Why need importance to Shanti Yoga Meditation?
சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?
பதில்:
வேதாத்திரியத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால், இந்த கேள்வி இயல்பானது. ஆனால், நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து பயிற்சிகளில் பல மாதம், ஆண்டு அனுபவம் உள்ளவர் என்றால், சாந்திதவம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பது நிச்சயமானது. அதுபோலவே நீங்கள், வேதாத்திரிய தவங்களை சரியாக செய்யவதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்பதும் உண்மையாகும்.
எந்த ஒரு யோக அமைப்பிலும் இல்லாத ஒரு சிறப்பு, மனவளக்கலையில் உண்டு. அந்த சிறப்பை தருவதற்கு நிறைய இருந்தாலும் கூட, மிக முக்கியமான ஒன்றுதான் இந்த சாந்தி யோகம். கூடுதலாக, இந்த சாந்தி யோகம் பரஞ்ஜோதி மகான் அவர்களால், வேதாத்திரி மகரிஷிக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு, பிறகு மனவளக்கலையிலும் இணைக்கப்பட்டது என்பது வரலாறு. எனவே நாம் பரஞ்சோதி மகானுக்கும் நன்றியை, வாழ்த்தை வழங்கவேண்டியதும் அவசியம்.
சாந்தி யோகம் என்ற சாந்தி தவம் எதற்காக? ஒரு உதாரணம் வழியாக அறியலாமா? இதோ!
-
ஒரு புதிய இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். பரிசோதனை ஓட்டம் ஒட்டிப்பார்த்து, மிகவும் திருப்தியோடும், மன நிறைவோடும் வாங்கிவிட்டீட்கள். புதிய தொழில்னுட்பங்கள் நிறைந்த அந்த வாகனம், பார்க்கவும் அழகு, அதன் செயல்திறனிலும் அழகு. வழக்கமான விதிமுறைகள் பின்பற்றி வீட்டிற்கு கொண்டுவந்தும் நிறுத்திவிட்டீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் நண்பரும், அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சுற்றுலா திட்டமிட்டு அதிகாலை, உங்கள் புதிய வாகனத்தில், நிறைவான பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பயணிக்கிறீர்கள். பயணம் மிகச்சிறப்பாக ஆரம்ப்பிக்கிறது.
அதிகாலை சூரியவெளிச்சமும், குளிர்ந்த காற்றும் மனதுக்கு இதமாகிறது. நண்பரோடு பேசிக்கொண்டே நீங்கள், வாகன ஓட்டத்தின் சுகத்தையும் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் வேகத்தை அதிகப்படுத்தி பயணிக்கலாமே? என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அந்த நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இப்போது வாகனம் முன்னைவிட சீறிப்பாய்கிறது. காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு போவதுபோல முன்னேறுகிறீர்கள். வேகம், இன்னும் வேகம். மிக அற்புதமான அனுபவத்தை பெறுகிறீர்கள். நல்லவேகத்தில் சென்றுகொண்டே இருக்கும்பொழுது, உங்கள் வாகனத்தின் இன்ஜின் நிறுவிட்டது, வண்டியின் வேகம் குறைந்து நின்றுவிட்டது. நல்லவேளையாக சாலையின் ஓரம் வந்துவிட்டீர்கள். இறங்கி வண்டியை பரிசோதித்தால் ஏதும் குறையில்லை. மறுபடி வாகனத்தை இயக்கினால் எதுவும் நடக்கவில்லை. கிக்கர், ஸ்டார்ட் பட்டன் எதுவும் வேலை செய்யவில்லை. இப்போதைக்கு வண்டியை நிறுத்தலாம். இல்லையேல் தள்ளிக்கொண்டு போகலாம். நீங்களும் உங்கள் நண்பரும் அதில் சோர்ந்துவிட்டீர்கள். மனம் தளர்ந்துவிட்டீர்கள். இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொண்டீர்கள்.
உடனே, வாகன விற்பனையத்திற்கு அழைப்பு விடுத்து நிலைமையை சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவதை அவர்கள், கலந்தாலோசிக்கிறார்கள். உடனே அங்கே இருக்கும் ஒருவர், அந்த மெக்கானிக் புரிந்துகொண்டார்.
‘ரொம்ப வேகமா போனீங்களா சார்?’
‘ஆமாங்க, எப்படி இருக்கும்னு செக் செய்தோம்’
‘அதான் சார் பிராப்ளம். புதுவண்டி அவ்வளோ வேகமா போகக்கூடாது, என்ஜின் ஜாம் ஆகிருக்கும். காத்திருங்க நாங்க வந்து அங்கேயே சரி செய்கிறோம்’
இனி வேறு வழி இல்லை, அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லையா?!
-
இந்த விளக்கத்தில் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும்தானே? நாம் தவம் இயற்றுவதில் ஆற்றல் தேக்கம் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால், நமக்கு தலைபாரமும், உடல் வலியும் சோர்வும் வந்துவிடும். அதனால் நம்முடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஏனென்றால் நம்முடைய உடலும், மனமும் தவத்திற்கும், தவ ஆற்றலுக்கும் பழகவில்லை. அந்த பழக்கம் வரும்வரை, வாரத்தில் ஒருநாள், சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம் அவசியம். தவ ஆற்றலை, மீண்டும் ஒருநாள் மட்டுமாவது மூலாதர மையத்தில் நின்று இயங்கச்செய்யவேண்டும். அப்படிச் செய்தால், அதீத தவ ஆற்றல், உடல் ஆற்றலாகமாறி உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும்.
இதனால்தான் சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை நீங்களும் கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.
வாழ்க வளமுடன்
-