How the meditation is helping to our mind in yoga?
தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?
வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
மனம் உள் ஒடுங்கவும் பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது. மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று. மனதின் புலன் இயக்க வேகத்தை எல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்றுபடுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது.
எல்லைக்கு உட்படாத மனம் ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை பரம்பொருளை பரவெளியை உணர முடியும். அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் உள்ளதே அகத்தவம் (Simplified Kundalini Yoga - SKY) எனும் குண்டலினி யோகமாகும்.
அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும். அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்க முறையான உளப்பயிற்சி (Systematic Psychic Practice) அவசியமாகிறது. ஆன்மாவிற்கு மேல்நோக்கு வேகமூட்டும் தியானப் பயிற்சியை குருவின் மூலம் தான் பெற வேண்டும்.
அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால் ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல இந்த பிரபஞ்சத்தில் இந்த உலகில் நடப்பில் உள்ள உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது.
எனவே மனதினுடைய (Mind) இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும். இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னதமான உளப்பயிற்சியே குண்டலினியோகமாகும்".
வாழ்க வளமுடன்.
-