What is the purpose of building a temple of consciousness? | CJ

What is the purpose of building a temple of consciousness?

What is the purpose of building a temple of consciousness?


அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா! ஆங்காங்கே ஊர்களில் அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

        உருவ வழிபாட்டிற்கான கோயில்கள் ஆயிரமாயிரம் கட்டியிருக்கிறோம். நாம் அதிலெல்லாம் பயன் கண்டு வருகிறோம். ஆனால் அறிவுத்திருக்கோயில் உலகத் தொடர்பாக வந்த ஆன்மீகப் பயணத்திலேயே ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. பல கோயில்கள் விக்ரக ஆராதனைக்காக   கட்டப்பட்டிருந்தாலும் “கோயில்” என்பதன் அர்த்தத்தை அளிக்கக் கூடிய வகையில் அறிவுத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. 

இதனால் பக்தி மார்க்கத்திலுள்ள விக்ரக ஆராதனைகளெல்லாம் பயனற்றது என்று கொள்ள வேண்டாம், அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனென்றால் மனிதன் எந்த உருவத்தை வணங்கினாலும் சரி, தன் அறிவைக் கொண்டு வடிவெடுத்துத்தான் வணங்குகின்றான்.

இல்லங்களிலே ஒரு புரோகிதர் மூலமாக ஏதேனும் ஒரு சடங்கு செய்தாலும்  ஒரு விநாயகர் உருவையோ அல்லது வேறு உருவையோ வைத்து முதலில் “ஆவாகயாமி” என்று சொல்வார்கள். எனது அறிவை அதில் வைக்கின்றேன் என்பது அதன் பொருள். முடிவில் “யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யாமி” என்று கூறுவார்கள். எங்கே இருந்து கொண்டு வந்தேனோ அறிவை அந்த இடத்திலேயே கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன் என்பது பொருள். இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த முறையில் இறைவணக்கத்தை நடத்தினாலும் நம் அறிவைத்தான் விரித்து அவ்வுருவாக்கி, அக்குணமாக்கி வணங்குகிறோம் என்பது விளங்குகிறதல்லவா?

“கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ

கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே”

என்று ஒரு கவியில் கொடுத்துள்ளேன்.

நீங்கள் அறிவுத்திருக்கோயிலுக்கு வந்து எளியமுறை உடற்பயிற்சி கற்று உடல்நலம் பெற்றும்; எளியமுறைக் குண்டலினி தவம் பயின்று மனவளம் பெற்றும்; சித்தர்களின் கலையான காயகல்பம் பயின்று கருமையத் தூய்மையும் பெறலாம். மேலும் மௌனம், அகத்தாய்வில் கலந்து குணநலப்பேறு பெற்றும் சிறப்பாக வாழ்வதோடு வீடுபேறும் அடையலாம்.

வாழ்க வளமுடன்!!