How to control the unwanted thoughts that arise in the mind?
மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும். இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள்.
இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன், இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது.
அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும். அப்போது மனம் தூய்மையாக இருக்கும். மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.
மனம் வெளுக்க மருந்து உண்டு:
வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.
எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம். அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள். பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும்.
மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.
வாழ்க வளமுடன்.
-