Is it perfect the explaining the spiritual truth through with the modern science? | CJ

Is it perfect the explaining the spiritual truth through with the modern science?

Is it perfect the explaining the spiritual truth through with the modern science?


இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது வேதாத்திரியம் இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடுதான் அன்பர்களுக்கு, பயிற்சியோடும் விளக்கிவருகிறது என்பதை யாவரும் அறிவார்கள்

உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளியமுறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனிதகுலத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது. அருட்பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல [பிரபஞ்ச]மாக விளங்குகிறது. 

இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் (Repulsive Force) ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் (Attractive Force) ஆற்றலும் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தகளமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.

இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision & Regularity) எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும் முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால்தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும். பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, உடல் உள்ளப் பயிற்சி முறையே எளியமுறைக் குண்டலினி யோகமாகும்.

இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமுமாகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன்பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள். உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்குபடுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள்.

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க வளமுடன்.