கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?
பதில்:
பெரும்பாலான அன்பர்களின் கருத்தாகவே இதை எடுத்துக் கொள்ளமுடியும். சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லிக்கொள்ளாமல் தனக்குள் புலம்பித் தவிப்பார்கள். சிலர், என் தலைவிதியே என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நாம் எதைச் செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறதா? அது உண்மைதானா? பார்க்கலாம்.
உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ‘முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுதான் அது. உங்களுடைய எந்த ஒரு செயலிலும், அதனுடைய தொடக்கம் சரியாக அமையவில்லை, மனம் ஒப்பவில்லை, குழப்பத்தோடு தொடங்குகிறது என்றால், அந்த செயலும், அதனுடைய விளைவும் நிச்சயமாக பிரச்சனைக்குரியதாகவோ, துன்பம் தருவதாகவோதான் அமையும் என்பது உறுதி. இயற்கையின் எந்த ஒரு செயலிலும், அதன் விளைவிலும் ஒற்றுமை, நேர்மை, ஒழுங்கு, காலம் என்பது அடங்கியிருக்கிறது. இதில் எல்லாவற்றிலுமே ‘துன்பம்’ எழுவதில்லை. ஆனால் நாம்தான் துன்பம் மட்டுமே எழுகிறது என்று புலம்பித்தவிக்கிறோம்.
இங்கே இரண்டு முக்கிய குறிப்புக்களை காணலாம். 1) நாமாக ஏதேனும் விளைவை நினைத்துக்கொண்டு, நம்முடைய செயலை செய்வது. 2) இதைச் செய்தல் இன்னதுதான் விளையும் என்ற எதிர்பார்ப்போடு செய்வது ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எப்படி ஒரு செயலை செய்வதற்கு ஆயத்தமாகிறீர்கள்? என்பதில்தான் உங்களுக்கான பதில் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை நீங்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பாகவும், சிந்தனை செய்துகொள்ளுங்கள். ‘இந்த இரண்டும் என்னிடம் இல்லை’ என்ற தெளிவான நிலையில் செயலை செய்ய தயாராகுங்கள்.
அடுத்ததாக, எப்போதும் ஒரு செயலை அனுபவமாக செய்யுங்கள். அனுபவம் இல்லை என்றால், அந்த செயலை செய்துவிட்டு, அதையே அனுபவமாக பெறுங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விளக்கம் பெற்று, தெளிவாக, கவனமாக, சிறப்பாக அடுத்தபடி செய்யுங்கள். இந்த இடத்தில் அந்த விளைவு தவறாக, துன்பமாக இருக்குமானல், அதை உடனடியாக திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தும் அதேபோல செய்யாதீர்கள்.
எந்த ஒரு செயல் செய்தாலும், உங்கள் உடல், மனம் விழிப்புணர்வோடும், ஒன்றுக்கொண்டு தொடர்புடையதாகவும் செய்யுங்கள். ஏனோதானோ என்று செய்யாதீர்கள். அசால்ட் என்று சொல்லப்படும் நிலையிலும் அச்செயலை செய்யாதீர்கள். மேற்கண்ட விளக்கங்களை நீங்கள் தெளிவு செய்துகொண்டால், ‘என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?’ என்று கேட்பதற்கு இடமிருக்காது.
வாழ்க வளமுடன்
-