The solution and best advice to the husband and wife!
குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
குடும்பத்திலே அமைதி வேண்டுமென்றால், மூன்று ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதுமானது. அது அந்த கணவன் மனைவி இருவருமே செயல்படுத்தவேண்டும். அது 1. விட்டுக்கொடுத்தல் 2. பொறுமை 3. தியாகம் ஆகியன ஆகும். இவற்றை அந்த வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவேண்டுமா? என்று கேட்டால் ஆம். ஆனால் அதற்கு அவசியமிருக்காது. ஏனென்றால் தினமுமே நீங்கள் கணவனாகவும், மனைவியாகவும் இவற்றை செயல்படுத்தும்பொழுது, மூன்று மாதத்திற்குள்ளாக அது உங்களுக்குள்ளாக நிறைந்து, உங்கள் இயல்பாகவேகூட மாறிவிடும். பிறகு நீங்கள் இயல்பாகவே விட்டுக்கொடுத்தல், பொறுமை, தியாகத்தை கடைபிடிப்பீர்கள் என்பதுதான் உணமை.
நீங்கள் சாதாரணமாகப் பெண்மையைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனி மேல் இந்தப் பண்பாடு எல்லா இடத்திலும் வரவேண்டும்.
உலகத்திலேயே நட்பு மிகமிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே கணவன் – மனைவி நட்பைப் பற்றிச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்த விதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும், மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.
அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம், குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்
-