I want to share my grievances with someone. How to solve this? | CJ

I want to share my grievances with someone. How to solve this?

I want to share my grievances with someone. How to solve this?


என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


பதில்:

உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய கேள்விதான். என்றாலும் கூட இதை தீர்க்க எளியவழி உண்டு. உங்களின் வயது சொல்லவில்லை, எனினும் எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. பருவ வயதினரும், நடுத்தர வயதினரும், வயது முதிந்தோர்க்கும் என்றவகையில், அவரவர்களுக்கான அளவில் மனக்குமறல்கள் உண்டு. முதலில் மனக்குமறல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். 

‘தான் நினைத்ததை, தான் விருப்பத்தை, தன்னுடைய நிலையை, தன்னுடைய திட்டத்தை, எதிர்பார்ப்பை சொல்லமுடியாமல், தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளுதல்’ என்பதுதான் மனக்குமறலாக நாம் கருதமுடிகிறது. இதன் அளவு அன்றாடம் கூடிக்கொண்டே போக, தன்னுடைய எந்தக்கருத்தும் செயல்படாது என்ற எண்ணமும் கூடி, மன அழுத்தம் அதிகமாகிவிடும். அந்த மன அழுத்தம், தான் வாழ்கின்ற வாழ்க்கையையே, அர்த்தமில்லாதாக மாற்றி, இனி ஒன்றுமில்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது. அந்த நிலையில்தான், யாரிடமாவது இதை சொன்னாலாவது ஒரு ஆறுதல் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து பிறரிடம் சொல்ல துடிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, எல்லோருமே இத்தகைய மன அழுத்தத்தில் இருப்பதால், ‘ஏற்கனவே என்கிட்ட நிறைய இருக்கு, நான் வேறே உன் மனக்குமறலை கேட்டு வாங்கிக்கனுமா?’ என்ற சிந்தனையில் தவிர்த்து விடுவார்கள். நகர்ந்துபோய்விடுவார்கள்.

இத்தகைய மன அழுத்தம் காரணமாகவே, போதைப்பொருட்களை நாடுவதும், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவதும் நிகழ்ந்துவிடும். பொது கவனத்தில் இருந்து விலகி, தனிமையும் கூடி, மன அழுத்தம் தாங்காமல், இனி வாழ்வதில் பிரயோஜனம் இல்லை என்ற அளவில், தற்கொலை முடிவுக்கும் வந்துவிடுவதுதான் சோகம்.

உண்மைத்தெளிவு வந்துவிட்டால், இதற்கெல்லாம் அவசியமில்லை. முக்கியமாக, ஒரு ஆறுதலாக யாராவது இருந்தால் நல்லது என்ற நிலை சிறப்பு. ஆனால் அது யார்? இந்த கேள்வி உங்கள் முன் நின்றால், நீங்கள் உங்கள் குருவை தேர்ந்தெடுங்கள். நம்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நம்முடைய குரு மட்டுமே என்பது உறுதியான உண்மை. யோகத்தில் இருக்கின்ற நமக்கு, குருவின் அக்கறையும், அணுசரனையும் உண்டு. எனவே மிக எளிமையாக, உங்களுக்கு ஆறுதல் தர குரு தயாராக இருக்கிறார்.

எப்போதுமே, உங்களுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதை கேட்கத்தான் வெளியிலே யாருமே தயாராக இல்லையே?! அதனால் குருவை மட்டுமே நாடுங்கள். தினமும் தவம் செய்து, அகத்தாய்வின் வழியாக, தற்சோதனையில் உங்களை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் மனக்குமறல்களை பட்டியலிடுங்கள். எதையும் விட்டுவிடாமல் எழுதுங்கள். ஒருவாரம், பத்து நாட்கள், ஒருமாதம் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளியே கொட்டி, பட்டியலில் கொண்டுவாருங்கள்.

மீண்டும் தவமும் அகத்தாய்வும் செய்து, எதனால்? ஏன்? எப்படி இதை கடக்கலாம்? அவசியமானதா? அவசியமற்றதா? விட்டு விலகவேண்டியாதா? என்று கேள்விகள் கேட்டு பகுதி பகுதியாக பிரித்து அலசுங்கள். உண்மை விளக்கம் பெறுங்கள். உங்கள் குரு, ஆசிரியரிடம் தொடர்பில் இருங்கள். அவர்களின் ஆலோசனையை கேட்டு மாற்றம் பெறுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். மன உறுதியோடு, இன்றே இந்த மாற்றத்தை துவங்கி வெற்றி காணுங்கள்.

வாழ்க வளமுடன்

-