Any of yoga chakra bottom of the Moolathara? Can we meditate there? What kind of benefits on that?
மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா! மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
பதில்:
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும், தன்னளவில் ஒரு மையம் உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த அளவிலே இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும் கூட அதன் மையமாக ஒரு நிலை நிச்சயமாக உண்டு. அதுபோலவே எந்த ஜீவன்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் உடலின் நீளம் அகலம் அளவை எடுத்துக்கொண்டு வகுத்தால், அதன் மையத்திலும் ஓர் புள்ளியான நிலை உண்டு. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. அதுவே மூலாதாரம் என்று வழங்குகிறோம். இந்த விளக்கங்களின்படி, மூலாதாரத்திற்கு கீழே என்று சொல்லுவதற்கு இடமில்லை. நாம் நிமிர்ந்து நடப்பதால், மூலாதாரத்திற்கு கீழே என்று உங்களுக்கு சந்தேகம் எழுகிறதா? மேலே கீழே என்பதெல்லாம், நம்முடைய விளக்கத்திற்க்காத்தானே தவிர அப்படி எதும் இல்லை என்று சொல்லமுடியும். மேலும் பூவி ஈர்ப்பு ஒன்று இருப்பதால்தான் கீழே என்பது மேலே என்பதும் தோன்றுகிறது. வான் வெளியில், பிரபஞ்சத்தில் மிதக்கும், நாம் வாழும் பூமிக்கே மேலே கீழே என்று எப்படி, எதைச் சொல்லுவது? அதுப்போலவே மனிதனைத் தவிர்த்து, உணர்வன என்ற வகுப்பில் உள்ள, பாம்பு, பல்லி, முதலை, ஆமை இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லுவது?
மூலம் + ஆதாரம் என்பதுதான் மூலாதாரம் ஆகிறது. எப்பொருளுக்கும் ஓர் மையப்புள்ளி என்ற நிலைபாடு சரியானதுதான். எனவே மூலாதாரத்திற்கு கீழே என்ற சக்கரங்களும், ஆதாரமையங்களும் இல்லை என்பதே சரியானது.
உங்கள் கேள்வியில் உள்ளடக்கமாக இருக்கும், ஓர் சந்தேகத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டும். தெய்வீக திருவிளையாடல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகின்ற, உயிரின பரிணாமத்தில் இயல்பூக்கத்தின் வழியாகவே, தன்னை மேம்படுத்தி முழுமையான நிலைதான் மனிதன் ஆகும். மனிதன் என்ற நிலையில், அந்த தெய்வீகம் தன்னையே அறிந்து முழுமையும் செய்து கொண்டது. அப்படி இருக்கும்பொழுது, மூலாதரத்திற்கும் மேலே என்று சொல்லுவது தவறு, மூலாதாரத்திற்கு உயர்வான நிலை, ஆதார சக்கரங்களில் தான் நமக்கு, வேலை இருக்கிறதே தவிர கீழே இல்லை. நீங்கள் உங்களை ‘நான் யார்?’ என்ற தேடலின் வழியான உண்மையை அறிய, மூலாதார நிலை தாண்டிய உயர் நிலைகளை அடையவேண்டும்.
மூலாதாரத்திற்கு கீழே அதாவது, மூலாதாரத்திற்கு தாழ்வான நிலைகளில் நீங்கள், தனியாக ஒன்றும் செல்லவேண்டியதில்லை. அதுதான் வழக்கமாக நம் வாழ்நாளில் வந்து கொண்டே இருக்கிறதே? நம்மையும் பாடாய்படுத்துகிறதே? ‘என்னை மிருகமாக்கிறாதே’ என்று தானே நாம் மற்றவர்களிடம் சொல்லுகிறோம் / கத்துகிறோம். உண்மைதானே? இதற்கு வேதாத்திரி மகரிஷியே ஒரு விளக்கம் தருவார். பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கு, ஏதேனும் வாக்குவதம் முற்றி அடிதடியில் இறங்கினால், ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் மற்றவரை கடிக்கச்செய்வார், நகத்தால் பிராண்டுவார், கைகளால் தாக்குவார். இதெல்லாம் யார் செய்தது? நாம் பார்க்கின்ற காட்டுவிலங்குகள் செய்யும் செயல்கள் அல்லவா? இது ஏன் மனிதனிடம் வந்தது?
மனிதன் பரிணாமத்தின் வழியே, விலங்குகளின் மூலத்தைக் கொண்டவன். மனிதாக வந்தும் கூட அவனின், கருமையத்தில், விலங்கினத்தின் தன்மைகள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. அவன் அதிலிருந்து விலகி, மனம் இதனான மனிதனாக மாறிட, அவனின் உயிரின் இயக்க மையத்தை மாற்றி அமைத்து, உயர்த்திட வேண்டியது அவசியம். அதைத்தான் குண்டலினி தீட்சை என்று அழைக்கிறோம். மூலாதாரம், உயர்சக்தி மையம், மனதின் மூலமான காந்த மையம், வித்து சக்தியின் மையம் எல்லாமே கருமையம் என்ற ஒரே இடத்தில்தானே இயற்கையாக அமைகிறது. சராசரி மனிதன், நீங்கள் கேட்பது போல, கீழே தாழ்வான நிலையில் இருந்துதான் வாழ்கிறான். அவன் உயர்வடைய, சிறப்படைய, உண்மை உணர, தன்னையறிய, மூலாதாரத்தில் இருந்து உயர்வான நிலையைத்தான் தியானிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
யோகத்திற்கு வராமல், குருவின் வழியாக தீட்சையும் எடுத்துக்கொள்ளாத மனிதன் இயல்பாகவே தன்னை மறந்து, விலங்கினத்தின் பண்புகளை வெளிப்படுத்தியே வாழ்வான், வாழ்ந்துகொண்டு இருப்பான். இப்போது உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
வாழ்க வளமுடன்.
-