Why human need to understand himself in the earth lifetime?
வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
உலகில் பிறந்து வாழ்கின்ற மனிதர்களாகிய நாம், நீண்ட நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து பழகியிருக்கிறோம். இப்படியே இருக்கிற வரையிலே மனிதனானவன் மனிதத்தன்மையையோ தெய்வத்தன்மையையோ அடைய முடியாது. அதற்கு மனம் அமைதி நிலைக்கு வரவேண்டும், சிந்தனை உயர வேண்டும் நுன்மை பெற வேண்டும் உண்மை உணர்வு வேண்டும்.
அப்பொழுதுதான் மனிதன் மனிதனாக வாழவும் மகிழ்ச்சி, இன்பம் இவையெல்லாம் கிட்டுகின்ற நிலைமையும் உண்டாகும். இந்தக் குறிக்கோள் கொண்டே மனதிற்கு முதலிலே ஒரு பயிற்சியைக் கொடுக்கிறோம். குண்டலினியோகம் கற்று உயிர் (Life force) மேல் மனம் செலுத்துகிறோம். ஜீவகாந்த சக்தி (Bio-Magnetism) புலன்கள் மூலமாகவோ எண்ணத்தின் மூலமாகவோ தான் ஜீவகாந்த சக்தி செலவாகிற இடம், அது குழாய் போல அந்தக் குழாய் அதிகமாகத் திறந்திருந்தால் தானே ஜீவகாந்த சக்தி அதிகம் செலவாகும். அந்தக் குழாயின் அடைப்பானைத் திருப்பி நீங்கள் மீண்டும் உயிர்மேலே மனத்தை வைக்கிறீர்கள். எங்கே charge ஆகிறதோ அங்கேயே கொண்டு வந்து விடுகிறோம், அதுதான் தவம் (Energy Meditation).
மனவளக்கலை மன்றங்களில் குண்டலினியோகப் பயிற்சியில், உயிர்ச்சக்தியை மேலே எழுப்பி மனதால் அதைப் பற்றித் தியானம் செய்யும்போது மன அலை நீளம் நுணுகி அமைதிக்கு வரும். அமைதியினால் மன உறுதி ஏற்படும். அறிவு கூர்மை ஏற்படும். அனாவசியமாக மனோ சக்தி செலவாகாது. எப்போதும் சிந்தனையாற்றல் பெருகிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுத்துச் செயல் செய்வதற்கு நமது மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.
எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இன்னும்.. நான் யார்? உடலா? உயிரா? மனமா? இந்த உடல், உயிர், அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான அகத்தாய்வுப் பயிற்சியை அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது மனவளக்கலை மன்றம்.
இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். நாமாக மனதைப் பளுவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இலேசாக ஆக்கிக் கொள்கிறோம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகள் செய்ததனால் உடலில் நோய்கள் உண்டாயின. இன்னும் சில நோய்களும் உணடாகலாம். அதனால் வரப்போகிற நோய்களைத் தடுக்கவும் வந்த நோய்களைப் போக்கிக் கொள்ளவும் எளியமுறையில் சில உடற்பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவைகளைச் சரிப்படுத்தி உடலுக்கும, உயிருக்கும் நட்பைச் சரியாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் நலமாக இருக்கும். உடல் நலமும் வேண்டும் மனவளமும் வேண்டும். எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோக பயிற்சி முறையானது (Simplified Kundalini Yoga - SKY) மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதை திடப்படுத்த வல்லது.
வாழ்க வளமுடன்.