How I can relieve from the suffering, difficulties, tired and disappointments in life?
வாழ்க்கை முழுவதும் சோர்வு ஏமாற்றம் துன்பங்கள் நிரம்பியுள்ளன. அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. மேலும் சிக்கலில் வருந்துகிறேன். மாற்றம் பெறுவதற்கு வழி என்ன?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கை முழுவதும் சோர்வு ஏமாற்றம் துன்பங்கள் நிரம்பியுள்ளன. அதிலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. மேலும் சிக்கலில் வருந்துகிறேன். மாற்றம் பெறுவதற்கு வழி என்ன?
பதில்*:
இதற்கெல்லாம் காரணம் பிறரிடம் கற்பனையாகவே எதிர்பார்ப்பதுதான் (Imaginary Expectation). கற்பனை என்றால் அளவு மீறிய ஆசை. அளவு மீறிய ஆசையை வைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும் இன்னதைத் தரவேண்டும் இன்ன அளவில் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அவரவர்களுக்கு அறிவு இருக்கிறது. அவர் அவர்களுக்குத் தேவையிருக்கிறது. அவரவர்களுக்கு வாழ்க்கைச் சுதந்திரம் இருக்கிறது. இவ்வாறுதான் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இருக்கிறது. நமக்குத் தெரிந்தவர்கள் அவ்வளவு பேரும் நமக்கு அடங்கி நமது அதிகாரத்திற்கு உட்பட்டு நாம் சொன்னதையே செய்து கொண்டிருப்பார்களா? செய்வதே இல்லை செய்ய முடியாது செய்யவும் மாட்டார்கள்.
நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து 'என் கணவர் இப்படித்தான் செய்ய வேண்டும் இதைத்தான் செய்ய வேண்டும், இந்த அளவில்தான் செய்ய வேண்டும். என் மனைவி இதைத் தான் செய்ய வேண்டும். இதற்கு மேல் செய்யக்கூடாது என்ற அளவில் நமது ஆசையை முன் வைத்து எல்லை கட்டி கற்பனையை உருவாக்கிக் கொள்கிறோம். நிகழ்ச்சிகள் (செயல்) என்று வரும்போது இவர்கள் கற்பனையாக எதிர்பார்த்து இருந்தார்களே அதற்கு ஒன்றுகூட ஒத்து வராது. என்றைக்கு அமைதியாக இருக்க முடியும்? முடியாது.
ஆகையால் எதிர்பார்ப்பதை அடியோடு விட்டு விட வேண்டும். அமைதி வேண்டும் மகிழ்ச்சி வேண்டும் நிறைவு வேண்டும் என்று சொன்னால் நான் சொல்லும் பயிற்சியைச் செய்து பாருங்கள். அதற்காகப் பணம் தேவையில்லை. மனம் தான் தேவை. தெளிவோடும் தீரத்தோடும் செய்ய வேண்டும்.
கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் மகனாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை. அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும். ஆனால் மனைவி என்ற முறையில் கணவன் என்ற முறையில், மகன் என்ற முறையில் தாய் என்ற முறையில் வயதில், பொருளில், ஆற்றலில், அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்? இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சிந்தனை செய்து அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும் என்பது இல்லை.
அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால் உங்களுக்கு வர வேண்டியது நிற்காது வர வேண்டியது சரியாக வரும். அப்படி வரும்போது எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே அதுவும் இதுவும் இடிபடாது. என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.
எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம் சோர்வு துன்பம் பகை பிணக்கு எல்லாம் வருகின்றன. நான் என்ன செய்ய வேண்டும்? என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.
மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம். முயன்றால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும் அமைதி கிடைக்கும். அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.
எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான். எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ? என்றுதான் இருப்பான். எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை. அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது. நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முதலாவது - எதிர்பார்த்தல் தவிர்ப்பது.
இரண்டாவது - பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.
மூன்றாவது - எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.
இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி குடும்பநலம் பெறலாம்.அப்போது உலகமே நம்முடையதுதான். பக்கத்தில் இருப்பவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அலுவலகத்தில் இருப்பவர்கள் எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.
வாழ்க வளமுடன்.
*பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
-