What would happen if my self-realization did not take place within my life?
வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?
பதில்:
நல்ல புரிதல் உள்ள கேள்வியாக கருதுகிறேன். பொதுவாகவே எல்லோருக்கும் இந்த கேள்வி உண்டு எனினும், சிலர்தான் வாய்விட்டு கேட்பார்கள். அத்தகையவர்களுக்கும் இந்த பதில் உதவும் என்பது உண்மை. இந்த கேள்வி எழுந்துவிட்டால், அவர்களுக்கு ஒரு திசை மாற்றம் ஏற்பட்டுவிடும். அதாவது அவ நம்பிக்கை. ‘இனிமேலாவது தன்னையறிவதாவது’என்று கைவிட்டுவிடுவார்கள். மேலும் இதுவரை வாழ்ந்தவர்கள் எல்லோரும், தன்னையறிந்தா போய்ச்சேர்ந்தார்கள்? இல்லையே? என் குடும்பத்தில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்தவரையிலும், அறிந்தவரையிலும் யாருமில்லையே? அதனால் எனக்கென்ன அக்கறை வந்ததது? அவர்களைப்போலவே நாமும் போய்ச்சேர்வோம். என்ன குறை ஆகிவிடப்போகிறது? போகும் காலம் வந்தால் போய்த்தான் சேரவேண்டும், நிலைத்து நிற்கவா முடியும்? என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, வழக்கமான பக்தியிலேயே தன்னை கரைத்துக்கொள்வார்களே தவிர, யோகத்தின் பக்கம் வரமாட்டார்கள்.
உண்மையிலேயே யோகம் யாருக்கும் கட்டாயமில்லை, ஆனால் யோகம் தான் தனையறிதலுக்கான சிறந்த தீர்வு. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும்படி, பிறப்பு நீண்டுகொண்டே போகும். இங்கே பிறப்பு நீளும் என்றால் அவரே பிறந்துகொண்டே வருவார் என்று நினைத்துவிடக்கூடாது. அது அறியாமை. ஒருவர் உலகில், பிறந்து வாழ்வில் மறைந்துபோனாலும், அவரின் கர்மா என்ற வினைப்பதிவு, அவரின் குழந்தை, வாரிசுகள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் பிறவித்தொடர் ஆகும். அது அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு தலைமுறையில், யாரெனும் ஒருவர் யோகத்தின் வழியில் தீர்க்கும் வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அது இயற்கையின் வினை விளைவு நீதியும் ஆகும்!
ஆனால், யோகத்தின் உண்மை அறிந்து, தங்களை இணைத்துக்கொண்டு, குருவின் வழிகாட்டலோடு பயணிக்கும் ஒருவருக்கு காலத்தால், எத்தகைய கர்ம வினைப்பதிவு சுமையாக இருந்தாலும் கூட அது களைந்து, தூய்மைக்கு வழி பிறக்கும். இதற்கு தேவை, ஆர்வம், முயற்சி, பயிற்சி, செயலாக்கம், ஆராய்ச்சி என்பதுதான். எனவே, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழுமா? என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது? நீங்கள் யோகத்தில் உங்களை இணைத்துக்கொண்ட பிறகு.
யோகத்திற்கு வராமலேயே, முடியுமா? நிகழுமா? என்று கேட்பது நியாயமும் இல்லை. ஒருவேளை, யோகத்தில் இணைந்துகொண்ட பிறகும், தவம் தியானம் செய்துவரும் பொழுதும், வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுமானால். நீங்கள் யோகத்தில் பயணிப்பதால், உங்கள் முயற்சி, செயல், ஆராய்ச்சி என்ற அளவில் அதில் மாற்றம் நிச்சயமாக நிகழந்திருக்கும். எனவே இங்கே வருத்தமும், கவலையும் பெறவேண்டிய அவசியமில்லை. அந்த வழியில் இருக்கும் அடுத்தவற்றை, உங்கள் வழியில் வந்த, வரும் வாரீசுகள், தலைமுறைமுறையினர் தீர்த்துவைப்பார்கள் என்பது உறுதி, மாற்றுக்கருத்தும் இல்லை.
வாழ்க வளமுடன்.
-