கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?
பதில்:
சித்தர்களின் வழிவந்த பரம்பரையினர் உலகெங்கும் சிதறிப்போன பிறகு, பல்வேறு இடங்களில் ஆங்காங்கே இருந்தவர்கள், அவர்களுக்கு தெரிந்த காயகல்ப யோக பயிற்சிகளை, மக்களின் நல்வாழ்வுக்காக கற்றுக்கொடுத்தனர். அதை பார்த்த வேறுசிலர் அந்த பயிற்சியின் உண்மையை புரிந்து கொள்ளாமல், காயகல்ப பயிற்சியை, காயகல்ப மருந்தாக மாற்றி, மக்களின் ஆர்வத்தை தூண்டி, மருந்து வியாபராமாக்கி வாழ்ந்து வந்தனர். அந்த நிலையில்தான் காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்ற கருத்து பல நூறாண்டுகளாக நிலைத்துவிட்டது.
காயகல்ப யோக பயிற்சி, அதன் சிறப்பு, பயிற்சி முறை என்று பலதரப்பட்ட உண்மைகளை, கவி வடிவில் குறிப்பாக எழுதி வைத்திருந்தாலும், உண்மையை மறைத்து, உளப்பூர்வமாக அறியும்வகையிலும், ஒரு குருவின் மூலமாகமட்டுமே கற்றுக்கொள்ளும் வகையிலும் அமைத்துவிட்டார்கள். அதனால் மொழிவல்லுனர் ஒருவர் படித்தால் கூட முற்றிலும் உண்மையை அதில் அறியமுடியாத நிலைதான் உள்ளது. என்றாலும், சித்தர்களின் வழியில் வந்த பலருக்கு, ஏதோ ஒருவகையில் இந்த காயகல்ப யோகபயிற்சி சொல்லித்தரப்பட்டு வந்தது.
ஆனால் அதற்கு நீண்டகாலம் குருவிற்கு தொண்டு செய்யும் சீடனாக இருக்க வேண்டிய நிலையும் தேவையானது. என்றாலும் கூட அந்த குருவிற்கு எந்த அளவு, பயிற்சியின் உண்மை தெரியுமோ? அதே அளவுதான் சீடனுக்கும் பகிரப்படும் நிலை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக, காயகல்ப பயிற்சி அதன் உண்மையை இழந்து, ஆண் பெண் நீடித்த போக இன்பத்துக்கான ஒரு பயிற்சியாக உலகில் இருந்துவந்தது.
குரு மகான் வேதாத்திரிக்கும், காயகல்ப பயிற்சி குறித்த ஐயப்பாடும், குழப்பங்களும் இருந்துவந்தது. எத்தனையோ சித்தர்களின் குறிப்புகளை ஆய்வு கண்டும், முழுமையான பயிற்சி வடிவம் கிடைக்கவில்லை. என்றாலும்கூட அதன் அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டார். உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று, அங்குள்ள ஆன்மீக அமைப்புகளில் உள்ளவர்களை சந்தித்து உண்மை அறிந்து, அவற்றை தன் ஆராய்ச்சியோடு ஒப்பிட்டு, ஒழுங்கு செய்து, பயிற்சியாக வடிவமைத்தார். அதுவே இப்போதுள்ள ‘வேதாத்திரிய காயகல்ப பயிற்சியாக’ மலர்ந்துள்ளது.
வாழ்க வளமுடன்