I am worried about who not yet join in yoga within my friend list, is it correct?
எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?
பதில்:
இந்த பொருள்முதல்வாத உலகில், பொருளையே வாழ்வின் துணையாகவும்,, உயர்வாகவும், மதிப்பாகவும், ஆதாயமாகவும் நினைத்து தன் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மனிதர்கள், தன் இறுதிக்காலத்தில் எதையுமே எடுத்துப்போவதில்லை என்று தெரிந்தும், வாழும் பொழுது பற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். ‘அதனால் என்ன? எனக்கு வேண்டுமய்யா’ என்ற நிலையில்தான் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்களை குறைசொல்லவும் முடியாது. அவர்களின் வாழ்வியல் அனுபவம் அப்படிப்பட்டது. எவ்வளவு கிடைத்தாலுமே, குறைமனதோடு, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும் நிலை அவர்களுடையது.
இப்படியான சக மனிதர்களிடம், ‘பக்தி என்ற நிலை கடந்து, உண்மையறிய யோகம் வாருங்கள்’ என்று அழைத்தால், வரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பக்தி போதுமானது. கடவுளே இல்லை என்பது கூட போதுமானதுதான். தன்னைமட்டுமே மையப்படுத்திக்கொண்டு வாழும் மனிதருக்கும், தன்னால் தான் எல்லாம் நிகழ்கிறது, தன்னறிவாலும், திறமையாலும், அனுபவத்தாலும், உழைப்பினாலும்தான் ‘நான் வாழ்கிறேன், நான் உயர்கிறேன்’ என்று நினைப்போருக்கு, பக்தியும், கடவுளும் தேவை இருக்காது. அவர்களிடம் நாம் அதை விளக்கிக் கொண்டிருக்கவும் முடியாது. கடவுள் என்பது கடந்து உள்ளே அறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட நாம் உண்மையை சொல்லமுடியாது. எல்லாம் எனக்குத் தெரியும் என்று மிகப்பெரிய தடுப்புச்சுவரை, நமக்கு முன்னே வைத்துவிடுவார்கள்.
இதனால், நீங்கள் அவர்மீது கொண்ட அக்கறையில், யோகம் குறித்து எத்தகைய விளக்கம் கொடுத்தாலும், அது அவர்களிடம் எடுபடாது. ‘உன் வேலையைப்பார்’ என்று சொல்லாமல் சொல்லிவிடுவார்கள். நமக்கோ, அவர்கள்மீது வருத்தமும், கவலையும் எழுவது உண்மைதான். வேறுவழி என்ன?
நீங்கள் அவரை எப்படியாயினும், விளக்கம் பெற வைக்கவேண்டும் என்று விரும்பினால், நீங்களே ‘யோகம்’ குறித்த விளக்கத்தை அளிக்காதீர்கள். இங்கே, இப்படி ஒரு அறிவுத்திருக்கோவில் என்ற ஒன்று இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரிய கருத்துக்கள் இங்கே விளக்கம் தரப்படுகிறது. ஏதேனும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால், வந்து பாருங்கள். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் முடிவில் இருக்கலாம்’ என்று சொல்லிப்பாருங்கள். அவர் தன்னளவில் மாறுதல் பெற வழி உண்டு. அப்படியும்கூட ஒரு மாற்றமும் இல்லை என்றால், அவரை நீங்கள் யோகத்திற்கு அழைப்பதில் இருந்து கைவிட்டுவிடுங்கள். இனி ஒருபோதும் யோகம் குறித்து அவரிடம் பேசாதீர்கள், அதன் அருமை, பெருமைகளை சொல்லாதீர்கள். ஒரு நண்பராக உங்களால் அவருக்கும், அவரால் உங்களுக்கும் என்ன நன்மை கிடைக்குமோ அதை வழிநடத்துங்கள். அது போதும். இதற்காக நீங்கள் வருந்தவேண்டாம், கவலைப்படவேண்டாம்.
அவருக்குள்ளாக இருக்கிற கர்ம வினைப்பதிவுகளின் தாக்கம் குறையும் பொழுது, தானாகவே யோகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகும். அது அவருக்கும் கிடைக்கலாம். அவருக்குப்பின் அவரின் வாரிசுகளில் யாருக்கேனும் கிடைக்கலாம். அதை காலம் முடிவுசெய்யும். அதன் போக்கில் விட்டுவிடுங்கள். வேறுவழியில்லை. இதில் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது அல்லவா?! கட்டாயப்படுத்தினாலும் அவர், வழக்கமான வாழ்விலுக்கு உடனே வந்தும் விடுவார்.
வாழ்க வளமுடன்
-