How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation? | CJ

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?


துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?


பதில்: 

பெரும்பாலான யோக சாதனை நிலையங்களில், துரியாதீத தவம் கிடையாது. அதுகுறித்து அவர்களுக்குத் தெரியாது. அதை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், துரியாதீத தவம் என்பது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தானாக வடிவமைத்து, தன் அன்பர்களுக்கும், இந்த உலகுக்கும் தந்த ஒரு அற்புதமான தியானமும் தவமும் ஆகும்.

யோகத்தில், ராஜயோகமாக கருதப்படும் நிலையில், சகஸ்ரதாரா என்ற 1008 இதழ் தாமரைக்கு ஒப்பாக சொல்லும், துரியம் என்ற தவ நிலைதான் உயர்வானதாகும். துரியத்திற்கு மேலான தவம் இல்லை என்பதுதான் இங்கே இருக்கும் நிலை. ஆனால் வேதாத்திரியத்தில், கூடுதலாக ‘துரியாதீதம்’ உண்டு. அது ஏன்? எப்படி? எதற்காக? என்பதெல்லாம் இன்னொரு பதிவாக பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் கேட்ட, கேள்விக்கு வரலாம்.

துவாத சாங்கம் என்பது ஓர் ஆதாரமோ, மைய சக்கரமோ, நிலையோ அல்ல என்பது தான் உண்மை. ஆனால் அதை அனுமானமாக, உளப்பூர்வமாக, உணர்வாக நாம் அறியலாம். இது யோகத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு நிலைதான் என்பதும் உண்மை. இந்த துவாத சாங்கம் குறித்து அனேக யோக சாதனையாளர்களும் சொல்லியுள்ளனர். பொதுவாகவே, ஜடப்பொருளோ, உயிர்ப்பொருளோ எடுத்துக்கொண்டால், அவற்றைச்சுற்றிலும் ஒரு அலை இயக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது நவீன விஞ்ஞானத்தாலும் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும். அந்த அலை குறிப்பிட்ட வண்ணங்களில் கூட இருக்கிறது என்று, அகச்சிவப்பு கதிர் காமெரா, புற ஊதா கதிர் காமெரா இவற்றின் வழியாக, ஒளிப்படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியான அலை இயக்கம், மனிதனுக்கும் இருக்கும்தானே? ஆம். அவனுக்குள்ளாக இயங்கும் ஆற்றலானது. அவனைச் சுற்றிலும், உடலுக்கு வெளியில், குறிப்பாக ‘ஒருஅடி தூரத்தில்’ வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அலை இயக்கம் சிலவேளைகளில் சுருங்கவும் செய்யலாம், கூடுதலாக விரியவும் செய்யலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இப்போது அது நமக்கு தேவையில்லை. இந்த ஒருஅடி தூர அளவிற்கு (12 அங்குலம் / 12Inch) அளவினால அலை இயக்கத்திற்கு, ஓரு புள்ளியை ‘மானசீகமாக’ அமைக்கிறோம். அதுதான் தலைக்குமேலே, உச்சியில் இருந்து மேல்நோக்கிய நிலையில் இருக்கும் ‘துவாத சாங்கம்’ என்ற நிலையாகும். நீங்கள் தவம் செய்யும் பொழுது, உங்கள் மனதாலேயே அந்த இடத்தை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். மிகச்சரியாக இடத்தை தீர்மானிப்பதும், அங்கே கவனத்தை நிலைப்படுத்துவதும், மனதை ஒன்றினைப்பதும் கடினமே. எனினும் தொடர்ந்து தவம் செய்யச்செய்ய அது உங்களுக்கு கைகூடும் என்பது உறுதி.

        முக்கியமாக, இதை ஆரா (Aura) என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆரா என்பது வேறுமாதிரியான தன்மை கொண்டதாகும்.

வாழ்க வளமுடன்.

-