Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?
ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?
பதில்:
வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும்.
ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.
அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.
வாழ்க வளமுடன்.
-