Why Vethathiriyam not mentioned Shivan, Shakti and all?
ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?
பதில்:
அன்பரே, மிக நீண்ட ஆராய்ச்சிக்குரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதை இங்கே எழுத்தில் விளக்கமாக சொல்லிவிட முடியாது. அதை நேரடியாக, உங்கள் முன்னால் சொன்னால்தான் சரியாக புரிந்துகொள்ளவும் முடியும். உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கவேண்டும் என்றால், யாரேனும் உங்கள் ஆசிரியரிடம் கூட கேட்டு தெரிந்துகொள்ளலாம். எனினும் சில அடிப்படை உண்மைகளை, விளக்கங்களை இங்கே தருகிறேன். ஓரளவுக்கு உங்களுக்கான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.
ஒரு உண்மையை, மதிப்பான பொருளை, நிகழ்வை தெரிந்துகொண்ட நீங்கள், அதை பிற மக்களிடமும், சராசரி மனிதனிடமும், உங்களைவிட கல்வியில் ஆரம்பநிலையில் உள்ளவரிடம், கல்வி அறிவே இல்லாதவரிடம் சொல்லுவதென்றால் எப்படி சொல்லுவீர்கள்? ‘இது இப்படியானது’ என்று உயர்வாகத்தானே சொல்லுவீர்கள். அப்படி சொல்லவில்லை என்றால், அதன் தரம் தாழ்ந்துவிடும். மக்கள் அதை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள். தேவையும், அவசியமும் இல்லை என்று போய்விடுவார்கள். உண்மைதானே?
அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளை உணர்ந்தவராக இருந்தால்? அதை எப்படி சொல்லுவீர்கள்? இப்பொழுது ஒரு விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுபோலவே, மெய்ப்பொருள் உண்மையறிந்த ஞானிகள், மனிதனி பிறப்பின் கடமையே, அந்த மெய்ப்பொருளை உணர்வதுதான் என்பதை, மக்களுக்கு விளக்கம் தருவதற்காகவே, அந்த மெய்ப்பொருளை ‘சிவம்’ என்று சொன்னார்கள். உயிரினங்களை ‘சீவன்’ என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலையானது, உயர்வானது, மெய்யானது என்று பொருள் தரும் வார்த்தையாகும். ஆனால் பின்னாளில்தான் அது சிவனாக மாறிவிட்டது. சீவன் என்பதற்கு பொருத்தமாகக்கூட சிவன் வந்திருக்கலாம்.
மெய்ஞானிகள் சொன்ன, சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும், ஆன்மீகவாதிகள் சொல்லுகிற சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது தெளிவானது. பின்னது திறை மறைக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டதாகும். நாமும் பழங்காலமாக மெய்ஞானிகள் சொன்னதை விட்டுவிட்டு, ஆன்மீகவாதிகள் சொன்னதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். உண்மைதானே? சிவம் என்றாலும் சிவன் என்றாலும் ஒரு காட்சி அல்லவா வந்து நிற்கிறது. வார்த்தை சொல்லும் உண்மை இங்கே மாறிவிட்டதே? இதை குரு மகான் வேதாத்திரி மகரிஷி உணர்ந்துதான், வேதாத்திரியம் தனிப்பாதையில் நடைபோட வழி வகுத்தார். உண்மையை, உள்ளது உள்ளபடி உணர்ந்தால்தான், விளக்கமும், நிறைவும் கிடைக்கும் என்றுதான் தன் வேதாத்திரிய பயிற்சிகளையும் வடிவமைத்தார். இன்றும் அது தொடர்கிறது.
வாழ்க வளமுடன்.
-