It is true the Nature power will provide our request?
கேட்பதை வழங்க இயற்கையாற்றல் தயாராக இருக்கிறதா? அது உண்மைதானா?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கேட்பதை வழங்க இயற்கையாற்றல் தயாராக இருக்கிறதா? அது உண்மைதானா?
பதில்:
கேட்பது என்பது மனிதர்களிடம் மட்டுமே இருக்கின்ற குணாதசியம் என்று நிச்சயமாக சொல்லலாம். இந்த கேட்பது என்பது செயலின் முதல் நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள முடிவோம். அப்படியென்றால் கேட்பதற்கு முன்னதாக என்ன இருந்திருக்கும்? இருக்கவேண்டும்? என்றால், ‘தேவை’ என்றொரு நிலை இருந்தாகவேண்டும். அந்த தேவை என்பதற்கும் சில அளவு முறை உண்டு என்றும் சொல்லலாம். அதன் அடிப்படையில்தான் அந்த தேவையான கேட்கின்றவருக்கு, கேட்கின்ற நமக்கு உபயோகமாக இருக்கும் என்று சொல்லலாம். இப்பொழுது அந்த தேவை, உண்மையிலேயே தேவைதானா? என்ற ஒரு துணைக்கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரும்பாலோர் இந்த துணைக்கேள்வியை கைவிட்டுவிடுவார்கள்.
தேவை என்பது இயல்பாக எழும் உணர்வுதான். அதில் குறையொன்றும் இல்லை. உண்மையிலேயே தேவைதானா? என்று சிந்திக்கக்கூடிய ஆற்றல் நம்மிடம் உண்டு, மேலும் தேவையை நிறைவேற்றக்கூடிய வழிகளும் நமக்கு தோன்றிவிடவும் கூடும். அதுதானே ஆறாவது அறிவின் சிறப்பு. அந்த தேவையை எப்படி நிறைவேற்ற முடியும்? யாரால்? எந்த சூழலில்? என்றெல்லாம் கூட ஆராய்ந்து தெளிவாக விளக்கமும் பெற்றுக்கொள்ள முடியும். சிறிய ஆய்வு செய்தாலே போதுமே. இந்த தேவை குறித்து, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும் பொழுது, ‘இயற்கையாலும், பேராற்றலாலும். பேரறறிவாலும் மனிதனுக்கான தேவைகள் எல்லாமே நிறைவேற்றப்பட்டுள்ளது, கேட்பதற்கு ஒன்றுமே இல்லை’என்றுதான் சொல்லுகிறார்.
ஆனால், நமக்கோ அப்படியெல்லாம் விட்டுவிட முடியவில்லையே, ஏதேனும் தேவை மிச்சம் இருந்துகொண்டே அல்லவா உள்ளது? அதனால்தான் கேட்பது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். உண்மையாகவே, நாம் கேட்பதை வழங்க இயற்கையாற்றல் தயாராகவே இருக்கிறது என்பதே உறுதியானது. என்றாலும் கூட, அது நமக்கு தேவையானதா? என்ற துணைக்கேள்விக்கு, நாம் கேட்பது பதிலை தருவதாக இருக்கவேண்டியது அவசியம். தேவை என்பதை விட விருப்பத்திலும், ஆசையிலும் கேட்கிறேன் என்றால் அங்கேதான் சிக்கல் உருவாகிவிடுகிறது. அப்படி விருப்பத்திலும், ஆசையிலும், கூடுதலாக பேராசையிலும் கேட்டால், அது தடை ஆகிவிடும், தாமதமாகிவிடும், சிக்கலை உண்டாக்கிவிடும். வந்தாலும் கூட நிலைத்து நிற்காது என்பதாக நாம் குறிப்பிட முடியும்.
இந்தக்காலத்தில் PRAYER கூட BEGGING என்று மாறிவிட்டதுதானே?!
உண்மையான தேவையின் வழி கேட்பதை வழங்க, இயற்கையாற்றல் தயாராக இருப்பதால், உங்கள் தேவை என்ன? அதன் அளவு என்ன? முறை என்ன? அவசியம் என்ன? என்ற துணைக் கேள்விகளை ஆராய்ந்து விடையை குறித்து வைத்துகொண்டு கேளுங்கள். நீங்கள் உறுதியாக பெறுவீர்கள்.
வாழ்க வளமுடன்.
-