற்கு இடமில்லை. பலகோடி ஆண்டுகளின் மாற்றத்தில்தான் இது நிகழ்ந்தது. இப்போதும் கூட சில மனிதர்களுக்கு, கூடுதலாக மற்றொரு எலும்பு தோன்றி மறைவதுண்டு, மருத்துவர்கள் அறுவைசிகிச்சை வழியாக அதை நீக்குவதும் உண்டு. வேதாத்திரியத்தில், உயிரின பரிணாமம் என்ற பாடத்தை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படாத பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.

-

How the practice of silence is the solution for the purity of mind?


மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.


பதில்:

மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சி மவுனம்(Silence) 
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.  மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்ட கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம். 

இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்?  நாம் கொடுக்கிறோம்.  நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம்.  அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.  

எனக்கு வேலையில்லை.  அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள்.  சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.  அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.

யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.  அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை.  இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.

ஒரு நாளைக்கு மவுனம் என்று சொல்லிவிட்டு  வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பத்துப்பேர் இருக்கிற  வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது.  ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். 

அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார்.  "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !.  ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும்.  அங்கே சுயகவனம் (attention) இல்லை.  ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம்.  இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை.  இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது.  என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.  

        நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும்  வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும்.  போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.  அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.

ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.  இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.  அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மவுனம் இருக்க வேண்டும். 

மவுனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள்.  பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மவுனமாக இருப்பது நல்லது.  எல்லோரும் தூங்கும்போது மவுனமாகத்தான் இருக்கிறார்கள்.  தூங்கும்போது மவுனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை.  எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.  அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.  எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.  

இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு.  இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள். வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும். 

அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால், "நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்". "ஆமா, அறிவுத்திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?"

"ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது".  உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை. இது என்ன மவுனம்?

அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.  முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன்.  என்று சொல்லலாம் அல்லவா?

 "மவுனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மவுனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும்.

மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும். மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் மவுனம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்!
-

Any of yoga chakra bottom of the Moolathara? Can we meditate there? What kind of benefits on that?


மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?


பதில்: 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும், தன்னளவில் ஒரு மையம் உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த அளவிலே இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும் கூட அதன் மையமாக ஒரு நிலை நிச்சயமாக உண்டு. அதுபோலவே எந்த ஜீவன்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் உடலின் நீளம் அகலம் அளவை எடுத்துக்கொண்டு வகுத்தால், அதன் மையத்திலும் ஓர் புள்ளியான நிலை உண்டு. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. அதுவே மூலாதாரம் என்று வழங்குகிறோம். இந்த விளக்கங்களின்படி, மூலாதாரத்திற்கு கீழே என்று சொல்லுவதற்கு இடமில்லை. நாம் நிமிர்ந்து நடப்பதால், மூலாதாரத்திற்கு கீழே என்று உங்களுக்கு சந்தேகம் எழுகிறதா? மேலே கீழே என்பதெல்லாம், நம்முடைய விளக்கத்திற்க்காத்தானே தவிர அப்படி எதும் இல்லை என்று சொல்லமுடியும். மேலும் பூவி ஈர்ப்பு ஒன்று இருப்பதால்தான் கீழே என்பது மேலே என்பதும் தோன்றுகிறது. வான் வெளியில், பிரபஞ்சத்தில் மிதக்கும், நாம் வாழும் பூமிக்கே மேலே கீழே என்று எப்படி, எதைச் சொல்லுவது? அதுப்போலவே மனிதனைத் தவிர்த்து, உணர்வன என்ற வகுப்பில் உள்ள, பாம்பு, பல்லி, முதலை, ஆமை இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லுவது?

மூலம் + ஆதாரம் என்பதுதான் மூலாதாரம் ஆகிறது. எப்பொருளுக்கும் ஓர் மையப்புள்ளி என்ற நிலைபாடு சரியானதுதான். எனவே மூலாதாரத்திற்கு கீழே என்ற சக்கரங்களும், ஆதாரமையங்களும் இல்லை என்பதே சரியானது.

உங்கள் கேள்வியில் உள்ளடக்கமாக இருக்கும், ஓர் சந்தேகத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டும். தெய்வீக திருவிளையாடல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகின்ற, உயிரின பரிணாமத்தில் இயல்பூக்கத்தின் வழியாகவே, தன்னை மேம்படுத்தி முழுமையான நிலைதான் மனிதன் ஆகும். மனிதன் என்ற நிலையில், அந்த தெய்வீகம் தன்னையே அறிந்து முழுமையும் செய்து கொண்டது. அப்படி இருக்கும்பொழுது, மூலாதரத்திற்கும் மேலே என்று சொல்லுவது தவறு, மூலாதாரத்திற்கு உயர்வான நிலை, ஆதார சக்கரங்களில் தான் நமக்கு, வேலை இருக்கிறதே தவிர கீழே இல்லை. நீங்கள் உங்களை ‘நான் யார்?’ என்ற தேடலின் வழியான உண்மையை அறிய, மூலாதார நிலை தாண்டிய உயர் நிலைகளை அடையவேண்டும்.

மூலாதாரத்திற்கு கீழே அதாவது, மூலாதாரத்திற்கு தாழ்வான நிலைகளில் நீங்கள், தனியாக ஒன்றும் செல்லவேண்டியதில்லை. அதுதான் வழக்கமாக நம் வாழ்நாளில் வந்து கொண்டே இருக்கிறதே? நம்மையும் பாடாய்படுத்துகிறதே? ‘என்னை மிருகமாக்கிறாதே’ என்று தானே நாம் மற்றவர்களிடம் சொல்லுகிறோம் / கத்துகிறோம். உண்மைதானே? இதற்கு வேதாத்திரி மகரிஷியே ஒரு விளக்கம் தருவார். பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கு, ஏதேனும் வாக்குவதம் முற்றி அடிதடியில் இறங்கினால், ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் மற்றவரை கடிக்கச்செய்வார், நகத்தால் பிராண்டுவார், கைகளால் தாக்குவார். இதெல்லாம் யார் செய்தது? நாம் பார்க்கின்ற காட்டுவிலங்குகள் செய்யும் செயல்கள் அல்லவா? இது ஏன் மனிதனிடம் வந்தது?

மனிதன் பரிணாமத்தின் வழியே, விலங்குகளின் மூலத்தைக் கொண்டவன். மனிதாக வந்தும் கூட அவனின், கருமையத்தில், விலங்கினத்தின் தன்மைகள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. அவன் அதிலிருந்து விலகி, மனம் இதனான மனிதனாக மாறிட, அவனின் உயிரின் இயக்க மையத்தை மாற்றி அமைத்து, உயர்த்திட வேண்டியது அவசியம். அதைத்தான் குண்டலினி தீட்சை என்று அழைக்கிறோம். மூலாதாரம், உயர்சக்தி மையம், மனதின் மூலமான காந்த மையம், வித்து சக்தியின் மையம் எல்லாமே கருமையம் என்ற ஒரே இடத்தில்தானே இயற்கையாக அமைகிறது. சராசரி மனிதன், நீங்கள் கேட்பது போல, கீழே தாழ்வான நிலையில் இருந்துதான் வாழ்கிறான். அவன் உயர்வடைய, சிறப்படைய, உண்மை உணர, தன்னையறிய, மூலாதாரத்தில் இருந்து உயர்வான நிலையைத்தான் தியானிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

யோகத்திற்கு வராமல், குருவின் வழியாக தீட்சையும் எடுத்துக்கொள்ளாத மனிதன் இயல்பாகவே தன்னை மறந்து, விலங்கினத்தின் பண்புகளை வெளிப்படுத்தியே வாழ்வான், வாழ்ந்துகொண்டு இருப்பான். இப்போது உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

We welcomes you for the Vethathiriya Discussion


வேதாத்திரிய கலந்துடையாடல் நிகழ்வுக்கான அழைப்பு!


வேதாத்திரியம் குறித்து...

நீங்கள், கலந்துரையாட விரும்புகிறீர்களா? அந்த கலந்துரையாடலில் உங்களுடைய 

கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புகிறீர்களா?

சந்தேகங்களில் தெளிவு பெற விரும்புகிறீர்களா?

மெய்ஞானத்தில் உயர்ந்திட விரும்புகிறீர்களா?

வேதாத்திரியத்தில் முழுமை விரும்புகிறீர்களா?

அறிந்த உண்மையை பகிர விரும்புகிறீர்களா?

உங்கள் அனுபவத்தை சொல்ல விரும்புகிறீர்களா?

ஆம் என்பது உங்கள் பதிலானால் வேதாத்திரியச்சேனல் உங்களை வரவேற்கிறது!

-

கலந்துகொள்ள தகுதியுடையோர் யார் என்று அறிவோமா?

வேதாத்திரியத்தில்,  ஒரு ஆண்டு, அதற்கு மேலான ஆண்டுகள் முன்னதாக, பிரம்மஞானம் முடித்து, ஆசிரியர் பயிற்சி வழியாக அருள்நிதி பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியில் நிறைவுபெற்ற ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள். 

(மனவளக்கலை மன்ற செயல்பாடுகளில் இருப்போர் தவிர்க்கலாம்).

உதவி பேராசிரியர்*, பேராசிரியர்* தகுதியுள்ளோரும் வரவேற்கப்படுகிறார்கள்.

(*கலந்துகொள்வதில் பிரச்சனைகள் எழுமென்றால் தவிர்க்கலாம்).

நல்ல குரல் வளம், பொறுமை, பக்குவம், வேதாத்திரிய பயிற்சிகளில் அனுபவம் அவசியம். தொடர்ந்து காயகல்பம், உடற்பயிற்சி, தவம், அகத்தாய்வு தினமும் தவறாமல் செய்துவருபவராக இருக்க வேண்டியதும் முக்கியம். மௌனம் அனுபவம் இருந்தாலும் சிறப்பு. தகுதியுடைய பெண், ஆண் இருபாலரும் நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

-

இந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

உங்கள் ஓய்வு நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, ‘வேதாத்திரியச்சேனல் இயக்குனர், சுகுமார்ஜெ’ அவர்களோடு கலந்துரையாடலாம். இந்நிகழ்வு நேரடியாகவும், கைபேசி வழியாகவும், இணையம் வழியாகவும் நடக்கலாம். ஒவ்வொரு நிகழ்வும், குறைந்தது பத்து நிமிடங்கள் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்வு ‘ஒலி / ஒளி’ பதிவு செய்யப்பட்டு, வேதாத்திரியச்சானலில் காணொளியாக வெளியிடப்படும்.

-

பதிவேற்றப்படும் பதிவுகளில், கலந்து கொண்ட அன்பரின் பெயர், தகுதி, வசிப்பிடம், ஊர், ஒளிப்படம், காணொளி இணைத்து, வேதாத்திரியச்சானலில் வெளியிடப்படும். பதிவின் உரிமை வேதாத்திரியச்சானல் பெற்றுக்கொள்கிறது.

-

இந்நிகழ்வின் பயன்கள்

சேவை நோக்கத்தோடு செய்யப்படும் பதிவு என்பதால், கலந்து கொள்ளும் அன்பர்கள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, சேவை நோக்கத்தோடு இருத்தல் வேண்டும். உங்களை பயன்படுத்தி நாங்கள் உயர்கிறோம் என்ற மாற்றுச்சிந்தனைக்கு இடமில்லை. வேறெதும் எதிர்பார்ப்புக்கும் இடமில்லை. இங்கே நிகழ்வது, வேதாத்திரியத்தின் வழியாக மெய்ப்பொருள் உண்மை கருத்துப்பரிமாற்றம் மட்டுமே!

-

கூடுதல் விபரங்கள் அறிக

நிகழ்வு குறித்த விபரங்கள், முன்னதாகவே வழங்கப்படும். போதுமான நேரத்தை, வழங்க ஆர்வமாக இருத்தல் அவசியம். அதற்காக உங்களை பிற பிணைப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளலாம். ஆர்வமில்லை என்றாலோ, நேரமில்லை என்றாலோ, வேறேதும் காரணம் என்றாலோ முன்கூட்டியே தெரிவித்தல் நன்று. நிகழ்வு குறித்த விளக்கங்களை, தகவல்களை எப்போது வேண்டுமானாலும், கேட்டு அறியலாம். 

மேலும் விபரங்கள் அறிய https://wa.me/9442783450

-

வாழ்கவளமுடன்.

Why Vethathiriyam not mentioned Shivan, Shakti and all?


ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?


பதில்: 

அன்பரே, மிக நீண்ட ஆராய்ச்சிக்குரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதை இங்கே எழுத்தில் விளக்கமாக சொல்லிவிட முடியாது. அதை நேரடியாக, உங்கள் முன்னால் சொன்னால்தான் சரியாக புரிந்துகொள்ளவும் முடியும். உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கவேண்டும் என்றால், யாரேனும் உங்கள் ஆசிரியரிடம் கூட கேட்டு தெரிந்துகொள்ளலாம். எனினும் சில அடிப்படை உண்மைகளை, விளக்கங்களை இங்கே தருகிறேன். ஓரளவுக்கு உங்களுக்கான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.

ஒரு உண்மையை, மதிப்பான பொருளை, நிகழ்வை தெரிந்துகொண்ட நீங்கள், அதை பிற மக்களிடமும், சராசரி மனிதனிடமும், உங்களைவிட கல்வியில் ஆரம்பநிலையில் உள்ளவரிடம், கல்வி அறிவே இல்லாதவரிடம் சொல்லுவதென்றால் எப்படி சொல்லுவீர்கள்? ‘இது இப்படியானது’ என்று உயர்வாகத்தானே சொல்லுவீர்கள். அப்படி சொல்லவில்லை என்றால், அதன் தரம் தாழ்ந்துவிடும். மக்கள் அதை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள். தேவையும், அவசியமும் இல்லை என்று போய்விடுவார்கள். உண்மைதானே?

அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளை உணர்ந்தவராக இருந்தால்? அதை எப்படி சொல்லுவீர்கள்? இப்பொழுது ஒரு விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுபோலவே, மெய்ப்பொருள் உண்மையறிந்த ஞானிகள், மனிதனி பிறப்பின் கடமையே, அந்த மெய்ப்பொருளை உணர்வதுதான் என்பதை, மக்களுக்கு விளக்கம் தருவதற்காகவே, அந்த மெய்ப்பொருளை ‘சிவம்’ என்று சொன்னார்கள். உயிரினங்களை ‘சீவன்’ என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலையானது, உயர்வானது, மெய்யானது என்று பொருள் தரும் வார்த்தையாகும். ஆனால் பின்னாளில்தான் அது சிவனாக மாறிவிட்டது. சீவன் என்பதற்கு பொருத்தமாகக்கூட சிவன் வந்திருக்கலாம்.

மெய்ஞானிகள் சொன்ன, சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும், ஆன்மீகவாதிகள் சொல்லுகிற சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது தெளிவானது. பின்னது திறை மறைக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டதாகும். நாமும் பழங்காலமாக மெய்ஞானிகள் சொன்னதை விட்டுவிட்டு, ஆன்மீகவாதிகள் சொன்னதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். உண்மைதானே? சிவம் என்றாலும் சிவன் என்றாலும் ஒரு காட்சி அல்லவா வந்து நிற்கிறது. வார்த்தை சொல்லும் உண்மை இங்கே மாறிவிட்டதே? இதை குரு மகான் வேதாத்திரி மகரிஷி உணர்ந்துதான், வேதாத்திரியம் தனிப்பாதையில் நடைபோட வழி வகுத்தார். உண்மையை, உள்ளது உள்ளபடி உணர்ந்தால்தான், விளக்கமும், நிறைவும் கிடைக்கும் என்றுதான் தன் வேதாத்திரிய பயிற்சிகளையும் வடிவமைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

வாழ்க வளமுடன்.

-

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?


துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?


பதில்: 

பெரும்பாலான யோக சாதனை நிலையங்களில், துரியாதீத தவம் கிடையாது. அதுகுறித்து அவர்களுக்குத் தெரியாது. அதை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், துரியாதீத தவம் என்பது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தானாக வடிவமைத்து, தன் அன்பர்களுக்கும், இந்த உலகுக்கும் தந்த ஒரு அற்புதமான தியானமும் தவமும் ஆகும்.

யோகத்தில், ராஜயோகமாக கருதப்படும் நிலையில், சகஸ்ரதாரா என்ற 1008 இதழ் தாமரைக்கு ஒப்பாக சொல்லும், துரியம் என்ற தவ நிலைதான் உயர்வானதாகும். துரியத்திற்கு மேலான தவம் இல்லை என்பதுதான் இங்கே இருக்கும் நிலை. ஆனால் வேதாத்திரியத்தில், கூடுதலாக ‘துரியாதீதம்’ உண்டு. அது ஏன்? எப்படி? எதற்காக? என்பதெல்லாம் இன்னொரு பதிவாக பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் கேட்ட, கேள்விக்கு வரலாம்.

துவாத சாங்கம் என்பது ஓர் ஆதாரமோ, மைய சக்கரமோ, நிலையோ அல்ல என்பது தான் உண்மை. ஆனால் அதை அனுமானமாக, உளப்பூர்வமாக, உணர்வாக நாம் அறியலாம். இது யோகத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு நிலைதான் என்பதும் உண்மை. இந்த துவாத சாங்கம் குறித்து அனேக யோக சாதனையாளர்களும் சொல்லியுள்ளனர். பொதுவாகவே, ஜடப்பொருளோ, உயிர்ப்பொருளோ எடுத்துக்கொண்டால், அவற்றைச்சுற்றிலும் ஒரு அலை இயக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது நவீன விஞ்ஞானத்தாலும் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும். அந்த அலை குறிப்பிட்ட வண்ணங்களில் கூட இருக்கிறது என்று, அகச்சிவப்பு கதிர் காமெரா, புற ஊதா கதிர் காமெரா இவற்றின் வழியாக, ஒளிப்படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியான அலை இயக்கம், மனிதனுக்கும் இருக்கும்தானே? ஆம். அவனுக்குள்ளாக இயங்கும் ஆற்றலானது. அவனைச் சுற்றிலும், உடலுக்கு வெளியில், குறிப்பாக ‘ஒருஅடி தூரத்தில்’ வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அலை இயக்கம் சிலவேளைகளில் சுருங்கவும் செய்யலாம், கூடுதலாக விரியவும் செய்யலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இப்போது அது நமக்கு தேவையில்லை. இந்த ஒருஅடி தூர அளவிற்கு (12 அங்குலம் / 12Inch) அளவினால அலை இயக்கத்திற்கு, ஓரு புள்ளியை ‘மானசீகமாக’ அமைக்கிறோம். அதுதான் தலைக்குமேலே, உச்சியில் இருந்து மேல்நோக்கிய நிலையில் இருக்கும் ‘துவாத சாங்கம்’ என்ற நிலையாகும். நீங்கள் தவம் செய்யும் பொழுது, உங்கள் மனதாலேயே அந்த இடத்தை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். மிகச்சரியாக இடத்தை தீர்மானிப்பதும், அங்கே கவனத்தை நிலைப்படுத்துவதும், மனதை ஒன்றினைப்பதும் கடினமே. எனினும் தொடர்ந்து தவம் செய்யச்செய்ய அது உங்களுக்கு கைகூடும் என்பது உறுதி.

        முக்கியமாக, இதை ஆரா (Aura) என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆரா என்பது வேறுமாதிரியான தன்மை கொண்டதாகும்.

வாழ்க வளமுடன்.

-

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

How I can relieve from the suffering, difficulties, tired and disappointments in life?


வாழ்க்கை முழுவதும் சோர்வு ஏமாற்றம் துன்பங்கள் நிரம்பியுள்ளன. அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. மேலும் சிக்கலில் வருந்துகிறேன். மாற்றம் பெறுவதற்கு வழி என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  என்னுடைய வாழ்க்கை முழுவதும் சோர்வு ஏமாற்றம் துன்பங்கள் நிரம்பியுள்ளன. அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. மேலும் சிக்கலில் வருந்துகிறேன். மாற்றம் பெறுவதற்கு வழி என்ன?


பதில்*:

இதற்கெல்லாம் காரணம் பிறரிடம் கற்பனையாகவே எதிர்பார்ப்பதுதான் (Imaginary Expectation). கற்பனை என்றால் அளவு மீறிய ஆசை.  அளவு மீறிய ஆசையை வைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும்  இன்னதைத் தரவேண்டும் இன்ன அளவில் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால்  அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது.  அவர் அவர்களுக்குத் தேவையிருக்கிறது. அவரவர்களுக்கு வாழ்க்கைச் சுதந்திரம் இருக்கிறது.  இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் நமக்கு அடங்கி நமது அதிகாரத்திற்கு உட்பட்டு நாம் சொன்னதையே செய்து கொண்டிருப்பார்களா? செய்வதே இல்லை செய்ய முடியாது செய்யவும் மாட்டார்கள்.

நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து 'என் கணவர் இப்படித்தான் செய்ய வேண்டும்  இதைத்தான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் செய்ய வேண்டும்.  என் மனைவி இதைத் தான் செய்ய வேண்டும்.  இதற்கு மேல் செய்யக்கூடாது என்ற அளவில் நமது ஆசையை முன் வைத்து எல்லை கட்டி கற்பனையை உருவாக்கிக் கொள்கிறோம்.  நிகழ்ச்சிகள் (செயல்) என்று வரும்போது இவர்கள் கற்பனையாக எதிர்பார்த்து இருந்தார்களே அதற்கு ஒன்றுகூட ஒத்து வராது. என்றைக்கு அமைதியாக இருக்க முடியும்? முடியாது.

ஆகையால்  எதிர்பார்ப்பதை அடியோடு விட்டு விட வேண்டும்.  அமைதி வேண்டும்  மகிழ்ச்சி வேண்டும்  நிறைவு வேண்டும் என்று சொன்னால் நான் சொல்லும் பயிற்சியைச் செய்து பாருங்கள். அதற்காகப் பணம் தேவையில்லை.  மனம் தான் தேவை.  தெளிவோடும் தீரத்தோடும் செய்ய வேண்டும். 

கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும்  மகனாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை. அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும். ஆனால்  மனைவி என்ற முறையில் கணவன் என்ற முறையில், மகன் என்ற முறையில் தாய் என்ற முறையில் வயதில், பொருளில், ஆற்றலில், அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்? இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சிந்தனை செய்து அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?  என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும் என்பது இல்லை.

அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால் உங்களுக்கு வர வேண்டியது நிற்காது வர வேண்டியது சரியாக வரும்.  அப்படி வரும்போது எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே அதுவும் இதுவும் இடிபடாது.  என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.

எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம் சோர்வு துன்பம் பகை பிணக்கு எல்லாம் வருகின்றன. நான் என்ன செய்ய வேண்டும்? என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.

மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம். முயன்றால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும் அமைதி கிடைக்கும்.  அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.

எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான்.  எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ? என்றுதான் இருப்பான். எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை. அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது.  நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலாவது  -  எதிர்பார்த்தல் தவிர்ப்பது.

இரண்டாவது  -  பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.

மூன்றாவது  -  எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.

இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி குடும்பநலம் பெறலாம்.அப்போது உலகமே நம்முடையதுதான். பக்கத்தில் இருப்பவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.

வாழ்க வளமுடன்.

*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

The solution and best advice to the husband and wife!


குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        குடும்பத்திலே அமைதி வேண்டுமென்றால், மூன்று ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதுமானது. அது அந்த கணவன் மனைவி இருவருமே செயல்படுத்தவேண்டும். அது 1. விட்டுக்கொடுத்தல் 2. பொறுமை 3. தியாகம் ஆகியன ஆகும். இவற்றை அந்த வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவேண்டுமா? என்று கேட்டால் ஆம். ஆனால் அதற்கு அவசியமிருக்காது. ஏனென்றால் தினமுமே நீங்கள் கணவனாகவும், மனைவியாகவும் இவற்றை செயல்படுத்தும்பொழுது, மூன்று மாதத்திற்குள்ளாக அது உங்களுக்குள்ளாக நிறைந்து, உங்கள் இயல்பாகவேகூட மாறிவிடும். பிறகு நீங்கள் இயல்பாகவே விட்டுக்கொடுத்தல், பொறுமை, தியாகத்தை கடைபிடிப்பீர்கள் என்பதுதான் உணமை.

நீங்கள் சாதாரணமாகப் பெண்மையைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனி மேல் இந்தப் பண்பாடு எல்லா இடத்திலும் வரவேண்டும்.

உலகத்திலேயே நட்பு மிகமிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே கணவன் – மனைவி நட்பைப் பற்றிச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்த விதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும், மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.

அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம், குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

What is the meaning of twin seven worlds?


பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும்  ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நாம் வசிக்கும் பூமியில் இருந்து சூரியனை நோக்கிய வரிசையில் பூமி, சந்திரன், சுக்கிரன், புதன், சூரியன், ராகு, கேது ஆகிய ஏழு கோள்களின் வரிசை அமையும். இதை மேலேழுலகம் என்றார்கள் முன்னோர்கள்.

பூமியிலிருந்து மறுபக்கம் நோக்கினால் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்சியூன், புளூட்டோ ஆகிய ஆறு கோள்களும் உள்ளன. அதற்கப்பால் சுத்தவெளிதான் உள்ளது என்றெண்ணிய முன்னோர்கள் ஏழாவதாக உள்ளதைப் பாழ்தளம் (பேச்சு வழக்கில் இன்று பாதாளம்) என்றனர். இதைக் கீழேழுலகம் என்றார்கள், இன்றைய விஞ்ஞானக் கூற்றுப்படியும் இவைதான் காணமுடிகிறதே தவிர வேறு மேலேழு, கீழேலுலகங்கள் இல்லை.

மக்களுக்கு மெய்ப்பொருள் உண்மைகளை சொல்லும் வழியில் சில கதைகளை சொல்லிவைத்தார்கள். அந்த கதைகள் பின்னாளில் பலராலும் கட்டுக்கதைகளாகி, நம்முன்னால் வளர்ந்தும், பெருகியும், உண்மையை மறைத்துக்கொண்டும் நிற்கிறது. எதுவென்றாலும் அதில் இருக்கிற உண்மையை ஆராய்ந்து பார்க்கும் விழிப்புணர்வு அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.

How the meditation is helping to our mind in yoga?


தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

மனம் உள் ஒடுங்கவும் பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது.  மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று.  மனதின் புலன் இயக்க வேகத்தை எல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்றுபடுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. 

எல்லைக்கு உட்படாத மனம் ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை  பரம்பொருளை பரவெளியை உணர முடியும்.  அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் உள்ளதே அகத்தவம் (Simplified Kundalini Yoga - SKY) எனும் குண்டலினி யோகமாகும். 

அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும்.   அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்க முறையான உளப்பயிற்சி (Systematic Psychic Practice) அவசியமாகிறது.  ஆன்மாவிற்கு மேல்நோக்கு வேகமூட்டும் தியானப்  பயிற்சியை குருவின் மூலம் தான் பெற வேண்டும்.  

அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால் ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல இந்த பிரபஞ்சத்தில்  இந்த உலகில்  நடப்பில் உள்ள உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது. 

எனவே மனதினுடைய (Mind) இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும்.  இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னதமான உளப்பயிற்சியே குண்டலினியோகமாகும்". 

வாழ்க வளமுடன்.

-

Why need importance to Shanti Yoga Meditation?


சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?


பதில்: 

வேதாத்திரியத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால், இந்த கேள்வி இயல்பானது. ஆனால், நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து பயிற்சிகளில் பல மாதம், ஆண்டு அனுபவம் உள்ளவர் என்றால், சாந்திதவம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பது நிச்சயமானது. அதுபோலவே நீங்கள், வேதாத்திரிய தவங்களை சரியாக செய்யவதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்பதும் உண்மையாகும்.

எந்த ஒரு யோக அமைப்பிலும் இல்லாத ஒரு சிறப்பு, மனவளக்கலையில் உண்டு. அந்த சிறப்பை தருவதற்கு நிறைய இருந்தாலும் கூட, மிக முக்கியமான ஒன்றுதான் இந்த சாந்தி யோகம். கூடுதலாக, இந்த சாந்தி யோகம் பரஞ்ஜோதி மகான் அவர்களால், வேதாத்திரி மகரிஷிக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு, பிறகு மனவளக்கலையிலும் இணைக்கப்பட்டது என்பது வரலாறு. எனவே நாம் பரஞ்சோதி மகானுக்கும் நன்றியை, வாழ்த்தை வழங்கவேண்டியதும் அவசியம்.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவம் எதற்காக? ஒரு உதாரணம் வழியாக அறியலாமா? இதோ!

-

ஒரு புதிய இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். பரிசோதனை ஓட்டம் ஒட்டிப்பார்த்து, மிகவும் திருப்தியோடும், மன நிறைவோடும் வாங்கிவிட்டீட்கள். புதிய தொழில்னுட்பங்கள் நிறைந்த அந்த வாகனம், பார்க்கவும் அழகு, அதன் செயல்திறனிலும் அழகு. வழக்கமான விதிமுறைகள் பின்பற்றி வீட்டிற்கு கொண்டுவந்தும் நிறுத்திவிட்டீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் நண்பரும், அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சுற்றுலா திட்டமிட்டு அதிகாலை, உங்கள் புதிய வாகனத்தில், நிறைவான பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பயணிக்கிறீர்கள். பயணம் மிகச்சிறப்பாக ஆரம்ப்பிக்கிறது.

அதிகாலை சூரியவெளிச்சமும், குளிர்ந்த காற்றும் மனதுக்கு இதமாகிறது. நண்பரோடு பேசிக்கொண்டே நீங்கள், வாகன ஓட்டத்தின் சுகத்தையும் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் வேகத்தை அதிகப்படுத்தி பயணிக்கலாமே? என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அந்த நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இப்போது வாகனம் முன்னைவிட சீறிப்பாய்கிறது. காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு போவதுபோல முன்னேறுகிறீர்கள். வேகம், இன்னும் வேகம். மிக அற்புதமான அனுபவத்தை பெறுகிறீர்கள். நல்லவேகத்தில் சென்றுகொண்டே இருக்கும்பொழுது, உங்கள் வாகனத்தின் இன்ஜின் நிறுவிட்டது, வண்டியின் வேகம் குறைந்து நின்றுவிட்டது. நல்லவேளையாக சாலையின் ஓரம் வந்துவிட்டீர்கள். இறங்கி வண்டியை பரிசோதித்தால் ஏதும் குறையில்லை. மறுபடி வாகனத்தை இயக்கினால் எதுவும் நடக்கவில்லை. கிக்கர், ஸ்டார்ட் பட்டன் எதுவும் வேலை செய்யவில்லை. இப்போதைக்கு வண்டியை நிறுத்தலாம். இல்லையேல் தள்ளிக்கொண்டு போகலாம். நீங்களும் உங்கள் நண்பரும் அதில் சோர்ந்துவிட்டீர்கள். மனம் தளர்ந்துவிட்டீர்கள். இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொண்டீர்கள்.

உடனே, வாகன விற்பனையத்திற்கு அழைப்பு விடுத்து நிலைமையை சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவதை அவர்கள், கலந்தாலோசிக்கிறார்கள். உடனே அங்கே இருக்கும் ஒருவர், அந்த மெக்கானிக் புரிந்துகொண்டார். 

‘ரொம்ப வேகமா போனீங்களா சார்?’

‘ஆமாங்க, எப்படி இருக்கும்னு செக் செய்தோம்’

‘அதான் சார் பிராப்ளம். புதுவண்டி அவ்வளோ வேகமா போகக்கூடாது, என்ஜின் ஜாம் ஆகிருக்கும். காத்திருங்க நாங்க வந்து அங்கேயே சரி செய்கிறோம்’

இனி வேறு வழி இல்லை, அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லையா?!

-

இந்த விளக்கத்தில் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும்தானே? நாம் தவம் இயற்றுவதில் ஆற்றல் தேக்கம் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால், நமக்கு தலைபாரமும், உடல் வலியும் சோர்வும் வந்துவிடும். அதனால் நம்முடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஏனென்றால் நம்முடைய உடலும், மனமும் தவத்திற்கும், தவ ஆற்றலுக்கும் பழகவில்லை. அந்த பழக்கம் வரும்வரை, வாரத்தில் ஒருநாள், சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம் அவசியம். தவ ஆற்றலை, மீண்டும் ஒருநாள் மட்டுமாவது மூலாதர மையத்தில் நின்று இயங்கச்செய்யவேண்டும். அப்படிச் செய்தால், அதீத தவ ஆற்றல், உடல் ஆற்றலாகமாறி உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும்.

இதனால்தான் சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை நீங்களும் கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்

-

Please explain the Realization of the Consciousness by all ways?


இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

அன்பும் கருணையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமானால் இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.  சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதல்ல என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.  ஆனால் பருவம் வந்த பின் புற வழிபாட்டிலிருந்து அக வழிபாடு தொடங்க வேண்டும்.  அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவ சாதனை அவசியம் வேண்டும். 

அப்போது தான் மனம் ஒரு சமநிலையிலே இருக்கவும் உயர் நிலையிலே அறிவு இயக்கவும் முடியும்.  இங்கே தான் மனம் அமைதி பெரும்.  எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. 

அதனை எந்தப் பொருளிலும் எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லைகட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையை பெற முடியாது. பொருளில் இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.   அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில் இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டுவிட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும். 

மேலும் பரநிலையுணர்வும் அதில் அடங்கி இணைந்து நிலைபெறும் பேறும் கிடைக்காத போது அறிவு தான்-தனது, என்னும் தன்முனைப்பில் உணர்ச்சிவயமாகி புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும்.  தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்புநிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து நிறைவும் அமைதியும் பெறும்.

    பக்தி என்ற நிலையிலே நாம் இறை என்ற மெய்ப்பொருள் உண்மையை அறிந்து கொண்டாலும், யோகம் என்ற நிலையில்தான், முழுமையாக உணர்ந்து கொள்கிறோம் என்பதே இங்கே விளக்கமாகிறது.

வாழ்க வளமுடன்.
-

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        நாம்  வாழும் இந்த நவீன அணுவியல், வானியல் விஞ்ஞான உலகில், மேட்டர் என்ற நிறையையும், எனர்ஜி என்ற ஆற்றலையும், தனிப்பட்டு விளக்கிட முடியாமல், இருப்பதை அப்படியே ஏற்று, எல்லாவகையான முன்னேற்றங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆன்மீக வழியில், உண்மை உணர்ந்த மெய்ஞானிகள், இந்த மேட்டர் மற்றும் எனர்ஜியில் என்ன உள்ளது என்பதையும், அதை எப்படி உணர்ந்தும் கொள்ளலாம் என்றும் விளக்குகிறார்கள். இதோ வேதாத்திரி மகரிஷி, அதனில் இருக்கும் உள்ளடக்கத்தை விளக்குகிறார்.

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-

We are supernatural in evolution but why we are struggle on life by simple things?


மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

இந்த உலகத்தில், பரிணாமத்தின் வழியாக, இறையாற்றலின் தன்மாற்றமாகவே ஜீவனாகி,  மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்து வருகிறோம். என்றாலும் அந்த வாழ்க்கையில், நீங்கள் குறிப்பிட்டதுப்போலவே வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுகிறோம். அதுகுறித்து சிந்திப்போம்.

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும்  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்?  ஏன் அமைதியான  சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம் ?  ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன்.   நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டு போகிறீர்கள்.  போகும் வழியில் விதவிதமாக பூக்களும் பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன,  அவற்றை வாங்கி பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.  பின்னர் கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால் அவற்றை வைக்க பையில் இடமில்லை, பையில் தான் ஏற்கனவே நிரப்பிவிட்டீர்களே!  

இப்போது உங்கள் பிரச்சனை என்ன?  ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு  எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ,  அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா?  அல்லது காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா?  கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.  

ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம்.

வாழ்க வளமுடன்.

-

What kinds of benefit will rise when we greets someone?


மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

யாரும் யாரையும் எளிதில் வாழ்த்திவிட மாட்டார்கள். அதற்கென்று ஒரு நிறைவான மனமும், சூழ்நிலையும் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் ஏதேனும் ஒருவகையில் இரண்டுபேருக்குமான நன்மையும் இருக்க வேண்டும், கிடைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்போதுதான் அவரை / பிறரை வாழ்த்த முடியும் என்று முடிவும் செய்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியா கணக்கு போட்டுக் கொண்டு வாழ்த்த வேண்டியதில்லை. 

மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் ஏற்படுகின்றது.  ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.  இரண்டு தடவை நாலு தடவை வாழ்த்த வாழ்த்த,  நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.  அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.  எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்.  நல்லவர்களாக மாற்றிவிட முடியும். 

நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால் வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே அந்த எல்லையிலே அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைக்கும் போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்

வாழ்க வளமுடன்.

-

What happening between ourselves and our mind when we practice the meditation?


தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.

ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம்  செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள். 

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.  அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம்.  ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.

ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். 

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்

How to control the unwanted thoughts that arise in the mind?


மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும்.  இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். 

இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன்,  இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. 

அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும்.  அப்போது மனம் தூய்மையாக இருக்கும்.  மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.

மனம் வெளுக்க மருந்து உண்டு:

வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.

எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.  அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள்.  பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும். 

மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்.

-

Why human need to understand himself in the earth lifetime?


வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

உலகில் பிறந்து வாழ்கின்ற மனிதர்களாகிய நாம், நீண்ட நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து பழகியிருக்கிறோம். இப்படியே இருக்கிற வரையிலே மனிதனானவன் மனிதத்தன்மையையோ தெய்வத்தன்மையையோ அடைய முடியாது. அதற்கு மனம் அமைதி நிலைக்கு வரவேண்டும், சிந்தனை உயர வேண்டும் நுன்மை பெற வேண்டும் உண்மை உணர்வு வேண்டும். 

அப்பொழுதுதான் மனிதன் மனிதனாக வாழவும் மகிழ்ச்சி, இன்பம் இவையெல்லாம் கிட்டுகின்ற நிலைமையும் உண்டாகும்.  இந்தக் குறிக்கோள் கொண்டே மனதிற்கு முதலிலே ஒரு பயிற்சியைக் கொடுக்கிறோம். குண்டலினியோகம் கற்று உயிர் (Life force) மேல் மனம் செலுத்துகிறோம்.  ஜீவகாந்த சக்தி (Bio-Magnetism) புலன்கள் மூலமாகவோ எண்ணத்தின் மூலமாகவோ தான் ஜீவகாந்த சக்தி செலவாகிற இடம், அது குழாய் போல  அந்தக் குழாய் அதிகமாகத் திறந்திருந்தால் தானே ஜீவகாந்த சக்தி அதிகம் செலவாகும்.  அந்தக் குழாயின் அடைப்பானைத் திருப்பி நீங்கள் மீண்டும் உயிர்மேலே மனத்தை வைக்கிறீர்கள். எங்கே charge ஆகிறதோ அங்கேயே கொண்டு வந்து விடுகிறோம், அதுதான் தவம் (Energy Meditation).

மனவளக்கலை மன்றங்களில் குண்டலினியோகப் பயிற்சியில், உயிர்ச்சக்தியை மேலே எழுப்பி மனதால் அதைப் பற்றித் தியானம் செய்யும்போது மன அலை நீளம் நுணுகி அமைதிக்கு வரும்.  அமைதியினால் மன உறுதி ஏற்படும்.  அறிவு கூர்மை ஏற்படும். அனாவசியமாக மனோ சக்தி செலவாகாது. எப்போதும் சிந்தனையாற்றல் பெருகிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுத்துச் செயல் செய்வதற்கு நமது மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.

எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இன்னும்.. நான் யார்? உடலா? உயிரா? மனமா? இந்த உடல், உயிர், அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான அகத்தாய்வுப் பயிற்சியை அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது மனவளக்கலை மன்றம். 

இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.  நாமாக மனதைப் பளுவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இலேசாக ஆக்கிக் கொள்கிறோம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். 

தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகள் செய்ததனால் உடலில் நோய்கள் உண்டாயின. இன்னும் சில நோய்களும் உணடாகலாம். அதனால் வரப்போகிற நோய்களைத் தடுக்கவும் வந்த நோய்களைப் போக்கிக் கொள்ளவும் எளியமுறையில் சில உடற்பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவைகளைச் சரிப்படுத்தி உடலுக்கும, உயிருக்கும் நட்பைச் சரியாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் நலமாக இருக்கும். உடல் நலமும் வேண்டும் மனவளமும் வேண்டும். எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோக பயிற்சி முறையானது (Simplified Kundalini Yoga - SKY) மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதை திடப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்.