வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்தை தடுப்பது யார் என்று எப்படி அறிந்துகொள்வது? அதை எதிர்கொள்வது எப்படி என்று சொல்லுவீர்களா?
பதில்:
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில், ஏதேனும் ஒருவகையில் நோக்கம் வைத்துக்கொண்டுதான் நகர்கிறோம், ஓடுகிறோம், முந்துகிறோம், வெற்றியை பெறவும் செய்கிறோம், அதோடு நின்றும் விடுவதில்லை, இன்னும் ஓடுகிறோம். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதில் இன்னொருவர் வந்து, நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. போட்டி மிகுந்த இவ்வுலகில், தகுதியும் திறமையும் யாருக்கு உள்ளதோ அவர் முன்னேறுகிறார் என்பதுதான் உண்மை. சிலவேளைகளில் குறுக்குவழியும், பணமும், சிலருடைய உதவியும் செயல்படும் ஆனாலும் அது நிலையாக இருப்பதில்லை என்பதையும் நாம் அறிவோம்.
நீங்கள் கேட்டபடி, உங்கள் முன்னேற்றத்தை தடுப்பது யார் என்று வெளியில் தேடுவதை விடவும், உங்களோடு இருக்கும் சிலரை காண்போமா? அவர்களை எதிர்கொண்டு அடக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். வெற்றிக்கனி உங்கள் முன்னால் என்பதை தனியாக சொல்லவேண்டியதும் இல்லை. யார் அவர்கள்?
அவர்கள்தான் உங்களுடைய பேராசை, சினம், கவலை. ஆம், உங்களுடைய குணங்கள்தான், உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான தடைகளை உருவாக்கி உங்களை அலைக்கழிக்கிறது. வாழ்வில் நன்மைதரும் வழிகளை அடைத்துவிடுகிறது என்று குரு மகான் வேதாத்திர் மகரிஷி சொல்லுகிறார். பேராசை என்பதற்கு அடிப்படையாக இருப்பது ஆசைதான். ஆனால் அதற்காக ஆசையை துறந்திட முடியாது. ஆசை இல்லாமல் வாழவும் முடியாது. வாழவேண்டும் என்பது ஆசைதான். நான் மட்டும் நன்றாக வாழவேண்டும் என்று நினைக்கும்பொழுதுதான், அது பேராசையாக வந்து நிற்கிறது.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டுமென்றால், உங்கள் தகுதி, திறமை, குறிப்பிட்ட துறையில் உங்களின் ஆர்வம், அதை அடைவதற்கான முயற்சி ஆகியன வேண்டும். உங்களைப்போலவே சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களை விடவும், ஒருபடி மேலே என்ற நிலையில், நீங்கள் இருக்கவேண்டியது முக்கியம். இந்நிலையில் நீங்கள் அவரை, உங்கள் முன்னேறத்தை தடுப்பவராக கருதமுடியாது. இந்த தவறான கருதலில்தான் சினமும், எப்படியாவது நான் வெற்றி பெறவேண்டும் என்ற பேராசையும், அது தோல்வியானால், கவலையும் வந்துவிடுகிறது. பிறகு அடிக்கடி இதையே நினைத்து, இயல்பான உங்கள் வாழ்க்கையையும் கெடுத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?
எனவே, இப்போது நீங்கள், உங்கள் முன்னேற்றத்தை தடுப்பவர்களை, வெளியில் தேடாமல், உங்களுக்குள் இருக்கின்ற பேராசை, சினம், கவலை ஆகிய மூன்றையும் கண்டு, அம்மூன்று தேவையற்ற குணங்களையும் திருத்தி அமைத்துக்கொள்ளுங்கள். எப்படி என்பதற்கு, குரு மகான் வேதாத்திரி மகரிஷியே வழியும் தருகிறார். பேராசையை நிறைமனமாகவும், சினத்தை தவர்த்திவிட்டு அதை மன்னிப்பாகவும், கவலை அறவே ஒழித்தும் பழகிக்கொள்ள வேண்டும் என்று அகத்தாய்வு எனும் தற்சோதனை கல்வியாக நமக்குத் தருகிறார். விரும்புவோர் மனவளக்கலை வழியாக கற்றுக்கொள்ளவும் செய்யலாம்.
வாழ்க வளமுடன்.
-