கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?
பதில்:
வாழும் மனிதர்களாகிய நமக்கு, பிரச்சனைகள் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம்? என்பதில்தான் அது உண்மையிலேயே பிரச்சனையா? பிரச்சனையாக தோன்றுகிறதா? கடந்துவிடக் கூடியதா? என்பது நமக்குத் தெரியவரும். பெரும்பாலானவர்கள் அதை ஏற்று, அதில் சிக்கிக் கொள்வதுதான் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. சிலர் அந்த பிரச்சனையில் சிக்கி, அதை சரி செய்யமுடியாமல் தோற்றுப்போய், வாழ்க்கையில் இருந்து விலகி ஓடிவிடுவதும் உண்டுதான். அதுதான் மிகப்பெரும் சோகம்.
இந்நிலையில், குழந்தையாக இருந்தால், நல்லதுதான் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் இக்கால குழந்தைகளுக்கும் அன்றாட சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குரிய அளவில் அவை இருக்கின்றன என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடுவார்கள். அப்படியானால், பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாத வயது எது? யார் அவர்கள்? என்றால், மூன்று வயது நிரம்பிடாத குழந்தைகள் தான் எனலாம். ஏனென்றால், அக்குழந்தைகள் மூன்று வயதுவரையிலும், தன்னியல்புக்கு வருவதில்லை. என்றாலும் கூட சில குழந்தைகள் விதிவிலக்கு.
இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? என்று கேட்டால், அதற்கான பதில் நிச்சயமாக உதவிடும். உதவிக்கொண்டும் இருக்கிறது எனலாம். இதை நான் உறுதியாகவே சொல்லுகிறேன். அப்படியானால், அதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது உங்களின் இன்னொரு கேள்வி. இதோ அதற்கும் பதிலை காணலாம். குருவருளின் உதவியை நாடும் நீங்கள், ஆன்மீக சாதனையில் உங்களை இணைத்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குரு அவர்கள் உங்களுக்கு வழங்கிய, யோக பயிற்சிகளை அன்றாடம் செய்துவருவீர்கள் என்றும் நினைக்கிறேன். அதை தொடர்ந்து செய்துவாருங்கள். உங்கள் பயிற்சிகளில் மனம் லயித்து செய்வதை உறுதி செய்யுங்கள். வெறுமனே கண்மூடி நிமிடங்களை கடத்துவதை விட்டுவிடுங்கள்.
தவம் செய்ய அமரும்பொழுதே, உங்கள் மனம், உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலில் இருந்தும், அந்த நேரம் மட்டுமாவது விலகி நிற்கிறதா? அதிலேயே உழல்கின்றதா? அந்த பிரச்சனைகளையே எடுத்துக்காட்டிக் கொண்டே வருகிறதா? இதை எப்படி நான் தீர்ப்பேன் என்று எண்ணி வருந்துகிறதா? இந்த தவம் செய்து என்ன ஆகப்போகிறது என்று உங்களை திசை திருப்புகிறதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தால், தவம் இயற்றாமல், சிறிது நேரம் அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து மனதை இயல்பாக்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகன்று, வேறு இடத்திற்கு செல்லுங்கள். அடிக்கடி உங்களைச் சுற்றிலும் ‘நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’ என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இதன் வழியாக மனம் விடுபட்டு, இயல்பாக இருக்க வழி கிடைக்கும். அதன் பிறகு தவம் செய்யலாம்.
தவம் இயற்றும் பொழுது, குருவை நினைந்து போற்று மகிழுங்கள். அவரிடம் சரணாகதி அடையுங்கள். நீங்களாக எதும் கேட்காதீர்கள். நீங்களாக எதும் சொல்லியும் புலம்பாதீர்கள். அமைதியாக உள்முகமாக, குருவை நினைந்து வணங்குங்கள். தவமும் இயற்றுங்கள்.
தவமுடிவில், ‘அருட்பேராற்றலின் கருணையினால், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்’ என்பதை மனம் ஒன்றி சொல்லுங்கள். வெறும் வார்த்தையாக இல்லாமல், ஒப்பிப்பது போலவும் இல்லாமல், அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள். நாளடைவில், குருவருள் உங்களுக்கு உதவுவதை உணர்வாகவும் பெறலாம். மேலும் உங்களுக்கு ஆலோசனை தேவையென்றால், நேரடியாகவும் என்னை அணுகலாம்! நானும் உங்களை குருவோடு, இறையருளோடு இணைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-