I am sad that there is no one to comfort me. Who will give me a shoulder?
என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?
பதில்:
உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நாம் பிறந்து வளர்ந்து வரும் பருவ காலத்தில், எதைபற்றியும், எதுகுறித்தும் கவலைப்படாது வாழ்ந்த காலம் உண்டு. ஆனால், குடும்பத்தில் சூழல்காரணமாக, நமக்கு கிடைத்த வாய்ப்புக்கள் வழியாக, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, வெளியில் சொல்லமுடியாத துயரம் நம்மை ஆழ்த்திவிடும். உண்மையில் அதை விட்டு விலகிட முடியாத அளவில் சிக்கி இருப்போம். ஏதோ ஒருவகையில், மற்றவர்கள் என்னால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணமும் அதில் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் மேலும்மேலும் சிக்கல் நிறைந்து, என்னசெய்வது என்று புரியாமல் காலம் கடத்திவருவோம்.
அத்தகைய காலகட்டத்தில், நாம் தனிமனிதனாக அல்லாமல், நமக்கென்று ஒரு குடும்பம், நம்மை எதிர்பார்த்து சில உறுப்பினர்களும் இருப்பார்கள். இதற்கிடையில் நமக்கு ஆறுதல் சொல்லவோ, ஏதேனும் உதவி செய்தோ, நல்லவார்த்தைகள் சொல்லி ஊக்கப்படுத்தவோ, நம்முடைய பெற்றோர்களும் இருக்கமாட்டார்கள். ஆம் அவர்கள் வயதாகி, முடியாத சூழலில் இருக்கலாம். காலத்தில் நிறைவாகியும் போயிருக்கலாம். நம்மோடு இருப்பவர்களும், நமக்கான எந்த உதவியும், ஆறுதலும் தரமுடியாத சூழலில் இருக்கலாம். அவர்களை சொல்லியும் குறையில்லை. அவர்களுக்கும் நம்மைப்போலவே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்தானே?
இப்போதைய இந்த சூழலில், நமக்கு உதவி எதுவும் கூட தேவையில்லை. ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட யாருமில்லையே என்பதுதான் மிகப்பெரும் பிரச்சனை. ஆனால் ஓவ்வொருவருமே, அவரவர் உலகில் தனித்து, ஒரு எல்லையோடு வாழ்ந்து வருவதால், யாரையும் யாரும் தன்னிடத்தில் அண்ட விடுவதில்லை. ‘நீ உன் எல்லைக்குள் இரு, நானும் என் எல்லைக்குள்தான் இருப்பேன்’ என்று சொல்லிவிடுவார்கள். இதையும் நாம் குறை சொல்லமுடியாது. ஒருகாலத்தில் நாம் இப்படித்தானே சொல்லிக்கொண்டிருந்தோம் இல்லையா? நிச்சயமாக இல்லை என்று மறுக்கமுடியாதுதானே?!
அப்படியானால், என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்? என்று நீங்கள் கேட்டதற்கு வழி என்ன? யோகத்தின் வழியாக நம்மை உயர்த்த விரும்பும், குரு தான் நமக்கு உதவக்கூடியவர். நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை. ‘அருட்தந்தை’ என்று அழைப்பதில் இருக்கக்கூடிய அர்த்தமும், உண்மையும் அதுதான். ஒரு தந்தைக்குத்தான், வாழ்வியல் குறித்த முழு அனுபவம் இருக்கும். தாய் நம்மை, உள்முகமாக, மனப்பூர்வமாக ஆறுதல் தரக்கூடியவள்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், வாழ்கின்ற வாழ்க்கையில் பெறக்கூடிய துன்பங்களுக்கு தகுந்த ஆறுதல் தந்து நம்மை தேற்றக்கூடியவர் ‘தந்தை’ மட்டுமே.
குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை, ‘அருட்தந்தை’ என்ற நிலையில் ஏற்க தயாராகுங்கள். அவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் பெறுங்கள். ‘நான் இருக்கிறேன்’ என்றுதான் அவர் நம்மிடம் சொல்லியிருக்கிறார். சூட்சுமமாக, வான்காந்த வெளியில் கலந்திருக்கிறார். உங்களுக்கு ஆறுதல் தர, உங்கள் குருவை விட வேறு யார் வேண்டும்? இனி கவலையும், துன்பமும் எதற்கு? மிகச்சிறந்த வடிகாலாக, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி இருக்கிறார்.
வேதாத்திரியத்தில் இணையாதவர்களுக்கு, அவரவர் அளவில் அவர்களுடைய குருவை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே குருவின் தோள் சாயுங்கள். ஆறுதல் பெறுங்கள். எல்லாம் கடந்து விட்டு விலகி, வாழ்வில் உயர்ந்து, மெய்யுணர்வு பெறுங்கள். வாழ்க்கையின், பிறப்பின் கடமையில் சிறந்து விளங்குங்கள்.
வாழ்க வளமுடன்
-