How the practice of silence is the solution for the purity of mind? | CJ for You

How the practice of silence is the solution for the purity of mind?

How the practice of silence is the solution for the purity of mind?


மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மௌனம் என்பது மனதூய்மை பெறுவதற்கான பயிற்சி என்று சொல்லுகிறீர்களே? அது எப்படி என்று விளக்கம்தருக.


பதில்:

மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சி மவுனம்(Silence) 
ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம்.  மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்ட கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம். 

இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்?  நாம் கொடுக்கிறோம்.  நமக்கு இறைவன் கொடுத்த மௌனம் ஒன்று இருக்கிறது. அதுதான் ராத்திரியில் தூக்கம். அங்கே மறந்து விடுகிறோம்.  அதனால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.  

எனக்கு வேலையில்லை.  அதனால் ஒரு மாதம் மௌனத்தில் உட்கார்ந்தேன். முடிந்தவர்கள் ஒருநாள் இரண்டு நாள் உட்கார்ந்தார்கள்.  சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது.  அதற்காக வருந்தவே வேண்டியதில்லை.

யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள்.  அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இதற்கு நேரம் தேவையில்லை.  இந்த மவுனத்தை எல்லோரும்பண்ண வேண்டும்.

ஒரு நாளைக்கு மவுனம் என்று சொல்லிவிட்டு  வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  பத்துப்பேர் இருக்கிற  வீட்டில் நீங்கள் மௌனமாக இருந்தீர்களானால் அவர்களுக்கு அது பொருந்தாது.  ஒருத்தர் உட்கார்ந்து மௌனமாக இருக்கிறார்களே இருக்கட்டும் என்று அவர்களால் இருக்கவும் முடியாது. எப்படியாவது தொந்திரவு (disturbance) வரும். 

அப்போது ஒருவர் வந்து "ஐயா இருக்கிறார்களா?" என்று கேட்பார்.  "அதோ உட்கார்ந்து கொண்டு இருக்கு பாருங்கள்" என்பார்கள் !.  ஏன் என்றால் அவர்களுக்கு சுயகவனம் (attention) வேண்டும்.  அங்கே சுயகவனம் (attention) இல்லை.  ஆகையால் அனேகருக்கு வீட்டில் மௌனம் இருக்க முடியாது என்று எல்லோரும் சேர்ந்து "அறிவுத் திருக்கோயில்" என்று ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஒருநாளைக்கு இங்கு வந்து மௌனம் இருக்கலாம்.  இந்தக் காலத்தில்தான் இருக்கலாம் என்று இல்லை.  இருப்பதற்கு இங்கு இடம் இருக்கிறது.  என்றைக்கு வந்தாலும் மவுனம் இருக்கலாம்.  

        நீங்கள் இரண்டு மூன்று நாள் மௌனம் இருக்கும்  வரைக்கும் மேலாக இருக்கிற அலையெல்லாம் வந்து கொண்டிருக்கும்.  போகப் போக ஆழமாகவுள்ள பதிவுகளெல்லாம் வரும்.  அதற்கும் மேலே போனால் இயற்கை உண்மைகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.

ஏனென்றால் நீங்கள் பேசாதிருக்கும் போது இறைவன் பேசுகிறான்.  இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை.  அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் அதற்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மவுனம் இருக்க வேண்டும். 

மவுனத்தை உணர்ந்து, அதன் பெருமையை, நன்மையை உணர்ந்து செய்யுங்கள்.  பிறர் கருத்தை ஒத்துக் கொள்ள முடியாதபோது அவர்களிடம் எரிந்து விழாமல் அந்த இடத்தில் மவுனமாக இருப்பது நல்லது.  எல்லோரும் தூங்கும்போது மவுனமாகத்தான் இருக்கிறார்கள்.  தூங்கும்போது மவுனமாக இருந்தால் அமைதி வந்துவிடுகிறதே தவிர அந்த அமைதியினால் அறிவு விருத்தி ஆவது இல்லை.  எனவே இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் மவுனத்தில் அதன் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.

எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மவுனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி (Bio-Magnetic force) அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும்.  அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும்.  எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.  

இத்தகைய பெருமையெல்லாம் தரக்கூடியது மௌன நோன்பு.  இரண்டு நாள், மூன்றுநாள் என்று புள்ளி விபரம் (statistics) கொடுக்காமல் மவுனத்தில் சாதித்தது என்ன? என்று பாருங்கள். வீட்டிற்குச் செல்லும்போது மௌனத்தின் பயனை அனுபவிக்க வேண்டும். 

அப்படியில்லாமல் "நீங்க எங்கே போய்விட்டு வந்தீர்கள் எட்டு நாளா?.. என்றால், "நான் மௌனத்திற்காக அறிவுத் திருக்கோயிலுக்குப் போய்விட்டு வந்தேன்". "ஆமா, அறிவுத்திருக்கோயிலில் என்ன பண்ணினீர்கள்?"

"ஆ, அதையெல்லாம் உனக்கு சொல்லிக் கொண்டு இருக்க முடியாது".  உனக்குத்தான் ஒன்றும் புரியாது" என்று கூறி உடனே ஒரு சண்டை. இது என்ன மவுனம்?

அமைதியாக இருந்து இன்னும் இரண்டு தடவை யார் கேட்டாலும் சரி. அதற்கு நல்ல பதிலைச் சொல்லி, முடிந்தவரைக்கும் சொல்ல வேண்டும்.  முடியாதபோது நான் இன்னும் விளக்குகிறேன். மீண்டும் விளக்குகிறேன்.  என்று சொல்லலாம் அல்லவா?

 "மவுனத்தின் பயனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும். மவுனத்திலே ஒரு பெரிய ஆத்ம சக்தி உருவாவதை உணர வேண்டும்.

மனிதனுடைய கருமையத்தை தூய்மையான எண்ணங்களால் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் ஆயிரமாயிரம் பங்கு விளைவுகளை கொடுத்துக் கொண்டேயிருக்கும். மனத்தூய்மை செய்வதற்கு நல்லதோர் பயிற்சிதான் மவுனம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்!
-