கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?
பதில்:
இந்த உலகில் வாழும் எல்லோருக்குமே, அவரவர் நிலையில் பிரச்சனைகள் உண்டு. தனித்து வாழ்ந்தாலும், குடும்பமாக வாழ்ந்தாலும், சமூக அமைப்பில் இருந்தாலும் கூட இந்த பிரச்சனைகள், ஒவ்வொரு விதத்திலும் வந்துமோதும். அப்படியான உலகம் இது. பொருள்முதல்வாத உலகத்தில், நாமும் நம்மையறியாமல் சிக்கி திணறுகிறோம். நம் மூச்சு நிற்கும் வரை. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை எனினும், வாழ்கின்ற இந்த வாழ்க்கையிலேயே நல்லதை நோக்கி நகர்ந்து அல்லதை விடுவதற்கு வழிஉண்டு. தன்னளவில் பிரச்சனை இல்லாமலும், பிறருக்கு துன்பம் விளைவிக்காமலும் நாம் வாழ்வதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு வழியை உருவாக்கித்தருவதும், அதற்கு நம்மை தயார் செய்வதும்தான் யோகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இத்தகைய யோகத்தை உருவாக்கித்தந்த சித்தர்களின் நோக்கமும் இதுவேதான்.
மனம் இதனான மனிதன், தன்னளவில் குறுகி வாழ்ந்துவருகிறான் என்பதில் சந்தேகமில்லை. தான் தனது என்ற தன்முனைப்பில் வாழ்ந்து அதையே மற்றவர்களுக்கும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தன்னளவில் திருப்தியும், நிறைவும், அமைதியும் இன்றி தவிக்கிறான். தனிமனிதன் அமைதியில்தான் குடும்பமும், சமூகமும், உலகமும் அமைதியடையும் என்பதை மறவாதீர்கள். அப்படியான அமைதியை தந்து, அளவு முறையோடு உலகில் வாழவே யோகம் உதவுகிறது. வேதாத்திரியமும் அதையே வழங்கிவருகிறது.
உங்களுடைய வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால், மிகப்பெரும் இழப்பு என்பது உண்மைதான். ஆனால் அதை திருத்திட வழியே இல்லை என்ற தெளிந்த நிலையில், வேறுவழியே இல்லாமல் கைவிடுகிறேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதான். ‘அடடா, இப்படியெல்லாம் சொல்லலாமா? எப்படியாவது தொடரத்தான் வேண்டும் என்றல்லவா அறிவுரை கூற வேண்டும்’ என்று நினைக்கிறீர்களா? உண்மையை அறிந்தவர்களின் பார்வையிலும், அனுபவத்திலும் ‘பொய்யாக’ சொல்லமுடியாது. எது சரியோ? அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.
எனவே வாழ்க்கைச்சூழல், மனமாற்றம், பிரச்சனைகள் தாக்கம் இருந்தால் ‘கைவிட்டு விடுங்கள்’. அது குறித்து கவலை இல்லாமல், அந்த சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். எவ்வளவு காலத்தில் சரி செய்யமுடியுமோ, அதுவரை உங்களுக்கு ‘யோகம்’ வேண்டாம்.
வாழ்க்கை முழுவதுமே இனி தொடர்முடியாத சூழலா? சரி வேறு வழியில்லை என்றால் அதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். உங்களுக்காக, உங்கள் வழியில் வேறு யாரெனும், வாரீசாக, தலைமுறையில் உருவாகலாம். அவரின் முயற்சியில் உங்களுக்கும் விளக்கம் உருவாகும். அதுவரை அமைதியாக வாழ்க்கையை கடந்து செல்லவேண்டியதுதான். எந்த வருத்தமும் தேவையில்லை.
வாழ்க வளமுடன்
-