கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் நிறைவு பெறவேண்டுமானால், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான் என்பது சரியானதுதானா?
பதில்:
இந்த கேள்வியை சிறந்ததாக கருதுகிறேன். இந்த உலகத்தில், பக்தியை கடந்த, அதன் உண்மையான ‘நான் யார்?’ என்ற கேள்வியை துணைகொண்டு உண்மை அறிய, அதை ஆராய்ச்சி செய்ய, வேதாத்திரியம் போல பலதரப்பட்ட யோக வழிமுறைகளும், யோகம் அல்லாத உண்மையும், விடுதலையும் பெறும் அமைப்புக்களும், பக்தியோடு கூடிய ஆன்மீக நிலையங்களும் இருகின்றன. அதேபோல, சித்தர்களின் வழியிலான யோகமுறைகளும் இன்னமும் தொடர்கிறது என்பது உண்மை.
உங்களுக்கு விருப்பமான ஓர் வழியை, நம்பிக்கையான ஓர் வழியை, ஆராய்ந்து தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது. வேதாத்திரியம் என்னுடைய வழி என்பதால், நான் உங்களை ‘கட்டாயப்படுத்த முடியாது’. அதே வேளையில், இன்னொன்றை குறை சொல்லவும் முடியாது. ஆனால் ஓவ்வொரு யோக முறைகளுக்கான உண்மை, நோக்கம், பயிற்சி, இவையெல்லாம் ஆராய்ந்து உண்மை சொல்வதில் தவறில்லை. அது நிச்சயமாக எது சரியானது? என்ற உங்கள் தேர்வுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?
வேதாத்திரியத்தின் பாடத்திட்டம், அந்ததந்த பயிற்சிகளின் வழியாக, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஆசிரியர் நிலை அடையலாம். பிறருக்கு தீட்சை வழங்குதலும், குறிப்பிட்ட பாடங்கள் நடத்துவதற்கும் அனுமதி தரப்படுகிறது. ஆசிரியர் பயிற்சியின் மேல் நிலையில், குறிப்பிட்ட தவ மையம் மட்டுமில்லாமல், எந்த தவமையத்திற்கும் சென்று பயிற்சியும் பாடமும் நடத்த தகுதி கிடைத்துவிடுகிறது. இத்தகைய எளிமை வேறெந்த யோக மையத்தில் இருப்பதில்லை என்றே கருத இடமிருக்கிறது.
இப்படியாக, எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கும் கற்றுக் கொடுத்தபிறகுதான், யோகத்தில் நிறைவு வருமா? என்பதுதான் உங்கள் கேள்வி. இதில் இன்னொரு முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது. நீங்கள், எல்லாவிதமான பயிற்சிகளை கற்றுக்கொண்டு அவைகளை பிறருக்கு கற்றுத்தரும் முன்பாக, அதில் நீங்கள் ஆழ்ந்த உண்மையை, தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இதை உதாரணமாக சொல்லுவதென்றால். முப்பத்தி மூன்று வயதில் முழுவதுமாக தன்னை யோகத்தில் இணைத்துக்கொண்ட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான், தன் அனுபவத்தை கவிகளாகவும், கட்டுரைகளாகவும், திட்டமாகவும், பாடங்களாகவும் வெளிப்படுத்தினார். அதுவரையிலும் தான் அறிந்து கொண்டதை, ஆராய்ச்சி, ஆராய்ச்சி எனவே காலத்தை செலவு செய்தார். இதில் அவரின் கண்ணும் பாதிக்கப்பட்டது, உடலும் பாதிக்கப்பட்டது என்று அவரே தன்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வார்த்தையாக சொல்லுகிறார்.
எனவே நீங்களும் அத்தகைய, ஆராய்ச்சியில் இறங்கி, உண்மையை அறிந்து, அந்த தெளிவினில் பிறருக்கு தீட்சையும், பாடமும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். என்றாலும்கூட அதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்
-